முகப்பு
கண்ணோட்டம்

வணக்கம் தமிழா!: வளர்ச்சிக்குக் காரணம்... பிடித்த தொழில்!

திரைப்படம், அரசியல், பொழுதுபோக்கு போன்றவற்றை மையமாக வைத்தே தமிழ் வார இதழ்களும், மாத இதழ்களும் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், முதன்முதலில் ஒரு தொழில்,வணிக இதழை "வளர்தொழில்' என்கிற பெயரில் துணிச்சலாகத

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:03 PM
பகிர்:

திரைப்படம், அரசியல், பொழுதுபோக்கு போன்றவற்றை மையமாக வைத்தே தமிழ் வார இதழ்களும், மாத இதழ்களும் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், முதன்முதலில் ஒரு தொழில்,வணிக இதழை "வளர்தொழில்' என்கிற பெயரில் துணிச்சலாகத் தொடங்கி நடத்தியவர் க.ஜெயகிருஷ்ணன்.

நாளிதழ் ஒன்றில் நிருபராக, வார இதழ் ஒன்றில் உதவியாசிரியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர் இன்று, "வளர்தொழில்', "தமிழ் கம்ப்யூட்டர்', 'டஇ ஊழ்ண்ங்ய்க்' போன்ற இதழ்களின் ஆசிரியர், வெளியீட்டாளர். அதுமட்டுமல்ல, பெரிகாம் என்ற பதிப்பகத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூர் சொந்த ஊர் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டியில்.

இனி அந்தச் சாதனையாளரின் பேச்சிலிருந்து...

""எனக்கு 6 வயதாக இருக்கும்போது ஊரிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு வந்துவிட்டோம். அப்பா கனி. அம்மா தங்கம். அப்பா விறகுக்கடை, பெட்டிக்கடை, பத்திரிகை ஏஜென்ட் எனப் பல வேலைகளைச் செய்து வந்தார். பள்ளிப் பருவத்திலிருந்தே புத்தகங்கள், இதழ்கள், பத்திரிகைகள் படிப்பதில் எனக்கு அளவற்ற ஆர்வம் இருந்து வந்தது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நூலகத்தில் எந்த அடுக்கில் என்ன புத்தகம் இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் நான் பி.எஸ்சி., தாவரவியல் பயின்று கொண்டு இருந்தபோது, சமூக சீர்திருத்தக் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன்.

என்னுடைய அப்பா பத்திரிகை ஏஜென்ட் என்பதால் சென்னை மாலைமுரசு அலுவலகத்திற்கு என்னை அழைத்து வந்து அங்கு வேலையில் சேர்த்துவிட்டார். நிருபராகப் பயிற்சி பெற்ற நான், அதற்குப் பிறகு தேவி வார இதழில் உதவியாசிரியராக நியமிக்கப்பட்டேன். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி ஆசிரியராகப் பணி செய்து கொண்டிருந்தேன்.

அப்போது ஆங்கிலத்தில் தொழில், வணிகம், மருத்துவம், ஃபேஷன் டிசைனிங், அறிவியல், தொழில்நுட்பம்

எனப் பலதுறைசார்ந்த இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. தமிழில் அப்படி ஓர் இதழ் இல்லாதது எனக்குக் குறையாக இருந்தது. தமிழ்நாட்டில் துறைசார்ந்த இதழ்கள் இருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் என்னால் கொண்டு வர முடியாது என்றும் நினைத்தேன்.

எனவே தமிழில் ஒரு தொழில்,வணிக இதழைக் கொண்டு வரலாம் என்ற யோசனையை பலரிடமும் சொன்னேன். குறிப்பாக மாலைமுரசு அதிபர் இராமச்சந்திர ஆதித்தன், தினசரி நாளேட்டின் உரிமையாளர் ஜேம்ஸ் ஃபிரடெரிக் போன்றவர்களிடம் சொன்னேன். தொழில், வணிக இதழ்களுக்கு எல்லாம் அவ்வளவு வரவேற்பு இருக்காது என்பதே அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த பதிலாக இருந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வா.செ.குழந்தைசாமி, தொழில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களை அணுகி அப்படி ஓர் இதழ் வர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். என்றாலும் எனது முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன.

எனவே நானே "வளர்தொழில்' என்கிற பெயரில் 1989 ஆம் ஆண்டு தமிழின் முதல் தொழில், வணிக இதழைத் தொடங்கினேன். அப்போது விஜயகுமார், அரிதாசன் போன்ற நண்பர்களையும் என்னுடன் இணைத்துக் கொண்டேன்.

தமிழில் புதுமுயற்சி என்பதால் ஆரம்பத்தில் விளம்பரங்கள் கிடைக்கவில்லை. மிகக்குறைவாகவே கிடைத்தன. எனவே இதழின் விலையை ரூ.6 என்று வைத்தோம். அப்போதுதான் கட்டுபடியாகும். இது அந்தக் காலத்தில் அதிக விலை.

தொழில்,வணிக இதழ் தமிழுக்குப் புதியது என்பதால், இதில் எழுதுபவர்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. பிற இதழ்களின் அட்டைப்படத்தில் நடிகைகளின் படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், தொழில்முனைவோர்களின் படங்களை வளர்தொழிலின் அட்டையில் இடம்பெறச் செய்தோம். ஆரம்பத்தில் சிறு தொழிலதிபர்களிடம் நேர்காணல் செய்வதே பெரும் பிரச்னையாக இருந்தது. சிறு தொழிலதிபர்கள் பலர் பேட்டி கொடுக்கவே பயந்தார்கள். அவர்களிடம் பொறுமையாக விளக்கி, பேட்டி எடுத்து வெளியிட்டோம்.

கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்தபோது, தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத் "தமிழ் கம்ப்யூட்டர்' இதழைத் தொடங்கினேன். அது நல்ல பலனைத் தந்திருக்கிறது. இதுதவிர, தமிழில் தன்முன்னேற்ற நூல்கள், நிர்வாக இயல் நூல்கள், கம்ப்யூட்டர் நூல்கள் போன்றவற்றை வெளியிட பெரிகாம் என்ற பதிப்பகத்தையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன்.

இப்போது தமிழில் துறைசார்ந்த இதழ்கள் ஏராளமாக வெளி வருகின்றன. ஆரம்பத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்கள் பலர், பல துறைசார்ந்த இதழ்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

என்னுடைய வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. சிலவற்றைச் சொல்லலாம்.

சிறுவயதிலிருந்தே படிக்கும் பழக்கம் இருந்ததால் படிப்பது, எழுதுவது எனக்குப் பிடிக்கும். எனவே பத்திரிகை, பதிப்பகம் நடத்துவது எனக்கு மிகவும் பிடித்த தொழிலாக இருக்கிறது. பிடித்த தொழில் என்பதால் நேரம் பார்க்காமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உழைக்க முடியும். உழைத்தேன். அப்படி உழைத்தது எனது வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று.

அடுத்து, என்னுடைய இயல்பான பண்பு எல்லாரிடமும் நட்பு பாராட்டுவது. அது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் தேவை.

நான் எப்போதும் வரவு செலவுக் கணக்குகளை மிகச் சரியாகப் பராமரிப்பேன்.

கடன் வாங்கக் கூடாது என்று நினைப்பேன். அப்படியே கடன் வாங்கினாலும் உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவேன். இது என்மேல் எல்லாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கை என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் நடத்தும் இதழ்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைய வேண்டும் என்று நினைத்தேன். அந்த நோக்கத்துடன் திட்டமிட்டுச் செயல்படுவதால், என்னுடைய முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →