நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9,10

ஏழேழு பிறவிகளுக்கும்

செ.குளோரியான்

பாடல் - 9

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின்கீழ்
நாழ்மை பல சொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம், இந்நோய்க்கும் ஈதே மருந்து,
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.

(தோழி சொல்கிறாள்)

உங்கள் மகளுடைய நோய் தீர்வதற்காக கீழ்மைக்குணத்தாலே நீங்கள் ஏதேதோ செய்கிறீர்கள், ஒரு கீழான மகன் முழவை இசைக்க, அதனருகே நின்று பல குற்றமான சொற்களைச் சொல்கிறீர்கள், அணங்கு ஆடுகிறீர்கள், இந்தக் கொடுமையை என்னால் பார்க்க முடியவில்லை. இதையெல்லாம் நிறுத்துங்கள், முறையாகக் கண்ணபிரானின் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்துங்கள், உங்கள் மகளுக்கு வந்திருக்கும் நோய்க்கு அதுவே மருந்து, உங்களுடைய ஏழேழு பிறவிகளுக்கும் நன்மை தருவதும் அதுவே.

******

பாடல் - 10

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால்,
நும் இச்சை சொல்லி, நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப்படு மறைவாணனை, வண் துவராபதி
மன்னனை ஏத்துமின், ஏத்துதலும், தொழுது ஆடுதுமே.

(தோழி சொல்கிறாள்)

தாய்மார்களே, உங்கள் மகள் எம்பெருமானையன்றி இன்னொரு தெய்வத்தை நினைக்கமாட்டாள், தொழமாட்டாள், ஆகவே, உங்களுக்குப் பிடித்த விஷயங்களையெல்லாம் அவளிடம் சொல்லாதீர்கள், அதனால் உங்களுடைய தோள்கள்தான் நோகும், என்றைக்கும் நிலைத்திருக்கிற வேதங்களால் சொல்லப்படுகிறவன், வளம் நிறைந்த துவராபதியின் அரசன், அந்தப் பெருமானைப் போற்றுங்கள், உடனே உங்கள் மகள் குணமாகிவிடுவாள், அவளும் அப்பெருமானைப் போற்றி ஆடுவாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT