தாவணி அணிந்த "ஜாவளிகள்'!
இசைக் கச்சேரிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும், முறையே மங்களம் பாடுவதற்கு முன், அல்லது தில்லானாவுக்கு முன் மெல்லிசை போல இருக்கும் பதம் அல்லது ஜாவளியைப் பாடுவார்கள் அல்லது அதற்கு நடனம் ஆடுவார்கள். இந்த வகை
இசைக் கச்சேரிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும், முறையே மங்களம் பாடுவதற்கு முன், அல்லது தில்லானாவுக்கு முன் மெல்லிசை போல இருக்கும் பதம் அல்லது ஜாவளியைப் பாடுவார்கள் அல்லது அதற்கு நடனம் ஆடுவார்கள். இந்த வகைப் பாடல்களில் தெய்வ பக்தியையோ தெய்வீக உணர்வையோ கண்டுபிடிக்க முடியாது. இவற்றில் சிருங்கார ரசம் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். இவற்றை இயற்றிய கவிஞர்கள் பலர்.
""ஜாவளி பிறந்தது 19ஆம் நூற்றாண்டில், திருவாங்கூரில். வளர்ந்தது மைசூரில். ஆனால் அவை ரசித்து அனுபவிக்கப்பட்டது தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும்'' என்று டாக்டர் ஆருத்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
தஞ்சை நால்வர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளை, மகாராஜா சுவாதித் திருநாள், தர்மபுரி சுப்பராயர், பூச்சி சீனிவாசய்யங்கார், திருப்பனந்தாள் பட்டாபிராமய்யா, திருப்பதி வித்யாலா நாராயணசாமி நாயுடு, பெங்களூர் சந்திரசேகர சாஸ்திரி, வேங்கடசுப்பராயர், தாசு ஸ்ரீராமுலு, பத்ராயனி சீதாராம சாஸ்திரி எனப் பலர் ஜாவளிகள் இயற்றியிருக்கின்றனர். இவை தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டவை.
சில பாடல்களில் வேற்றுமொழிகூடக் கலந்திருக்குமாம். கரூர் சிவராமையா இயற்றிய ஒரு ஜாவளி, "ஓ மை லவ்லி லலாலா' ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் எழுதப்பட்டு, கரகரப்பிரியா ராகத்தில் அமைக்கப்பட்டதாம்.
திருப்பனந்தாள் பட்டாபிராமய்யாவுக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகள் தெரியும். தஞ்சாவூர் தாலுகா ஆபீசில் பணியாற்றிக் கொண்டிருந்தவரை, மைசூர் மகாராஜா சாமராஜ உடையார் மைசூருக்கு அழைத்துச் சென்று வேலை கொடுத்தார். எம்.எல்.வி.யின் தாயார் லலிதாங்கி, பாலசரசுவதியின் தாயார் ஜெயம்மா ஆகியோர் இவரது முக்கியமான மாணவிகளில் சிலர்.
இந்த ஜாவளிகளில் ஐம்பத்தொன்றைத் தொகுத்து, அவற்றுக்குச் சுருக்கமாக ஆங்கிலத்தில் பொருள் தந்து, அந்தப் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளைச் செய்து, தமிழிலும், தெலுங்கிலும் படிப்பதற்கு எளிதாகத் தந்திருக்கிறார் இசை-நடனத் துறைகளில் நிபுணர் டாக்டர் பப்பு வேணுகோபால் ராவ். இந்த நூலுடன், தேர்ந்தெடுத்த பத்து ஜாவளிகளுக்கு, சங்கீத கலாநிதி ஆர். வேதவல்லி, செüம்யா, டி.எம். கிருஷ்ணா, சுமித்ரா வாசுதேவ், அர்ச்சனா-ஆர்த்தி சகோதரிகள் இசை வடிவம் கொடுத்துப் பாடியிருக்கும் "சிடி' ஒன்றையும் இணைத்திருக்கிறார் பப்பு வேணுகோபால் ராவ்.
சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் "டேக்' மையத்தில் கடந்த 22-ம் தேதியன்று மாலை நடந்த இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பப்பு வேணுகோபால் ராவின் பல்முனைத் திறனையும் அவரது இடைவிடாத முயற்சிகளையும், மியூசிக் அகடமி தலைவர் என். முரளி பாராட்டினார். பப்பு வேணுகோபால், செயலராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் அகாதெமியின் மாதாந்திர இதழ்கள் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின என்று புகழ்ந்தார்.
நடனக்கலை பேராசியர் சி.வி. சந்திரசேகர் நூலையும் சி.டி.யையும் வெளியிட, கர்னாடக இசைப் பாடகி ரமா ரவி பெற்றுக்கொண்டார். இருவருமே இது இசைக்கும் நடனத்துக்கும் பப்பு வேணுகோபால் ராவ் செய்த தொண்டு எனப் பாராட்டினர்.
நூலை சுருக்கமாக விமர்சனம் செய்தார் சுஜாதா விஜயராகவன். இந்த ஐம்பத்தொரு பாடல்களில் பதினொரு பாடல்களை யார் எழுதியது என்று தெரியவில்லை என்று வேணுகோபால் ராவ் குறிப்பிட்டிருக்கிறார். அவராலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வேறு யாரால் கண்டுபிடிக்க முடியும்?
""ஜாவளி' என்ற சொல் தெலுங்குதான் என்று அடித்துச் சொல்கிறார் வேணுகோபால் ராவ். அந்த அழகான பெயரைச் சொல்லும்போதே பாவாடையும் தாவணியும் அணிந்த அழகான பெண் கண் முன்னே தோன்றுவது போல் இல்லையா? என் மகளின் சிநேகிதி தன் குழந்தைக்கு "ஜாவளி' என்று பெயர் வைத்திருந்ததைக் கேட்டு என் மகள் வியந்து போய், "அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?' என்று கேட்டாள். அந்த சிநேகிதி, "அர்த்தம் தெரியாது. ஆனால் அந்தப் பெயர் எத்தனை அழகாக இருக்கிறது? ஒரு பெண்ணுக்கு எத்தனை அழகாகப் பொருந்துகிறது!' என்றாளாம். பல ஜாவளிகளைக் கேட்கும்போது எனக்கு இந்தக் காட்சிதான் கண்முன்னே தோன்றுகிறது..'' என்றார் சுஜாதா விஜயராகவன்.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏராளமான இசைக்கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் வந்திருந்தது, (பலர் நூலையும் வாங்கியது) இனி கச்சேரிகளில் புதிதாகச் சில ஜாவளிகளைக் கேட்கவும், பார்க்கவும் முடியும் என்ற ஆவலை எழுப்பியது.
""இதை நான் ஐந்து வருடங்களுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். என்னுடன் இணைந்து இதை வெளிக்கொண்டுவர, காலம் சென்ற டி.எஸ். பார்த்தசாரதி விருப்பம் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அதற்கு இப்போதுதான் காலம் கனிந்துவந்திருக்கிறது'' என்றார் பப்பு வேணுகோபால் ராவ்.
அட்டையைப் பிரபல ஓவியர் பாபு வரைந்திருக்கிறார். அச்சும் நூலின் வடிவமும், தயாரிக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் உயர் தரமாக இருக்கின்றன. கூடவே போனஸôக சி.டி. எண்ணூறு ரூபாய்க்கு இதன் பயனை இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் நிச்சயம் அனுபவித்து உணரலாம். ரசிகர்கள் அவர்கள் வாயிலாக அந்தப் பயனைப் பெறக்கூடும். நூல், சென்னை ராயப்பேட்டை, கர்னாடிக் மியூசிக் புக் சென்டரில் கிடைக்கும்.