நாடக விமர்சனம்: வாழ்க்கை விசித்திரமானது!
மூளையைக் கசக்கிக் கொண்டால் முதல் தரமான நாடகத்தை வழங்க முடியும் என்ற உண்மைக்கு உதாரணமாக இருந்தது, ஸ்ரீரங்கம் ரங்கமணியின் எழுத்து - இயக்கத்தில், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் அரங்கேறிய "
மூளையைக் கசக்கிக் கொண்டால் முதல் தரமான நாடகத்தை வழங்க முடியும் என்ற உண்மைக்கு உதாரணமாக இருந்தது, ஸ்ரீரங்கம் ரங்கமணியின் எழுத்து - இயக்கத்தில், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் அரங்கேறிய "வாழ்க்கை விசித்திரமானது' நாடகம். பிரமிப்பூட்டும் செட்டுகளோ, நட்சத்திர நடிகர்களோ இல்லாமலேயே, ரசிகர்களை இரண்டு மணி நேரம் கட்டிப்போட முடியும் என்பதை ரங்கன் அரங்கம் குழுவினர் நிரூபித்தனர். இத்தனைக்கும் சாதாரண குடும்பக் கதைதான்.
திருமண சாப்பாட்டு கான்ட்ராக்ட்காரர் முத்தப்பனிடம் பணிபுரியும் ராமானுஜன், குடும்பச் செலவை சரிக்கட்டவும், சமாளிக்கவும் முதலாளியிடம் அவ்வப்போது முன்பணம் வாங்கிவிட, அது சேர்ந்து போய்விடுகிறது. கம்பெனி ஊழியர்களுக்குப் பிற்பகல் சிற்றுண்டி தருவது போன்று சிறு சிறு ஆர்டர்கள் பெற்று, மனைவி, தகப்பனார் மற்றும் மாமனாரை வைத்துக்கொண்டு தனி வியாபாரம் தொடங்க முடிவெடுக்கிறான் ராமானுஜன்.
முத்தப்பன், முதலில் அட்வான்ஸ் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப்புறம் கரண்டியைத் தொடு என்று சவால் விடுகிறார், ஊழியரின் போட்டியைச் சமாளிக்க.
ராமானுஜனுக்குத் திருமண கான்ட்ராக்ட் கிடைக்கும் அளவுக்கு அவன் உயர்ந்து விடும்போது, மளிகை பாக்கியைக் கொடுக்கப்போகும் உதவியாள் இரண்டு லட்ச ரூபாயைக் கோட்டை விட்டுவிடுகிறார். ராமானுஜன் கடலுக்குப் போய் விழ, நாராயணன் காப்பாற்றுகிறார். (நாராயணன் என்றால் சாதாரண நாராயணன் அல்ல, ஸ்ரீமன் நாராயணனேதான்) தற்கொலை என்பது அவசர முடிவு, அது பிரச்னைக்குத் தீர்வு அல்ல என்று செய்தியையும் சொல்லி, பழையபடியே மண்டபத்துக்கு அனுப்பிவைக்கிறார். உதவியாள் தொலைத்த பணம் கிடைத்து, மளிகை பாக்கி தீர்க்கப்பட்டிருக்கிறது. திருமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு லட்ச ரூபாய் சன்மானம் வழங்குகிறார்கள். முத்தப்பனும் மனம் மாறி, இத்தனை வருடம் உழைத்ததுக்கு என்று இரண்டு லட்ச ரூபாய் வெகுமதி தருகிறார்.
கதையின் சாரம் இவ்வளவுதான். ஆனால் ஸ்ரீரங்கம் ரங்கமணி அதற்கு உரையாடல் எழுதி, உயிர்கொடுத்து, உலாவ விடுகிறாரே, அதில்தான் சுவாரசியம் கொட்டிக் கிடக்கிறது. நகைச்சுவை என்ற பெயால் ஒரு சிறு அபத்தமான வார்த்தைகூட இல்லை. வசனம்கூட சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிற வகையைச் சேர்ந்தது. முதலாளி-தொழிலாளி உறவு, தொழிலில் கௌரவம், நம்பிக்கை, நாணயம் என்று எல்லாவற்றையும் ஓர் அலசல் அலசுகிறது.
நடிப்பு என்று பார்த்தால் குற்றம் குறைகள் கண்ணை உறுத்திக்கொண்டு எதுவும் தென்படவில்லை. ரசிகர்களின் கைதட்டலை ஓர் அளவு கோலாகக் கொண்டால், அவர்கள் பளிச் என்றிருந்த வசனங்களை ரசித்ததும், அதைவிட யதார்த்தமான நடிப்பை ரசித்ததும் (ஒரு காட்சியில் ஒன்ஸ்மோர் கேட்டதும்) இவற்றைவிட ஒரு நாடகத்தின் வெற்றிக்கு வேறு என்ன வேணும்? என்று கேட்கவைத்தது.
என்னடா இது, சமூக நாடகத்தில் போய் இப்படி பகவானை எல்லாம் பாத்திரமாகப் போட்டு பாடாய்ப் படுத்துகிறார்களே என்று நினைக்க வைக்காமல், அவர் மூலம் கிடைக்கும் அனுபவம், வாழ்க்கையின் வேடிக்கை விசித்திரங்களை மேலும்
சிரிக்கச் சிரிக்க விவரிக்கிறது.
ஸ்ரீரங்கம் ரங்கமணி, நகைச்சுவைக்காக இங்கிதத்தை விட்டுக்கொடுக்கவில்லை. கண்களில் நீர் வரவழைக்க, மெலோடிராமா உத்தியைக் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. பகவானே பாத்திரமாக வந்தாலும் கொச்சைப்படுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகாமல், ஒன்பது மணிக்கு முன்னால் முடித்து, ரசிகர்களைக் கலகலப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் "வாழ்க்கை விசித்திரமானது' நாடகம், ருசியான வீட்டுச் சாப்பாடு!