பிரபஞ்சன் சில நினைவுகள் - ராஜ்ஜா; பக்.96; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், எண்.17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.
புதுச்சேரியைச் சேர்ந்த நூலாசிரியர், அதே ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பழகிய அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. புதுச்சேரி செட்டித் தெருவில் முதன்முதலாக பிரபஞ்சனைப் பார்த்தது முதல் பிரபஞ்சன் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்தது வரை இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
'எமக்குத் தொழில் எழுத்து' என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் பிரபஞ்சன். அதிலும் கூட படைப்பிலக்கியவாதியாக வாழவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். எழுத்து தொடர்பான இதழியல் பணிகள்கூட, அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான வைவா வோசி தேர்வுக்கான நிகழ்ச்சியின்போது அளிக்கப்படும் தேநீர், சமோசா போன்றவற்றை பிரபஞ்சன் ஏற்பாடு செய்து தந்ததை மிகுந்த நன்றியுடன் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபஞ்சனின் பல படைப்புகளை நூலாசிரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சக எழுத்தாளரான திலகவதியின் கதைகளை மொழிபெயர்க்குமாறு பிரபஞ்சன் கேட்டுக் கொண்டதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
புதுவை பொன்னித்துறைவன், மருத்துவக்குடி மகாராஜன் , பிரபஞ்சக் கவி என்ற பல பெயர்களில் பிரபஞ்சன் கவிதைகள் எழுதியது, ஜெயகாந்தனின் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' கதையை மொழிபெயர்க்க நூலாசிரியர் ஜெயகாந்தனிடம் எழுத்து மூலம் அனுமதி வாங்கிக் கொண்டது போன்ற பல சுவையான தகவல்கள் அடங்கியுள்ள சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.