நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

எம்பெருமானுக்குத் தோற்றம் இல்லை

செ.குளோரியான்

திரியும் காற்றொடு அகல் விசும்பு,
திணிந்த மண், கிடந்த கடல்,
எரியும் தீயொடு இருசுடர், தெய்வம்,
மற்றும் மற்றும் முற்றுமாய்க்
கரியமேனியன், செய்ய தாமரைக்
கண்ணன், கண்ணன், விண்ணோர் இறை,
சுரியும் பல் கரும்குஞ்சி எங்கள்
சுடர்முடி அண்ணல் தோற்றமே.

திரிகின்ற காற்று, அகன்ற வானம், திண்மையான நிலம், கிடந்த கடல், எரியும் தீ ஆகிய ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன் என்கிற இரு சுடர்கள், தெய்வங்கள், இன்னும் அனைத்துமாகத் திகழ்கிறவன், கரிய திருமேனி கொண்டவன், செந்தாமரைக் கண்களைக்கொண்ட கண்ணன், விண்ணோர்களின் இறைவன், எம்பெருமான், அத்தகைய பெருமான், சுருண்ட, கருத்த தலைமுடியோடும் சுடர்வீசும் திருமுடியோடும் தோன்றுகிறான்.

***

பாடல் - 6

தோற்றக் கேடு அவை இல்லவன்,
உடையான், அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள்பெற்று அவன் அடிக்கீழ்ப்
புக நின்ற செம்கண்மால்,
நாற்றம், தோற்றம், சுவை, ஒலி, உறல்
ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்று ஒருவரை
யான் இலேன் எழுமைக்குமே.

எம்பெருமானுக்குத் தோற்றம் (பிறவி) இல்லை, அழிவும் இல்லை, ஆனால், தோற்றமும் அழிவும் உடைய பொருள்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவன் அவன், அத்தகைய பெருமான், சிவந்த கண்களையுடைய மால், இரணியனை அழிப்பதற்காகக் கோபத்தோடு நரசிம்மமூர்த்தியாக வந்தான், அப்போது, பிரகலாதன் அவனுடைய அருளைப்பெற்றான், அவனது திருவடிகளின்கீழ் புகுந்து நின்றான், மணம், வடிவம், சுவை, ஒலி, உற்று அறியும் உணர்ச்சி ஆகிய அனைத்துமாகத் திகழ்கிறவன் எம்பெருமான், வானவர்களின் காளை, எங்கள் தலைவன், எப்பொழுதும் அவனைத்தவிர இன்னொருவர் எனக்கில்லை, அவனே என் தெய்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT