பாடல் 9
கூடிற்று ஆகில் நல் உறைப்புக்
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர்கொடி எம்
மாயன் ஆவது அது அதுவே,
வீடைப் பண்ணி ஒரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும், இல்லை அல்லரே.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றானால், அது நல்ல வாய்ப்புதான். பொதுவாக ஒன்றுசேராத அவை அவ்வாறு கூடினால், ஜீவாத்மா ஆடும் கருடக்கொடியையுடைய எம்பெருமானாக ஆகிவிடலாமே, இது நிகழக்கூடிய ஒன்றா? (இல்லை.) பலர் தங்கள் மனம் எண்ணியவகையில் வீடுபேற்றைக் கற்பனை செய்வார்கள், கடந்தகாலம் நிகழ்காலம் கடந்தகாலம் எனப் பல பிறவிகளில் உழன்று திரிவார்கள், அப்படிப்பட்ட சில யோகிகளும் இருக்கிறார்கள், இல்லாமல் போய்விடவில்லை.
பாடல் 10
உளரும் இல்லை அல்லராய்
உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர், அவர் வந்து என்
உள்ளத்துள்ளே உறைகின்றார்,
வளரும் பிறையும் தேய்பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும்போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே.
எம்பெருமான் தன்னுடைய பக்தர்களுக்காக எப்போதும் இருக்கிறார், இல்லாமல் போவதில்லை. பக்தர் அல்லாதவர்களுக்கோ அவர் இருப்பதில்லை, இப்படி இருக்கும் இணையற்ற அவர், என்னுடைய உள்ளத்தினுள்ளே வந்து உறைகின்றார். அப்படி அவர் உறைவதால், வளர்பிறை, தேய்பிறை எனத் தேய்ந்து வளரும் சந்திரனைப்போலவோ, சூரியனும் இருட்டும் மாறி மாறி வருவதுபோலவோ ஞானமும் அஞ்ஞானமும் மாறி மாறி வருவதில்லை. எப்போதும் ஒரே தன்மையோடே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.