அலை புரண்டு வரும் பௌர்ணமியில்
கடலே புரண்டு வந்தது சுனாமியில்
கடல்நீர் நீராவி ஆவதைப் போல்
உயிர்கள் ஆவியாகின
கடற்கரையில்...!
மணல் மேல் உலாவிய உயிர்கள்
மாயமாகிப் போயின அச் சுனாமியில்...
கண்மணியாய் காத்த பெற்றோர் கடலலையில்...
கண்ணீரோடு ஓர்குழந்தை கடற்கரையில்...!
காணவில்லை என்று தேட இன்னும்
மழலையின் கால்கள் வளர வில்லை
'வந்து உதவுங்கள்' என்று அழைக்க
வார்த்தைகள் எழ வில்லை...!
பாவமறியா சிறுகுழந்தை
பாழடைந்த வீடுகளில்
பரிதாபமாய் ஓடியே பரிதவித்து வாடியது
மாண்டுவிட்ட பெற்றோரை தவழ்ந்தபடி தேடியது
மரணம் அதை முந்தியதே...!
ஏ! சுனாமியே ! வாழ்வின் நாசினியே !
அக்பரின் அவைக் குள்ளே அன்று
அழகுக் குழந்தையை கூறுபோடச் சொன்ன
கொடூரத்தாயின் மறுபிறவி நீயோ ?!
கருணையே வடிவான கடல்தாயின் கருவில்நீ
உருவான தெப்படி உயிரள்ளிப் பருக...!?
பார்க்கடலில் ஓர்துளியாம் நஞ்சாகக் கலந்தாய்
உதயத்தில் அஸ்தமனமேநீ தந்தாய்...!
ஒட்டடைக் குச்சிக்கு ஒளிந்து பயந்து
ஓடுகின்ற சிலந்தி பூச்சிகளைப் போல
ஓடிக் கொண்டிருந்த மனித இனம்
உயிரை ஒளித்து வைக்க உடல்கள்
தேடி அலைந்தன இடம்...!
காதுகளால் கேட்டு தாங்காத கதறல்கள்
இதயங்களை கிழித்தன சிதறிய உடல்கள்
மேலிருந்து கடவுள் காப்பாற்ற நம்மை
கயிறுபோடுவாரா கலக்கங்கள் நெஞ்சில்...
வெற்று வானை நோக்கி அவர்கள்
வெடித்துச் சிதறும் கண்ணீர் கண்கள்
முற்றுப் புள்ளி போட்டு விட
முடிவு கிடைக்க வில்லை...!
ஏனென்று கேட்க நமக்கு இறைவன்
முகவரியும் தெரிய வில்லை
இயற்கையே உன்னை நான் கேட்கிறேன்
நீ அன்னையாக நடந்துகொள்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.