நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி -  பாடல் 7, 8

வெறுமனே உடம்பை வளர்த்து

செ.குளோரியான்

நீர்மைஇல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார்மல்கு சேனை அவித்த
பரம்சுடரை நினைந்து ஆடி
நீர்மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என்செய்வாரே?

நல்ல குணமில்லாத நூறு பேருடைய (கௌரவர்களுடைய) படை பூமியை நிறைத்து நின்றது. அப்படையை அழித்து, அந்த நூறு பேரும் வீழும்படி செய்து, ஐந்து பேருக்கு (பாண்டவர்களுக்கு) அருள்செய்தவன், பரம்சுடர், எம்பெருமான், அப்பெருமானை நினைத்து ஆடவேண்டும், கண்களில் நீர் மல்க வேண்டும், நெஞ்சம் குழைய வேண்டும், வருந்த வேண்டும், இதையெல்லாம் செய்யாமல் வெறுமனே உடம்பை வளர்த்து வயிற்றைப் பெருக்கிக்கொண்டிருப்பவர்கள் உத்தமர்களுக்குப் பயன்படுவார்களோ? (மாட்டார்கள்.)

•••

பாடல் - 8

வார்புனல் அம் தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.

நீர் கொட்டுகின்ற, அழகிய, குளிர்ந்த அருவிகள் நிறைந்த வட திருவேங்கடத்திலே எழுந்தருளியிருக்கும் பெருமான், நம் தந்தை, அவனுடைய பல பெயர்களைச் சொல்லிப் பிதற்றியபடி பல ஊர்களுக்குச் சென்று திரிய வேண்டும், பார்க்கிறவர்கள் நம்மைப் ‘பித்தர்கள்’ என்று சொல்லும்படி ஆட வேண்டும், அவன்மீது அன்பு பெருக, உலகமக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி நடனமாட வேண்டும், அவ்வாறு செய்பவர்களைத் தேவர்கள் வணங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT