புதுக்கோட்டை- பன்றி நாடு முதல் புதுகை வரை (முதல் தொகுதி) ; அண்டனூர் சுரா; பக்.280; ரூ.330; சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை - 40; ✆ 98409 52919.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சமஸ்தான ஒருங்கிணைப்பில் முதலில் இந்திய அரசுடன் இணைந்து புதுக்கோட்டை சமஸ்தானம். புதுக்கோட்டை மாவட்டத்தை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தில் விவாதமாகி, போராட்டங்கள் நடைபெற்று பின்னர், மாவட்டமாக வழிவகுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தேவைகள் குறித்து அப்போது நாடாளுமன்றத்தில் பேசியவர் ஆர்.உமாநாத் என்றாலும், அதற்கான கனவை விதைத்தவர் வை.கோவிந்தன். இவர் பாரதியாரின் கவிதைகளைப் பட்டிதொட்டியெங்கும் சேர்த்த சக்தி இதழின் நிர்வாக ஆசிரியர்.
சுதந்திரத்துக்குப் பின்னர், சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்த நேரத்தில், சர்தார் வல்லபபாய் படேலிடம் "எனது சமஸ்தானத்தை இன்றிருந்து இந்திய யூனியனுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று அந்த சமஸ்தான உரிமையாளர் கூறியதைக் கேட்டு உள்துறை மந்திரியே நம்ப முடியாமல்தான் பார்த்திருக்கிறார்.
18-ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சு படைக்கு எதிரான போரில் பிரிட்டிஷார்களுக்கு தொண்டைமான்கள் படை, ஆயுதங்கள் கொடுத்து உதவியதால், அந்தப் போரில் பிரிட்டிஷார்களால் வெற்றி பெற முடிந்துள்ளது.
இந்தியாவுடன் ஒன்றிணைப்பு, பன்றி நாடு - பன்றியூர் நாடு இரண்டுக்கும் புதுக்கோட்டையுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு, மாவட்டமாக உருவானது, சாதிவாரிக் கணக்கெடுப்பு, புதுக்கோட்டை பெயர் வரலாறு, புதுக்கோட்டை மன்னரின் அரண்மனை, அதன் தலைமையிடம் மின் விளக்குகளால் ஒளிர்வதற்கு முன், அதன் ஆளுகைக்குள்பட்ட
கிராமமான இராமச்சந்திரபுரம் முதல் மின் வசதி பெற்றது உள்ளிட்ட 24 தலைப்புகளில் புதுக்கோட்டையின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
வரலாற்றின் போக்கில் மிகுந்த சிரத்தையோடு சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான புதுக்கோட்டையைக் கண்ணாடிபோல காட்டியுள்ளார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.