6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 8
அடுத்த பிறவி நமக்கு என்ன பிறவியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் புழுவாய்ப் பிறக்கினும் என்று கூறுகின்றார்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே

விளக்கம்

அடுத்த பிறவி நமக்கு என்ன பிறவியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் புழுவாய்ப் பிறக்கினும் என்று கூறுகின்றார். எந்த பிறவியாக இருந்தாலும் இறைவனின் நினைவு இருக்க வேண்டும் என்பதே அப்பர் பிரானின் அவா.

இறைவனிடம் நாம் யாதும் தனியாக இறைவனிடம் ஏதும் வேண்டத் தேவையில்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவனை வழிபட்டால் போதும் அவன் நமது தேவைகளை நிறைவேற்றுவான் என்றும் கூறுவார்கள். பல பதிகங்களில் அப்பர் பிரான் சிவபெருமானிடம் வேண்டுவதை நாம் உணரலாம். அவரது வேண்டுகோள் அனைத்தும் ஒரே வகையானவாக இருப்பதையும் நாம் காணலாம். சிவபிரானே உனது நினைவு, நான் இறக்கும் சமயத்திலும் இருக்க வேண்டும், நான் இறக்கும் சமயத்திலும் எனக்குத் துணையாக நீ இருக்க வேண்டும், நான் இறக்கும் போது உனது நினைவுடனே எனது உயிர் பிரியவேண்டும் என்றும், எனது உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னர் நீ மறவாது எனது உயிரினை காப்பாற்றவேண்டும் என்றும், உனது அடையாளங்கள் ஆகிய மூவிலைச் சூலம், இடபம் ஆகியவை எனது தோளில் பொறிக்கப்பட வேண்டும் என்றும், உனது திருவடியில் உள்ள திருநீறு எனது நெற்றியில் பூசப்பட வேண்டும் என்றும், உனது திருவடி எனது தலையில் மீது பட வேண்டும் என்றும் பல பாடல்களில் வைக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் சிவபெருமானின் கருணை தனக்கு என்றும் வேண்டும் என்ற வகையில் இருப்பதை நாம் உணரலாம்.

காரைக்கால் அம்மையார் கயிலாயம் சென்று சிவபிரானைக் காண்கின்றார். அப்போது சிவபெருமான் வேண்டும் வரம் யாது என்று அம்மையாரை கேட்கின்றான். அதற்கு அம்மையார் பிறவாமை என்ற வரத்தை முதலில் கேட்கின்றார். ஒருக்கால் பிறவி என்று ஒன்று நேர்ந்துவிட்டால், அந்தப் பிறவியிலும் சிவபிரானை மறவாமல் இருக்க வேண்டும் என்ற வரத்தையே நாடுகின்றார். இந்தச் செய்தியை கூறும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காணலாம்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.

புழுவாகப் பிறந்தாலும் உனது திருவடிகளின் நினைவு எனது மனத்தினில் வழுவாது இருக்கவேண்டும் என்ற அப்பர் பிரானின் வேண்டுகோள் நமக்கு பொன்வண்ணத் திருவந்தாதியில் சேரமான் பெருமாள் நாயனார் விடுக்கும் வேண்டுகோளை நினைவூட்டும்.

பொய்யா நரகம் புகினும் துறக்கம் புகினும் புக்கிங்கு

உய்யா உடம்பினோடு ஊர்வ நடப்ப பறப்ப என்று

நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறை சேர்

மையார் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே

பொய்யா நரகம் = பாவம் செய்தவர்களுக்கு தப்பாமல் கிடைக்கும் நரகம். துறக்கம் = சொர்க்கம்

உய்யா உடம்பு = உய்யப் பெறாமல் அதாவது முக்தி அடையாமல் மீண்டும் பிறவி எடுப்பதால் நமது உயிருடன் பொருத்தப்படும் உடம்பு. நையா விளிதல் = வருத்தமுற்று இறத்தல். நிலத்தினில் ஊர்ந்து செல்லும் புழுவாகப் பிறந்தாலும், நடந்து செல்லும் விலங்காகவோ அல்லது மனிதனாகப் பிறந்தாலும், பறந்து செல்லும் பறவையாகப் பிறந்தாலும், எந்த பிறவியாக இருந்தாலும் இறைவனின் திருவடியை மறவாமல் இருக்கும் வரம் வேண்டும் என்று இந்த பாடலில் சேரமான் பெருமாள் நாயனார் கூறுகின்றார்.

