இந்த நாளில் அன்று(20.03.1972)பஸ்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - சட்ட சபையில் விவாதம்
பஸ்களில் பெண்மணிகளுக்கு எங்கே இடம் ஒதுக்குவது? முன் பகுதியிலா, பின் பகுதியிலா என்பது குறித்து இன்று சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த நாளில் அன்று
(20.03.1972)
பஸ்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - சட்ட சபையில் விவாதம்
Advertisement
பஸ்களில் பெண்மணிகளுக்கு எங்கே இடம் ஒதுக்குவது? முன் பகுதியிலா, பின் பகுதியிலா என்பது குறித்து இன்று சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டன.
பஸ்களில் பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு பற்றிய கேள்விகளுக்கு பஸ் போக்குவரத்து மந்திரி எஸ்.ராமச்சந்திரன் பதிலளித்துக்கொண்டிருந்தார்.
ஆணும் பெண்ணும் சமம் என்று சமத்துவம் பேசப்படும் இந்த நாளிலும் பெண்களுக்கு பஸ்ஸில் தனி இடம் ஒதுக்கி தனிமைப்படுத்தும் முறை தேவைதானா? எனவே இந்த ஒதுக்கீடு முறை ஒழித்துக்கட்டப்படுமா? என்று பலத்த சிரிப்புக்கிடையே கோவை செழியன் (திமுக) கேட்டார்.
ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், அவர்கள் இரு வேறு உலகத்து இயற்கை என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் என்று மந்திரி ராமச்சந்திரன் பதிலளித்தார்.
சகலவிதத்திலும் ஆண்களைவிடப் பெண்கள் உயர்ந்தவர்கள். எனவே பஸ்களில் பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்படுமா? என்று திருமதி அனந்தநாயகி (ப.காங்) கேட்டார்.
அதனால்தானே முக்கால் பங்கு இடம் ஒதுக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் பதில் சொன்னபோது பலத்த சிரிப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் (குறுக்கிட்டு) பெண்களுக்கு பாதி இடத்தை பஸ்ஸில் மட்டுமல்ல; பரமசிவனே ஒதுக்கி இருக்கிறார் (மீண்டும் சிரிப்பு).
சக்தி இடது பக்கம்; சிவனுக்கு வலப்பக்கம் என்பதைப்போல, பஸ்களில் பெண்களுக்கு இடது பக்கம் பூராவும் ஒதுக்கப்படுமா என்று ஆற்காடு வீராசாமி கேட்டார்.
இப்போதும் இம்முறைதான் அமுலில் உள்ளது என்றார் மந்திரி.
கிட்டப்பா: பெண்களைத் தலையிலேயே சிவன் வைத்துக்கொண்டு பெண்மைக்குத் தலையாய இடம் கொடுத்ததாக புராணம் உள்ளதே. அதுபோல பஸ்களில் பெண்களுக்குத் தலையாய இடம் கொடுக்கப்படுமா?
மந்திரி ராமச்சந்திரன்: பஸ்களைப் பொறுத்தவரையில் தலை என்பது பஸ் கூரைதான். அங்கு பெண்களை உட்கார வைக்க முடியாது (பலத்த சிரிப்பு).
அரசாங்க பஸ்களில் மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பொன்மொழிகளை எழுதி வைக்கும் உத்தேசமில்லை என்று இன்னொரு கேள்விக்குப் பதிலளித்து மந்திரி கூறினார்.
பெரம்பூர், செம்பியம், எண்ணூர் பாதைகளில் செல்லும் பஸ்களில் 'கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு' என்ற வசனம் எழுதி வைக்கப்படுமா என்று வீராசாமி கேட்டார்.
'கத்தியைத் தீட்டுவது ஆத்திரத்தின் அறிகுறி; புத்தியைத் தீட்டுவது அறிவின் அறிகுறி' என்றார் அமைச்சர்.