மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
அது ஒரு மழை இரவு..
மனைவியின் ஆலிங்கன ஆசையில்
மச்சுவீட்டில் ஏறி பாம்பை கயிறாகப் பிடித்து
மனைவி முன் நிற்க
அவள் சொன்னாள்
“என் ஆசை தவிர்;”
“அவன் ஆசை கொள் ”
பிறந்தது துளசி இராமாயணம்
அது ஒரு மழை இரவு..
ஓட்டைத் தகரக் குடிலில் விழுந்த
மழைத்துளி தான் தாய்ப்பாலெனச்
சப்பிய குழந்தையை அணைத்து
அழுதவளின் வேதனையில்
கணவன் எழுதினான் மூலதனம்
அது ஒரு மழை இரவு..
இயற்கையின் தாய்ப்பாலாய்
மழைத்துளி விழ வழியும்
தாயின் மடியைச் சுவைத்துவிட்டு
சிலிர்த்து நின்றது ஆட்டுக்குட்டி
அது ஒரு மழை இரவு..
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
தெரிந்த மழையின் கம்பீரம்
சற்றே காதலில் என்னுள்ளும் புகுந்தது
அலறிய அலைபேசியை அணைத்தேன்
மழைத்துளியின் சங்கீதம் கேட்க
- மகேஸ்வரி சற்குரு