முகப்பு
தினம் ஒரு தேவாரம்

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 1

கடந்த பத்து நாட்களாக, மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பொருளை சிந்திந்து வந்த நாம்,

Updated On : 2 நவம்பர், 2015 at 5:37 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:56 PM

(அதிகை வீரட்டம் - பண்: காந்தாரம்)

பின்னணி

கடந்த பத்து நாட்களாக, மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பொருளை சிந்திந்து வந்த நாம், அந்த பதிகம் பாடிய அப்பர் பிரானின் உடலுக்கு, மிகுந்த வெப்பத்தை விளைவிக்கும் சுண்ணாம்பு காளவாய் எந்தவிதமான கெடுதியும் விளைவிக்காதவாறு சிவபெருமான் காப்பாற்றியதையும் நாம் அறிந்தோம். அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நாம் இந்த பதிகத்தைப் பற்றிய சிந்தனை மூலம் உணரலாம்.

Advertisement

அப்பர் பிரானை, நீற்றறையில் இட்டு பூட்டி ஏழு நாட்கள் கழிந்த பின்னர், பல்லவ மன்னன், சமண குருமார்களை நீற்றறையை திறந்து பார்க்குமாறு பணித்தான். சுண்ணாம்புக் காளவாயின் வெப்பம் அவரது உடலினை உருத்தெரியாத வகையில் உருக்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், தங்களது மதத்தை விட்டுச் சென்ற தருமசேனர் (சமண சமயம் சார்ந்து இருந்த போது அப்பர் பிரானின் பெயர்) இறந்தார் என்று மகிழ்ச்சியுடன் நீற்றறையைத் திறந்த சமணர்கள், அறையின் உள்ளே இருந்த காட்சியைக் கண்டு வியந்தார்கள்.

ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் இருந்த பின்னரும் அப்பர் பிரான் தனது உடலுக்கு எந்த விதமான ஊனமும் இல்லாமல் காணப்பட்டதைக் கண்ட சமணர்கள் முதலில், இது என்ன அதிசயம் என்று திகைத்தனர். பின்னர் தங்களது சமயத்தைச் சார்ந்து இருந்தபோது அவர் கற்றுக்கொண்ட மந்திர சாதனையால் உயிர் பிழைத்து இருந்தார் என்று தங்களைத் தேற்றிக்கொண்ட சமணர்கள், அப்பர் பிரானுக்கு கொடிய நஞ்சு கலந்த பால் சோற்றினை ஊட்டினார்கள். சமணர்களின் சூழ்ச்சியை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்க்கப் பட்டுள்ளது.

அதிசயம் அன்று இது முன்னை அமண் சமயச் சாதகத்தால்

இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து

மதி செய்வது இனிக் கொடிய வல்விடம் ஊட்டுவதென்று

முதிர வரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந்தார்கள்

ஆனால் சிவபிரான் அருளால் நஞ்சும் அமுதமாக மாறியது. இந்த நிகழ்ச்சியினைக் குறிப்பிடும் சேக்கிழார், பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த, உலகத்தையே அழிக்கும் வல்லமை பெற்ற நஞ்சினை அமுதமாக மாற்றிய சிவபிரானின் அடியாருக்கு நஞ்சு அமுதமாக மாறுவதில் அதிசயம் ஏதும் இல்லை என்று நயமாக கூறுகின்றார். நஞ்சு ஊட்டப்பட்ட தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் பின்னாளில், நனிபள்ளி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தில், சிவபிரான் நஞ்சினை அமுதமாக மாற்றி தன்னைக் காத்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார்.

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே

அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்

வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த

நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிபள்ளி அடிகளாரே

தொடர்ந்து செய்த இரு சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பிய நாவுக்கரசர் இனி பிழைத்திருந்தால் தங்களது உயிர்களுக்கும் மன்னவனது ஆட்சிக்கும் தீங்கு நேரிடலாம் என்று மன்னவனிடம் உரைத்த சமணர்கள், மதயானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்து அவரைக் கொன்று விடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். சமணர்களின் ஆலோசனைக்கு மன்னவனும் ஒப்புதல் அளித்தான்.

கொலை வெறி கொண்ட மதயானை, தலை மட்டும் வெளியே தெரியுமாறு கழுத்து வரை உடல் பூமியில் புதைக்கப் பட்ட நிலையில் நின்றிருந்த அப்பர் பிரானை நோக்கி கட்டவிழ்த்து விடப்பட்டது. கட்டுத் தறிகளை முறித்துக் கொண்டு, பெரிய முழக்கம் இட்டுக் கொண்டு, மதநீர் பெருக மிகவும் சினத்துடன் ஓடி வந்த யானையைக் கண்டு ஆகாயத்தில் வட்டமிட்ட பறவைக் கூட்டங்கள் பயந்து குரல் எழுப்பின. வரும் வழியில் இருந்த தடைகளை எல்லாம் முறித்துக் கொண்டு தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்த யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அப்பர் பிரான், சிவபிரானின் திருவடிகளையே நினைத்திருந்து இந்தப் பதிகம் அருளினார்.

இந்த நிகழ்ச்சி திருவதிகையில் நடைபெறவில்ல எனினும் அனைத்துப் பாடல்களிலும் அதிகை வீரட்டம் குறிப்பிடப்படுவதால், திருவதிகை தலத்திற்கு உரிய பதிகமாக கருதப்படுகின்றது. அதிகை வீரட்டம் தவிர்த்து வேறு எந்த தலங்களுக்கும் அப்பர் பிரான் செல்லாத நிலையில் பாடப்பட்ட பதிகம் என்பதாலும், தீர்க்கமுடியாத சூலை நோயிலிருந்து தன்னை விடுவித்த பிரான் என்பதாலும், அதிகை வீரட்டத்து இறைவனே அவரது கருத்தில் நிறைந்து இருந்தார் போலும். இந்த பதிகம் உலகத்தவர் உய்வதற்காக பாடப்பட்ட பதிகம் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த கொடிய சூழ்ச்சியிலிருந்து அப்பர் பிரான் உயிர் பிழைத்து தப்பியதால் தானே, நாம் இன்று அப்பர் பிரானின் தேவாரப் பாடல்கள் பாடி, உய்வினை அடைய முடிகின்றது. அதனால் தான் மண்ணுலகம் உய்ய என்று சேக்கிழார் கூறினார் போலும்.

அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனை தம் மேல் வரக் கண்டு .

விண்ணவர் தம் பெருமானை விடை உகந்தேறும் பிரானைச்

சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தை

மண்ணுலகு உய்ய எடுத்து மகிழ்வுடனே பாடுகின்றார்

சிவபிரானின் திருவடிகளையே தியானம் செய்து கொண்டு இருந்த அப்பர் பிரானுக்கு சிவபிரானின் உருவம் அவரது மனதினில் நிறைந்து இருந்தது போலும். சிவபிரானின் அடையாளங்களும், அவர் அணிந்துள்ள பொருட்களும் மிகவும் விவரமாக இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சொல்லப்படுகின்றன. தான் எந்த நிலைமையில் இருந்தாலும் இறைவனை ஏத்துவன் என்று இதற்கு முன்னர் சமணர்களால் வந்த சோதனையை எதிர் கொண்ட அப்பர் பிரான், அதே நிலையில் தான் யானை தன்னை நோக்கி வந்தபோதும் இருந்தார். சிவபிரானின் அடியார் என்பதால் தான் எவருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும், வரும் நாட்களில் தான் அஞ்சும்படியான நிகழ்ச்சி ஏதும் வராது என்றும் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றார்.

பாண்டிய நாட்டிற்கு செல்லும் முன்னர் சம்பந்தப் பெருமான் அருளிய கோளறுத் திருப்பதிகத்தில், சிவபிரான் தனது உள்ளத்தில் புகுந்ததால் கோள்களோ, விலங்குகளோ, மற்றும் உள்ள பொருட்களோ தனக்கு மிகவும் நல்லனவாக இருக்கும் என்று ஞானசம்பந்தர் நம்பிக்கையுடன் கூறுவது இங்கே ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

பாடல் 1

சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து = வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர் = அடியவர். அகலம் = மார்பு, சுண்ணம் = பொடி, முரண் = போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை = உரித்துத் தனது உடலின் மேல் போர்த்திக்கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ள வேண்டும். திண்மை = வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.

பொழிப்புரை

குழைத்துப் பூசப்பட்ட திருநீறும், சந்தனமும் தனது உடலில் பூசிகொண்டவரும், சூளாமணி போல் சுடர்விடும் சந்திரனைத் தனது முடியில் அணிந்தவரும், புலியின் தோலை உரித்து அதனைத் தனது உடையாக ஏற்றவரும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறம் கொண்ட மேனியை உடையவரும், போர்க்குணம் மிகுந்த இடபத்தைக் காவலாகக் கொண்டவரும், தனது அகன்ற மார்பினில் பாம்பினை அணியாக அணிந்தவரும் பலருக்கும் நன்மை செய்யும், திண்மையான கெடிலக் கரையில் உள்ள திருவதிகை நகரில் உறைபவரும் ஆகிய சிவபிரானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.