எதிர்கால கனவு: சி. அருள் ஜோசப் ராஜ்
இலக்கின்றி செய்பயணம் முடிதல் இல்லை
இழந்தழியும் நேரம்மிகுந்தே தருமே தொல்லை!
கலக்கமின்றி இலக்குநோக்கி பயணம் செய்தால்
களம்காட்டும் விளக்குபோல ஒளிரும் வெற்றி!
புலமைகொண்டார் இலக்கடைய வழிகள் காண்பர்
புரிதல் கொண்டே இலக்கதனை பிரித்தும் வைப்பார்!
புலர்பொழுதில் அதன்நினைவை நித்தம் கொள்வர்
புத்துணர்ச்சி பெற்றதனை முடித்தே ஓய்வார்!
முயற்சிதனில் தோற்றாலும் தளர்ச்சி கொள்ளார்!
முடிவெண்ணி முகம்சுளிக்கார்! முடித்த பின்னும்,
ஓயமாட்டார்! எதிர்கால கனவு என்று
ஓர்இலக்கை நிர்ணயிப்பார்! தொடர்வார் மீண்டும்!
நயமிக்க செயலுக்கும் நமக்கும் உள்ள
நம்பிக்கைத் தொலைவே கனவு என்பார்!
இயக்கத்தில் இதயம் போல் இருப்பது வாழ்க்கை
இலக்குகளே நிர்ணயிக்கும் அதனின் போக்கை!
என்கனவு ஒன்றுண்டு, அதனைச் சேர,
எத்தனைபேர் முயன்றுமது முடிய வில்லை
என்ஆயுள் முடிவதற்குள் எல்லையிலே
எழுகின்ற குண்டுகளின் முழக்கம் நீங்கி,
என்றென்றும் ராணுவத்தை திரும்பப் பெற்று,
எந்நாட்டு மக்களுமே அமைதியோடு
என்னுடனே வாழுகின்ற நிலை வேண்டும்!
என்னுலகம் இதுவென்ற உணர்வு வேண்டும்!