குறவைகளும், கெளுத்திகளும்,
கெண்டைகளும், விரால்களும்
துள்ளிக்குதித்து நீந்திக்கொண்டிருந்த குளம்.
கிராமத்திலிருந்து நகரமாகிக்கொண்டிருந்த
அவ்வூரின் கழிவு நீர் சேமிப்பு தொட்டியாகி
பல வருடங்களுக்கு முன்பே
நோய் தொற்றுகளால் அழிந்துவிட்டன
மீன்களும் நீர் வாழ் உயிர்களும்.
படிப்படியாக நெகிழி குப்பைகளால் நிரப்பப்பட்டு
அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்ட
அவ்விடத்தில் தான் உயர்ந்து நிற்கிறது
பல தளங்களை கொண்ட அடுக்ககம்.
பத்தாவது தளத்தில் பளிங்கு தரையோடு
சொகுசாக கட்டப்பட்டுள்ளது
நீல நிறத்தில் நீச்சல் குளம்.
சரும நோய்களை உண்டாக்கக்கூடிய
ரசாயன கலவை தண்ணீரில்
பெரும் கட்டணம் செலுத்தி
மீன்களைப்போலவே
நீந்திக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.