ஒண்டுதற்கு இடமுமின்றி
ஓடுதற்குவழியுமின்றி
நனைத்துக் கொண்டிருக்கிறது
நடைபாதை வாசிகளை
இந்த மழை இரவு.
தெரு நாய்கள்
இங்குமங்கும் அலைகின்றன
நனைந்து கொண்டே
மனிதருக்குப் போட்டியாக
இடம் பிடிப்பதற்கு.
இளந்தம்பதியரின்
இன்ப இரவாய் ஆக்க
மழை இரவு தவறி விட்டது
ஒழுகும் நீர்
பிடித்து வைக்கப் பாத்திரங்களின்றி.
நடுங்கிக் கொண்டு
முணுமுணுத்தவாறு
சபிக்கின்றனர்
முதியோர்கள் குளிர் பொறுக்காமல்.
காமத்தைத் தீர்த்துக் கொள்ள
மறைவிடமின்றி
ஒட்டி உராயதலில்
நிறைவு பெறுகிறான் ஒருவன்
குளிரூட்டப்பட்ட அறையில்
தூக்கம் வராமல் நெளிபவன்
அறைக்கு வெளியே வந்து
நடக்கும் மழைஇரவுக் காட்சிகளை
ரசித்துக் கொண்டிருக்கிறான்
பெய்யும் மழையையும் சேர்த்து.
அடாத மழை காரணமாய்
அடுத்த நாள் நிச்சயம்
பள்ளி விடுமுறை கிட்டுமெனத்
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
நிம்மதியாய்......
- கவிஞர் 'இளவல்’ஹரிஹரன், மதுரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.