வால்மீகியும், தியாகராஜரும்...
கதிர்மங்கலம் ஆர்.எஸ்.கணேசன் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் ராமாயணத்தின் "சுந்தரகாண்டம்' பகுதியை, இன்னிசை சொற்பொழிவாக, வாணிமகால் பி.ஓபுல் ரெட்டி அரங்கத்தில் நிகழ்த்தினார். வால்மீகி, ராமாயண
கதிர்மங்கலம் ஆர்.எஸ்.கணேசன் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் ராமாயணத்தின் "சுந்தரகாண்டம்' பகுதியை, இன்னிசை சொற்பொழிவாக, வாணிமகால் பி.ஓபுல் ரெட்டி அரங்கத்தில் நிகழ்த்தினார்.
வால்மீகி, ராமாயணத்தில் வர்ணித்த சுந்தரகாண்ட சம்பவங்களைத் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளில் ஒப்பிட்டு, தமிழில் விளக்கங்களை அளித்து, மனதை உருக்கும் இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சியாக நடத்த, கணேசனின் இந்த வித்தியாசமான முயற்சி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றது.
நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்தது, அவரின் கீர்த்தனை விளக்கங்களோடு, ஒவ்வொரு ராகத்துக்கும் அவர் அளித்த அர்த்தங்கள் மற்றும் சுட்டிக்காட்டிய சுந்தரகாண்ட சம்பவங்களுக்கும் அந்தந்த ராகங்களுக்கும் உள்ள தொடர்பு பாராட்டுக்குரிய ஆராய்ச்சி.
Advertisement
Advertisement
நிகழ்ச்சி தியாகராஜ கிருதிகளின் இசை நிகழ்ச்சியா? சுந்தர காண்டம் சொற்பொழிவா? என்று போட்டி போடுகிறாற்போல அமைந்து, பெரும்பாலும் இசை நிகழ்ச்சியாகவே வெற்றி அடைந்தது. அதற்கு முக்கிய காரணம், கணேசனுக்கு உறுதுணையாக, கீர்த்தனைகளைச் சிறப்பாகப் பாடி எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்த காசிராமன், ஐஸ்வர்யா மற்றும் வயலின், மிருதங்க வித்வான்களின் திறமையே. ஒவ்வொரு கீர்த்தனையின் முடிவிலும் பார்ப்போரின் கைதட்டலே அதற்கு சாட்சியாய் அமைந்தது.
அசோக வனத்தில் சீதை, தனக்கு ஆறுதல் கூற யாரும் இல்லையே என்று புலம்பியதை, அனுமன் சீதாதேவியைப் பார்த்து ராமரைப் பற்றிக் கூறியதை மிகவும் ரசிக்கும்படியாகக் கூறியதும் "எந்த முத்தோ, எந்த சொகுசோ என்ற பிந்துமாலினி ராக கீர்த்தனை பாடப்பட்டது. ராமர், சீதையின் பிரிவு என்பது தற்காலிகமானதே, அவர்களின் உறவு என்றும் பிரிக்கமுடியாதது என்று வர்ணித்ததும் "லாவண்ய ராமர்' கீர்த்தனையை ஐஸ்வர்யா மிக அருமையாகப் பாடினார்.
கணேசன், சொற்பொழிவின் நடுவே, வால்மீகிதான் எழுதிய ராமாயணத்தில் எதனைச் சொல்ல நினைத்தாரோ, அதனை தியாகராஜ சுவாமிகள் தன் கீர்த்தனைகளில் அப்படியே வடித்துள்ளார் என்று விளக்கினார்.
