7. வெறிவிரவு கூவிள - பாடல் 1
சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதக்க,
(திருவதிகை – திருத்தாண்டகம்)
பின்னணி
சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதக்க, திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப்படும் நகரம்) தலத்தின் அருகே கரையேறினார். கரையேறிய பின்னர் அருகிலிருந்த பாதிரிப்புலியூர் தலத்து இறைவனை கண்டு வணங்கி, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தை (4.94) பாடினார். இந்த விவரங்களையும், ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தின் கருத்தினையும் கடந்த பத்து நாட்களாக நாம் சிந்தித்தோம். சூலை நோயிலிருந்து தன்னை காப்பாற்றிய, அதிகை வீரட்டானத்துப் பெருமானார், அதன் பின்னர் சமணர்களால் விளைந்த பல கொடிய கொலை முயற்சிகளிலிருந்தும் தன்னைக் காத்ததற்கு அவருக்கு நன்றி கூறும் முகமாக, அப்பர் பிரான், கடலூரிலிருந்து அதிகை செல்ல நினைத்தார். திருவதிகை செல்லும் வழியில் திருமாணிக்குழி மற்றும் திருத்தினை நகர் சென்றதாகவும் ஆங்கே பதிகங்கள் அருளியதாகவும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் அந்த பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை. அப்பர் பிரானின் வருகையை அறிந்த அதிகை நகரத்து மக்கள், நகரை அலங்கரித்து, தெருக்களெங்கும் தோரணங்கள் கட்டி வரவேற்றனர். மேலும் நகரின் எல்லையில் அதிகை நகரத்து மாந்தர்களும் பெண்மணிகளும், இசைப் பாடல்களை முழங்கச் செய்து, சுண்ணப் பொடியையும், மலர்களையும், பொரிகளையும் தூவி அப்பர் பிரானை வரவேற்றார்கள். தூய வெண்ணீறு அணிந்த மேனியினராய், உருத்திராக்க வடங்கள் அணிந்து, சிவபெருமானின் திருவடிகளையே சிந்தித்தவராய், சிவபிரான் மீது கொண்ட அன்பினால் மனம் நைந்து கண்களிலிருந்து நீர் பொழிகின்ற கோலத்துடன், தேவாரப் பாடல்களைப் பாடியவாறு அப்பர் பிரான் நகரத்தினுள் நுழைந்தார். அடியார் கூட்டம் புடை சூழ அப்பர் பிரான் திருவதிகை வீரட்டானத்துக் கோயிலுள்ளே புகுந்தார். பெருமானை வணங்கிய அப்பர் பிரானுக்கு, சிவபெருமான் தன்னைக் காத்து அருள்வார் என்ற நம்பிக்கையுடன் சமணர்கள் செய்த சூழ்ச்சியைத் தான் எதிர்கொண்டது நினைவுக்கு வந்தது. தனது நம்பிக்கைக்கு ஏற்றவாறு பெருமான் தன்னைக் காப்பாற்றிய கருணைச் செயலை நினைவு கூர்ந்து, இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, அந்நாள் வரை தான் வணங்காத அறிவிலியாக இருந்த நிலையையும் பல நேரங்களில் அவரை இகழ்ந்தும் பேசியதையும் நினைத்து அப்பர் பிரான் மிகவும் வருத்தம் கொள்கின்றார். தான் அறிவில் ஏழையாக இருந்த நிலையை எண்ணி, அவ்வாறு இருந்த நிலைக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறே என்று முடியுமாறு பாடுகின்றார். அறிவில் ஏழை என்று தன்னை மிகவும் அடக்கமாக கூறிக் கொள்ளும் இந்த பதிகத்தினை ஏழைத் திருத்தாண்டகம் என்று பெரியோர்கள் அழைத்தனர். இந்த பதிகம் தாண்டக வகையைச் சார்ந்தது. இதனை குறிப்பிடும் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நயப்பு என்றால் விருப்பு என்று பொருள். விருப்பு மேலும் மேலும் வளர்ந்து காதலாக மாறி, நாயனார் சிவானந்தத்தில் திளைத்த நிலை, இங்கே நயப்புறு காதலினால் திளைத்து என்று சேக்கிழாரால் குறிப்பிடப்படுகின்றது.
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள்புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம்பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்ததென்று
தம் பரிவால் திருத்தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்
Advertisement
ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறே என்று தான் முன்னம் சிவபெருமானை இகழ்ந்ததற்கு வருந்தும் அப்பர் பிரானின் மனப்பாங்கு நமக்கு பின்னாளில் சுந்தரரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. திருவதிகை நகர் வந்த சுந்தரர் ஊரின் புறத்தில் அமைந்துள்ள சித்தவட மடத்தில் இரவு தங்கினார். அப்போது முதியவர் வேடத்தில் அந்த மடத்திற்கு வந்த சிவபெருமான், சுந்தரர் தலையின் மீது தனது திருவடிகளை வைத்தவாறு உறங்கினார். தூக்கம் கலைந்த சுந்தரர், முதியவரைப் பார்த்து, மறையவரே உமது அடிகளை எனது தலை மீது வைத்த காரணம் என்னே என்று வினவினார். தனது மூப்பின் காரணமாக நிகழ்ந்தது என்று முதியவர் கூற, சுந்தரர் வேறோர் இடத்தில் படுத்து உறங்கலானார். முதியவர் அந்த இடத்திற்கும் சென்று, சுந்தரரின் தலை மீது தனது திருவடிகள் படுமாறு உறங்குவது போன்று நடித்தார். இரண்டாவது முறையாக தனது உறக்கம் கலைந்ததால் சற்றே கோபமுற்ற சுந்தரர், முதியவரை நோக்கி, பல காலும் என்னை மிதித்த நீர் யார் என்று வினவினார். முதியவர், இன்னும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா என்று சொல்லியவாறு மறைந்துவிட்டார். அப்போதுதான், வந்த முதியவர் சிவபெருமான் என்பதை உணர்ந்த சுந்தரர், தம்மானை அறியாத என்று தொடங்கும் பதிகத்தைப் (7.38) பாடினார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் வடவீரட்டானத்து உறைவானை இறை போதும் இகழ்வன் போலியானே என்று முடித்து, இறைவனை அறியாமல் தான் இகழ்ந்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்து இனிமேல் அவ்வாறு இகழமாட்டேன் என்று கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தம்மான் = தலைவன்;
தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறை போதும் இகழ்வன் போலியானே
இறைவனின் திருவடிகள் தனது தலை மேல் பட வேண்டும் என்ற ஆசையினால் உயிர் வாழ்கின்ற தான், இறைவன் தனது ஆசையினை நிறைவேற்ற வந்தபோது, அதனை அறியாமல் இகழ்ந்தேனே என்று தனது வருத்தத்தை சுந்தரர் தெரிவிக்கும் பாடல். தனது தலைவனாகிய சிவபெருமான் நேரில் வந்து தோன்றியபோது, தலைவனை அடையாளம் கண்டுகொள்ளாத அறிவிலியாக தான் இருந்த தனது மடமையை நினைத்து சுந்தரர் வருந்தும் பாடல் இது. திருவதிகைத் தலத்திற்கு அருகில் வந்த சுந்தரருக்கு, அப்பர் பிரான் அருளிய ஏழைத் திருத்தாண்டகம் நினைவுக்கு வந்ததுபோலும். அப்பர் பிரான் வாழ்ந்த மண்ணினை மிதிப்பதற்கு அஞ்சியதால் தானே சுந்தரர் ஊர் எல்லையில் இருந்த மடத்தில் இரவு தங்கினார்.
பாடல் 1
வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

வெறி = நறுமணம், வாசனை: விரவு = கலந்த: கூவிளம் = வில்வம்: தொங்கல் = மாலை: பொறி அரவு = தனது படத்தினில் புள்ளிகளை உடைய பாம்பு: ஏறு = எருது, இங்கே இடபம்; பொன் நிறத்தான் = பிரமன்; புள்ளூர்த்தியான் = பறவையை, அதாவது கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்: அதியரைய மங்கை = அதிகையின் வேறு பெயர் என்று பலரும், அதிகை தவிர்த்த மற்றொரு தலம் என்று சிலரும் கூறுவார்கள்.

இந்த பாடலில் அப்பர் பிரான், சிவபெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கின்றார் என்று கூறுகின்றார். பல தேவாரப் பாடல்களில், மூவராய முதல்வன் என்றும் மூவராய ஒருவன் என்றும், சிவபெருமான் முத்தொழில்கள் செய்வதை குறிப்பிடுகின்றார்கள். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

சிவபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில், சிவபெருமான் பிரமனாகவும், திருமாலாகவும், உருத்திரனாகவும் நின்று முத்தொழில்கள் செய்யும் தன்மையினை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் அந்த மூன்று பாடல்களையும் இங்கே காண்போம். புவம் = வானம். வளி = காற்று. புனல் = தண்ணீர். கனல் = தீ. கலை = அறுபத்து நான்கு கலைகள். திரிகுணம் = சாத்வீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள். அமர் நெறி = விரும்பத்தக்க வழிமுறைகள். திவம் = தேவலோகம். மருவி = கூடி பொருந்தி.

பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது இந்த பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப்படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலைபெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப்படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.

மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே

பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப்படுகின்றது. கடலால் சூழப்பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை அவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன் உறை பதி
செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு மூவுலகிலே

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர் = வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள். எரி = தீ. கால் = காற்று. விரை மலரோன் = நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்;

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவாராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் எனும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

சிவபெருமான் ஒருவனே மூன்று உருவமாக, பிரமன், திருமால், மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாக இருக்கும் தன்மை அப்பர் பிரான், முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய தாண்டகப் பதிகத்தின் (6.85) பாடல் ஒன்றிலும் குறிப்பிடப்படுகின்றது. கருத்தன் = கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் திரிபு; தலைவன் என்று பொருள். காய்தல் = கோபித்தல்: பிரமன் மீது கோபம் கொண்டு அவனது தலையினைக் கொய்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. விருத்தன் = அனைவர்க்கும் மூத்தவன், பழையவன், ஆதி;

கருத்தன் காண் கமலத்தோன்: தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி

ஒருத்தன் காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற

விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.1.1) அப்பர் பிரான், திருமால், நான்முகன், தீ, காற்று, ஒலிக்கும் கடல், உயர்ந்த மலைகள் ஆகிய அனைத்திலும் உடனாய் கலந்து நின்று செயல்படுபவன் சிவபெருமான் என்று கூறுகின்றார்.

அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

பொழிப்புரை

நறுமணம் கமழும் வில்வ மாலையை அணிந்தவனும், அதிகை வீரட்டானத்தில் உறைபவனும், வெண்மை நிறம் கொண்ட இடபத்தை வாகனமாக உடையவனும், தனது படத்தில் புள்ளிகளை உடைய அழகிய பாம்புகளை அணிகலனாக அணிந்தவனும், கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலாகவும், பொன் நிறம் கொண்ட பிரமனாகவும், புகழுக்கு பொருத்தமாக உடையவனும், உணர்வதற்கு அறிய சிறப்பினை உடையவனாகவும். அதியரைய மங்கை என்ற தலத்தில் உறைபவனாகவும், அலைகள் வீசி புரள ஓடும் கெடில நதிக்கரையின் கரையில் உள்ள அதிகை நகரினைத் தனது தலமாக உடையவனும் ஆகிய சிவபெருமானை, நான் எனது வாழ்க்கையின் முற்பகுதியில், அறிவிலியாக இருந்ததால், பழித்துக் கூறினேன். அந்த செயல் தகாத செயலாகும்.