மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
இரவு மழை பொழிந்தாலும்
உறவு மழையில் நனைந்தாலும்
உள்ளங்கள் தோறும் மகிழ்ச்சிதானே!
பகலென்ன இரவென்ன
பார் செழிக்கச் தேவை மழை தானே
மேகம் கடலில் வாங்கிச் சுமந்தே
கருக்கொண்டே கார்முகிலாகி
மலையரசியின் மரக்கரங்களால்
ஈர்க்கப்பட்டு காற்றோடு கலந்தே
நிலமகளைக் குளிரூட்டி ஆறு குளம்
நிரப்பித் தாவி உயிரெல்லாம்
ஆனந்தம் அடையச் செய்தே
பிறப்பிடமாம் கடலைச் சேர்வது மழைதானே!
படைத்தவனின் பெருமை பேசும்
பண்புமிக்க உயிர்நீரும் மழை தானே!
பகல் மழையால் பாதிப்பு வரக்கூடும்
இரவு மழை பேரின்பம் தரக்கூடும்
இரவு மழையே தவறாது வருவாயே
இந்தியாவில் இன்பமழைபொழிவாயே.
- புலவர் நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை