10. சந்திரனை மாகங்கை - பாடல் 1
சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான்,
சந்திரனை மாகங்கை
(அதிகை வீரட்டம் - திருத்தாண்டகம்)
முன்னுரை
சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதக்க, திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் அருகே கரையேறினார். பல மங்கல வாத்தியங்களை முழக்கி, அதிகை நகரத்து மக்கள், அவரை எதிர் கொண்டார்கள். தெருக்களும் வீடுகளும் அலங்காரம் செய்யப்பட்டு, ஒரு விழா போன்று, அப்பர் பிரானின் வருகையை மக்கள் கொண்டாடினார்கள். அப்போது அப்பர் பிரானின் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்கும் பெரியபுராண பாடலை நாம் இங்கே காண்போம்.
Advertisement
தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமு
நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே
தைவருதல் என்றால் மெல்ல வருடுதல் என்று பொருள். பெருமானின் திருவடிகளை எப்போதும் மனதினால் வருடுவது போன்ற இனிமையான நினைவுகளுடன் அப்பர் பிரான் இருந்ததாகவும், அவரது வாய் எப்போதும் தேவாரப் பாடல்களை பாடியவாறும், இறைவனைப் பற்றிய நினைவுகளால் கண்கள் நீர் பொழிந்தவாறும் இருந்ததாக இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். இவ்வாறு அதிகை நகருள் நுழைந்த அப்பர் பிரான், கோயிலுக்குள் சென்றபோது அருளிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. தன்னுடன் இருக்கும் அடியார்களுக்கு, மெய்ப்பொருளை காட்டுவது அருளாளர்களின் செயல். பெம்மான் இவன் அன்றே என்று நமக்கு, சிவபெருமானை அடையாளம் காட்டிய ஞான சம்பந்தப் பெருமானைத் தானே நாம், நமது ஞானாசிரியனாக ஏற்றுக் கொள்கின்றோம். அதேபோல், அப்பர் பிரானும் இங்கே சிவபெருமானை நமக்கு அடையாளம் காட்டுகின்றார். சிவபிரானின் திருவுருவத்தின் பல அம்சங்களையும், அவனது குணங்களையும், அவனது வீரச் செயல்களையும் சொல்லி, அவன்தான் அதிகை வீரட்டத்தில் உறைகின்றான் என்று ஒவ்வொரு பாடலையும் முடித்து, பெருமானை நமக்கு அடையாளம் காட்டுவதால், இந்த பதிகத்திற்கு அடையாளத் திருத்தாண்டகம் என்று பெயர்.
பாடல் 1
சந்திரனை மாகங்கை திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாகனாமே பசுவேறுமே பரம யோகியாமே
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கும்மே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

மாசுணம் = பாம்பு;

பொழிப்புரை

சிவபெருமான், பரந்த கங்கை நதி தனது அலைகளால் மோதுமாறு தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை வைத்துள்ளவர்; அவர் சாமவேதத்தினை விரும்பிக் கேட்பவர்; கையில் கபாலம் ஏந்தியவராகவும், பொன் போன்ற மேனியராகவும் காட்சி அளிக்கும் சிவபெருமான், பந்துகள் வந்து சேரும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; காளையை வாகனமாகக் கொண்டுள்ள அவர், அனைத்து யோகிகளுக்கும் மேலான யோகியாகத் திகழ்கின்றார். ஐந்து தலைகளை உடைய பாம்பினைத் தனது இடையில் கச்சாக, இறுக கட்டியவர் சிவபெருமான். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.