குழந்தையினை இடுப்பினிலே தூக்கி வைத்துக்
குளிர்ந்தகாற்று வீசும்மாந் தோப்பில் நின்று
அழகான நிலவுதனை அன்று காட்டி
அன்னையவள் ஊட்டிவிட்டாள் அமுதை அன்பால் !
புழக்கடையும் முற்றமெல்லாம் மாறிப் போகப்
பூஞ்செடிகள் தோட்டமெல்லாம் வீடாய் மாற
நிழல்சூழ்ந்த கட்டடங்கள் தொகுப்பிற் குள்ளே
நிலவெட்டிப் பார்க்கயின்றோ வழியே இல்லை !
சன்னலிலே தெரிந்தநிலா மரம்கீழ் பாட்டி
சாய்ந்துவடை சுடுகின்றாள் என்று சொன்ன
முன்னோர்கள் கதைமாய ; மல்லை கைப்பூ
முன்னெடுத்து மலையேறி வாவா என்ற
கன்னற்சுவைப் பாடல்கள் முரணாய்ப் போகக்
கற்பனையில் அழகிற்கும் தண்ணெ ளிக்கும்
கன்னிமுக உவமையாக்கிச் சொல்லி வந்த
கவிதையெல்லாம் பொய்யாகிப் போன தின்று !
அறிவியலில் முன்னேறி சன்னல் தன்னில்
அழகென்றே கண்டுவந்த நிலவுக் கோளில்
பொறித்திட்டார் கால்சுவட்டை ! மண்ணெ டுத்துப்
பொதிந்துள்ள உண்மைகளை ஆய்வு செய்தார் !
அறிவாலே அங்குவாழத் திட்டம் தீட்டி
அகற்கின்று முன்பதிவும் செய்ய லானார்
வெறியூட்டும் மதச்சாதி எல்லாம் விட்டு
வேர்போல மனிதநேயம் வளர்ப்போம் அங்கே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.