அணைவது அரவுஅணைமேல், பூம்பாவை ஆகம்
புணர்வது, இருவர் அவர் முதலும்தானே,
இணைவன்ஆம் எப்பொருட்கும், வீடு முதல்ஆம்,
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
ஆதிசேஷன் என்கிற பாம்புப் படுக்கையின் மீது பள்ளிகொள்கிறவன், தாமரை மலரில் திகழும் திருமகளை அணைக்கிறவன், சிவன், பிரம்மன் என்ற இருவரும் தோன்றக் காரணமானவன், எல்லாப் பொருள்களாகவும் திகழ்கிறவன், மோட்சத்துக்குக் காரணமானவன், பிறவிக்கடல் நீந்துவோருக்குத் தெப்பமானவன் எம்பெருமான்.
•••
பாடல் - 2
நீந்தும் துயர்ப் பிறவிஉள்பட மற்று எவ் எவையும்
நீந்தும், துயர் இல்லா வீடு முதல்ஆம்,
பூந்தண் புனல் பொய்கை யானை இடர்கடிந்த
பூந்தண் துழாய் என் தனிநாயகன் புணர்ப்பே.
பூக்கள் நிறைந்த, குளிர்ச்சியான நீரைக்கொண்ட பொய்கையில் கஜேந்திரன் என்கிற யானையின் துன்பத்தை நீக்கியவன், பூக்கள் நிறைந்த, குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவன், என் தனி நாயகன், வனுடைய உறவானது, நீந்திக் கடக்க வேண்டிய துன்பமாகிய பிறவித் துன்பத்தில் தொடங்கி எல்லாத் துன்பங்களையும் நீக்கும், துன்பமில்லாத மோட்சத்தைத் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.