ஊர்கூடி மரங்களையே வெட்டி விட்டு
------ஊர்க்குளங்கள் வற்றியதே என்று தான்
சேர்ந்தே புலம்புவதில் என்ன பயன்?
------சீர்படுமோ அழகான நீர்வற்றிய குளம்
காத்திருப்பில் பயனேது மில்லை தானே!
------கானல்நீரை பருகத்தான் முடியு மாமோ ?
நீர்தேடி ஓடுகின்ற வேர்களெல் லாம்
------நீரின்றி போனபின் நிழலும் மாயமாமே!
களத்துமேடு தூசியெலாம் பறந்தே வந்து
------கண்களிலே விழுந்திடு மென்றே பயந்து
களத்துமேடு மனையினை விலை பேசி
------கனரக தொழிற்சாலை கட்டிய பின்னே
அளவில்லா புகையும் சூழ்ந்தே தான்
------அதுவந்து வீட்டையே சுற்று தம்மா !
குளத்துநீரில் கழிவுநீரை கலக்கி விட்டு
------குடிப்பதற்கு நீரில்லை என்பது ஏனோ?
சொகுசாக நகரத்தில் வாழ்வ தற்கே
------சொந்தநிலம் அத்தனையும் விற்று விட்டு
பகட்டாக பட்டினமும் சேர்ந்த பின்னே
------பகலிரவு பாராமல் உழைத்தே தான்
நகரத்து சந்தடியில் தொலைந்து விட்டு
------நம்வாழ்க்கை இனிதென்று கூறிடு வோமே!
சுகமான கிராமத்தையே தேடி போனால்
------சுட்டுகின்றார் நீர்வற்றிய குளத்தை தானே!
ஆறுகுளம் குளிப்பதிலே ஆனந்தம் தான்
------அதன்நீரில் துள்ளியோடும் மீன் கூட்டம்
சேறுகுளமதில் பூத்திடும் தாம ரையும்
------செந்நிறத்தில் மனமயக்கி நிற்கு மம்மா!
வீறுகொண்டு குளம்குட்டை சீர்ப டுத்த
------விரைகின்ற துடிப்பான இளைஞர் கூட்டம்!
ஆறுதலாய் அவர்கட்கு உதவி செய்தால்
------ஆங்காங்கே நீர்வற்றிய குளங்க ளேது ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.