பட்டதாரி: அருள் .க. இராபர்ட்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
பள்ளிக்கூடம் சேக்கும்போது
அப்பனோடகனவு
துள்ளித்திரியும் வயதினிலே
துளிர்த்துவிட்ட கனவு
படிச்சபாடம் அத்தனையும்
பட்டம்தானே நினைவு
பலகலையும் படிக்கத்தானே
மனச்செடுத்தது தினவு
காலேஜுல சேக்கப்போற
காலம் வந்தநேரம்
காசுபாக்கும் படிப்பெதுன்னு
கண்டுபிடிக்கும் பாரம்
Advertisement
இன்ஜினியர் படிப்புமுடிச்சா
இங்கிலாந்துலே வேலே
இன்னும் கொஞ்சம் மேலேபடிச்சா
ஐரோப்பவுலே மாலே
அடுக்குசட்டி அம்மா தாலி
அத்தனையும் வித்து
அடுத்தடுத்து படிக்கவைக்க
அப்பங்காரன் சொத்து
பட்டம்வாங்கி இரங்கிவந்தா
படிஞ்சது ஒரு வேல
எட்ட நின்னு பாக்காமே
எடுத்து வையி காலே
ஆந்தையைப்போல் ராத்திரியில்
முழிச்சிருக்கனும் சாமி
ஆளுங்கமொகம் பாக்காமே
அடங்குமே பகல்பூமி
ஆத்தா அப்பன் மூஞ்சிக்கூட
மனசிலிருந்து போச்சு
பட்டதாரி ஆனபின்னால்
பலன் தான் என்ன ஆச்சு