எந்த மொழியாக இருந்தாலும் அருளாளர்கள் வேண்டுவது ஒன்றுபோல் இருப்பதை நாம் காணலாம். ஆதி சங்கரரும் தனது சிவானந்த லஹரீயின் பத்தாவது பாடலில், தான் தனது அடுத்த பிறவியில் மனிதனாக இருந்தாலும், தேவனாக இருந்தாலும், காட்டு மிருகமாக இருந்தாலும், கொசுவாக இருந்தாலும், பசுவாக இருந்தாலும், புழுவாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், இறைவன் மீது பக்தி இருக்குமாகில் அந்த உடலுக்கு எந்த விதத்திலும் குறை இல்லை என்று பாடுகிறார்.

நரத்வம் தேவத்வம் நக வன ம்ருகத்வம் மசகதா
பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம்
சதா த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமானந்த லஹரீ
விஹாரா சக்தஞ் சேத் த்ருதயமிஹ கிம் தேன வபுஷா

மணிவாசகப் பெருமானும் திருச்சதகம் ஆனந்தத்து அழுந்தல் பதிகத்தில் தான் எத்தனை பிறவி எடுத்தாலும் அந்தப் பிறவிகளில் சிவபிரானை மறவாது வணங்க அவனது அருள் வேண்டும் என்று வேண்டுகின்றார்.

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே

ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ

பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்

மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே

ஏன் இவ்வாறு அருளாளர்கள் அனைவரும் எந்த பிறவி எடுத்தாலும் இறைவனின் நினைப்பு இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். சுண்டெலியாக இருந்தாலும், யானையாக இருந்தாலும், குரங்காக இருந்தாலும், தன்னை வழிபடும் விலங்குக்கும் அருள் புரிபவன் சிவபெருமான் என்பது தான் காரணம். இதைத் தான் பிரமபுரத்துப் (சீர்காழியின் பல பெயர்களில் ஒன்று பிரமபுரம்) பதிகம் ஒன்றினில் (2.40.6) சம்பந்தப் பெருமான் பாடுகின்றார். எந்த இடத்தில் பிறந்தாலும், எந்த விதமாக பிறந்தாலும் தனது அடியார்களாக இருந்தால், அங்கே சென்று அவர்களுக்கு அருள் புரியும் தன்மையாளன் சங்கரன் என்று கூறுகின்ற பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏயும் என்றால் மனம் பொருந்திய என்று பொருள்.

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு

இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான் எருது ஏறி

கொங்கு ஏயும் மலர்ச் சோலை குளிர் பிரமபுரத்து உறையும்

சங்கே ஒத்து ஒளிர்மேனிச் சங்கரன் தன் தன்மைகளே

பொழிப்புரை

இந்த உலகத்தில் உன்னைத் தொழுது வழிபடும் அடியார்களுக்கு இரங்கி அருள் செய்யும், திருப்பாதிரிப்புலியூர் உறையும் பிரானே, செழுமையான கங்கை நதியை தனது செஞ்சடையினில் தேக்கி வைத்திருக்கும் தீ வண்ணத்துப் பெருமானே, புண்ணியமே வடிவாக உள்ள பெருமானே, அடியேன் அடுத்த பிறவியில் புழுவாகப் பிறந்தாலும் உனது திருவடிகள் எனது மனத்தினில் நீங்காது இருக்குமாறு வரம் தரவேண்டும்.