மனம் எனும் மாயப்பேய்: - கோ. மன்றவாணன்
பேய்
என்பது பொய்
அறிவியல் பரப்பில்
பேய்
உலவுவது மெய்
மனப்பரப்பில்
மனவிழி
பேதலிக்கும் போது
வந்து
வசப்படுத்தும்
மாயக் காட்சிகளும்
திரிபுக் காட்சிகளும்
Advertisement
சிவகாசி நாட்காட்டியில்
சிரிக்கும் முருகன்
வாய்திறந்து பேசுவதைக்
காதுகுளிர்ந்து கேட்பார் உண்டு
மனம் எனும்
மாயப்பேயின் பின்னணி ஒலிபரப்பால்
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்
இறந்துபோன
இராஜராஜசோழன்
எதிர்வீட்டு மாடியில் நின்று
எம்ஜிஆரோடு கத்தி சண்டை போடுவதைக்
கண்டு
கைதட்டுவார் உண்டு
மனப்பேய் நடத்தும்
மாய நிகழ்வலை வரிசையில்
மைக்கும் இல்லை
மக்களும் இல்லை
சீறிச் சினந்து
சிறப்புரை ஆற்றுவார் உண்டு
மனப்பேய் நிகழ்த்தும்
தெருக்கூத்தில்
மானத்தைப் போலவே
ஆடைகளையும்
அவிழ்த்தெறிந்து
ராஜ வீதியில்
ராணுவ நடை போடுவார் உண்டு
உளப்பேயின்
உத்தரவுக்கு அடங்கி
மனநோயின்
விசித்திரங்கள்
விபரீதங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும்
உண்டு
கைதவறினால் உடைந்துவிடும்
கண்ணாடிதான்
மனம்
உடையாமல் பார்த்துக்கொள்
உள்ளத்தைக் காத்துக்கொள்
மனதைத்
தாயாக்கி விட்டால்
உன் கைப்பிடித்துச் செல்வாள்
உலகை ஆளச் செய்வாள்
மனதைப்
பேயாக்கிவிட்டால்
உன் இரவுக்குக் கோரப்பல் முளைக்கும்
உன் பகலுக்கு விஷநகங்கள் நீளும்