என் ஓட்டம் என் இலக்கு : கோ. மன்றவாணன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
எட்டிப் பறிக்கும் தூரத்தில்
இருக்கும்
திராட்சைக் குலைகள் அல்ல ;
நட்சத்திரங்கள்.
கண்மூடி நின்று
கைநீட்டினால் கிடைக்கும்
வித்தைப் பொருளல்ல ;
நெற்றிவியர்வை சிந்தி
நெற்பயிர் விளைவித்தல்.
கணுக்கால் நதியில் நடந்து
கரைசேர்வதல்ல
இலட்சியம் ;
மூழ்கடிக்கும்
நெருப்பாற்றில்
நீந்திக் கடப்பதே சாதனை.
தூரத்தில் இருந்து அழைக்கிறது
சொர்க்க வனம்
Advertisement
இடையில்
அகழிகளைத் தாண்டி ஓட வேண்டும்
நெடிதுயர்ந்து தடுக்கும்
மலைகளில் ஏறிச்சென்றும்
துளைத்துச் சென்றும் ஓட வேண்டும்
ஆங்காங்கே
ஆளை விழுங்கும் புதைகுழிகளில் விழாமல்
வேண்டும்
என் ஓட்டம்
நிற்காது
இலக்கை அடையும் வரை
வெற்றி மேடையில் மட்டுமே
சற்றே இளைப்பாறும்
என் கால்கள்
அதன்பின்னும் விடாது என்னை
அடுத்த இலக்கு
அடுத்த ஓட்டம்
ஓடிக்கொண்டே இருப்பதுதான்
வாழ்க்கை