கவிதைமணி

எனை நனைத்த மழை: பாவலர் கோ. மலர்வண்ணன்

கவிதைமணி

கருமுகில்கள் திரண்டெழுந்தே ஒருங்கு சேர்ந்து
    கண்கூசும் படிமின்னி இடியி டித்து
வருமழையை ஏருழவர் மகிழ்ச்சி யோடு 
    வரவேற்பர்; விதைவிதைத்து விளைச்சல் காண்பர்!
பெருமழையால் நிலத்தடிநீர் வளமும் கூடும்;
    பின்னாளில் வறட்சியது தலைகாட் டாது!
திருவிழாவும் பூசைகளும் நடக்கும் எங்கும்;
    செழிப்புற்று நல்வாழ்க்கை வாழ்வார் மக்கள்!

படிப்பதற்குப் பள்ளிசெல்லும் மாணாக் கர்கள்
    படிப்பதற்கு வருந்தடையை விரும்ப மாட்டார்!
படிப்பினிலே ஆர்வமுள்ள எவரும் தங்கள்
    படிப்புதொடர் வதனைத்தான் விரும்பு வார்கள்!
குடிப்பதற்கு நீரின்றி வறட்சி வந்து
    குலைத்தாலும் அடைமழைதான் பெய்திட் டாலும்
படிப்பதனைத் தொடர்வார்கள்; வருங்கா லத்தில்
    பல்கலையில் வல்லவராய்த் திகழு வார்கள்!

பள்ளிசென்று நான்படித்த காலம், சொல்லும்
    படியாக வசதியேதும் இல்லாக் காலம்!
துள்ளிநடை போட்டவாறு பலகல் சென்று
    துவளாமல் கல்வியினைக் கற்ற காலம்!
அள்ளியள்ளிப் பருகுகின்ற வேட்கை யோடும்
    அயராத உழைப்போடும் கல்வி கற்கப்
பள்ளிசென்ற பொற்காலம்! பிற்கா லத்தில்
    பலவகையில் முன்னேற்றம் தந்த காலம்!

மனைவிட்டுப் பள்ளிசெல்லும் வேளை, நல்ல
    மழைபொழிந்து தடுத்தாலும் நிற்றல் இல்லை!
நனைந்தபடி, குடைபிடிக்கும் வசதி யின்றி
    நான்படித்த காலமதை மறக்க மாட்டேன்!
எனைநனைத்த மழையதனை எண்ணி யெண்ணி
    இன்பந்தான் கொள்கின்றேன்! மழையில் சற்றும்
நனைந்துபடி யாதவர்கள் கோட்டை விட்டார்!
    நனைந்தபடி படித்தவன்நான் ஏற்றம் பெற்றேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT