எழுத்து: பாவலர் கருமலைத்தமிழாழன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
கூலிக்கு மாரடித்துப் பிணத்தின் பக்கம் கூவியழும் பெண்களைப்போல் ! காசு வாங்கித் தாலிகட்டும் ஆண்களைப்போல் பெற்றெ டுத்த தாய்கழுத்தை நெரிக்கின்ற கயவர் போல பாலியலின் காட்சிகளைக் கதைக ளாக்கிப் படிப்போர்க்குக் கிளர்ச்சியினைத் தூண்டிப் பண்பு வேலிகளை எரிப்பவரா எழுத்தா ளர்கள் வேரறுக்கும் கத்திகளா எழுது கோல்கள் ! ஊனத்தை மறக்கவைக்கும் ஊன்ற கோலாய் உடனிருந்தே இரக்கத்தை ஊட்டு வோராய் ஈனத்தில் விதியென்றே வீழ்ந்தி ருப்போர் நெஞ்சத்தில் நம்பிக்கை ஏற்று வோராய் வானத்தில் ஏறுதற்குக் கனவு காண்போர் வழிபற்றிச் செல்வதற்கே உதவு வோராய் மானத்தின் மைகொண்ட எழுது கோலை மதிப்பவராய் எழுத்தாளர் இருக்க வேண்டும் ! குனிந்திருக்கும் குமுகத்தை நிமிர வைத்து குறுமனத்தை எண்திசையில் விரிய வைத்து தனிநலத்தைப் பொதுநலமாய் மாற வைத்து தவறுகளைப் தவறென்றே உணர வைத்து பிணியான ஊழலுக்கு வேட்டு வைத்து பிற்போக்கு முடக்குவாதம் நீங்க வைத்து மனிதத்தை ஒளிரவைக்கும் எழுத்தை யாக்கும் மனத்துணிவில் இருப்போர்தாம் எழுத்தா ளர்கள் !