மத்யமாவதி ராகத்தில் "ராமநாமம் பஜரே மானசே' நாயகி ராகத்தில் "நீபஜன கான ரசிகுல' சுத்த சாவேரியில் அமைந்த "தாரினி தெலுசு கொண்டி', பூர்ண சந்திரிகாவில் "பலுக்க வேமி நாதெய்வமா' போன்ற கீர்த்தனைகளைப் பாடி, அசோக வனத்தில் அனுமன், சீதையின் சந்திப்பை ஒட்டிய வால்மீகியின் காட்சிகளுக்குத் தத்ரூபமாய் கீர்த்தனைகளில் வடிவம் தந்து, எல்லோர் மனதிலும் நிகழ்ச்சிகளைக் கணேசன் பதிக்கச் செய்தார்.
அனுமன் கொடுத்த மோதிரத்தில், எப்போது மனதில் தியானித்து வரும் ராமனின் உருவத்தைச் சீதை கண்டார். சிறிது நேரத்தில், சீதையின் மனதில் துக்கம் அதிகமாக ராமரின் உருவம் மோதிரத்திலிருந்து மறைந்தது. சீதை உகுத்த கண்ணீரிலும், ராமரின் உருவம் மறைந்திருக்கலாம் என்றும் அர்த்தம் கொள்ளலாம் என்று வேறு கோணத்திலும், எல்லோரும் ரசிக்கும்படியாக கணேசன் வர்ணித்தார்.
ஜயந்தஸ்ரீ ராகத்தில் அமைந்த, "மருகேலரா ஓ ராகவா' என்ற இனிமையான கீர்த்தனையைப் பாடி காசிராமனும், ஐஸ்வர்யாவும் கேட்டோரை உருக வைத்தனர்.
இந்தப் பாட்டின் மேன்மை, மீண்டும் சொற்பொழிவின் முடிவில், "ஒன்ஸ் மோர்' என்று ரசிகர்களால் இரண்டாவது முறையாகப் பாடச் செய்த பெருமையில் தெரிந்தது.
அனுமனின் விஸ்வரூபம், சீதாபிராட்டியின் தனிமை வேதனை என்ற காட்சிகளை அனுபவித்து விளக்கினார்.
ராமபக்தி என்கிற சாம்ராஜ்யம் கிடைப்பவனே பிரம்மானந்தம் அடைகிறான் என்னும் பொருள்பட, சுத்த பங்களா ராகத்தில் அமைந்த "ராமபக்தி சாம்ராஜ்யமு' கீர்த்தனையும், ஆனந்த பைரவியில் "நீ நாம பலமா', சித்தரஞ்ஜனி "நாத தனு மனிசம், சஹானா "தேஹி தவ பாத பக்தம்' போன்ற மிகப் பிரபலமான கீர்த்தனைகளையும் குழுவினர் இனிமையாகப் பாடினர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கணீரென்ற குரலும், வளமான சங்கீத ஞானமும், சீரான உச்சரிப்பும், கடின உழைப்பும், இனிமையான ராக ஆலாபனையும் பெற்றுள்ள இளம்பாடகி ஐஸ்வர்யாவுக்குக் கர்நாடக சங்கீத உலகில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது அவர் பாடிய விதத்தில் தெளிவாகத் தெரிந்தது.
நல்ல வடமொழிப்புலமையும், தியாகராஜ கீர்த்தனைகளில் நுணுக்கமான அறிவும், சிறந்த இசை ஞானமும் பெற்றுள்ள கணேசன் இரண்டே நாட்களில், அதுவும் வால்மீகி ராமாயணத்தை, தியாகராஜ கீர்த்தனைகளோடு ஒப்பிட்டு, இசைப்பின்னணியில் சொற்பொழிவு செய்து புதுமை படைத்துள்ளது பாராட்டுக்குரியதுதான். இருப்பினும், நிகழ்ச்சியை மேலும் சில நாள்களுக்கு நீட்டித்து, சுருக்கமாகச் சொல்லப்பட்ட விளக்கங்களை விரிவாக்கி, நிகழ்ச்சியை நடத்தினால், இசை நுணுக்கங்களும், வடமொழி, தெலுங்கு மொழியும் தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல், எளியவர்களும் கூட இந்த இசை இன்பத்தேனை நிச்சயம் சுவைத்து இன்புற முடியும்.