மாதவன் என்றதேகொண்டு என்னை இனி இப்பால்பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம், செந்தாமரைக்கண் குன்றம்,
கோது,அவம்இல் என் கன்னற்கட்டி, எம்மான், என் கோவிந்தனே.
'மாதவன்' என்று நான் எம்பெருமானின் பெயரைச் சொன்னேன், மறுகணம், அவன் என்னுள் புகுந்தான், இனி என்னை எந்தவிதமான குறைகளும் எட்டாதபடி செய்தான், அத்தகைய என் கோவிந்தன், தீய பாவங்களைக் கெடுக்கும் அமுதம், செந்தாமரைக்கண்ணன், குன்றுபோல் வலுவானவன் / நிலைமாறாதவன், குற்றம், குறை எதுவும் இல்லாத என்னுடைய வெல்லக்கட்டி, நம் தலைவன்.
•••
பாடல் - 4
கோவிந்தன், குடக்கூத்தன், கோவலன் என்றுஎன்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு, என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான், வல்லன் எம்பிரான் விட்டுவே.
கோவிந்தன், குடக்கூத்து ஆடியவன், கோவலன் என்றெல்லாம் எம்பெருமானின் திருப்பெயர்களைச் சொல்லி ஆடினேன், அவனுடைய தெய்வத்தன்மையையும், அவன் தானாகத் திகழும் தன்மையையும் பாடி ஆடினேன், உடனே, அவன் எனக்கு அருள்செய்தான், என்னைத் தனக்கு அடிமையாக்கினான், என் பாவங்களைச் சிதறடித்து ஓடவிட்டான், ஏழேழு பிறவிகளிலும் என்னுடைய உறவினர்களைத் தனக்கு உரிமையானவர்களாக்கினான், அத்தகைய எம்பெருமான், எல்லாம்வல்ல விஷ்ணு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.