அறிமுகம்
மூவர் பாடிய தேவாரப் பாடல்களில், நாம் முதலாவதாக அப்பர் பிரான் அருளிய பாடல்களை எடுத்துக்கொள்கிறோம்.
வரலாற்று முறையில், முதலில் எழுந்த தேவாரப் பாடல்கள், அப்பர் பிரானின் பாடல்களே. மேலும், மிகவும் எளிமையான சொற்களைக் கொண்டு, அதே சமயத்தில் கருத்தாழம் மிகுந்த பாடல்கள். பண் முறையில் மிகவும் எளிதாக பாடக்கூடிய பாடல்கள்.
மற்ற இருவரும், கருவிலே திருவுடையவர்களாக பிறந்தவர்கள். சிவபாத இருதயர் செய்த தவத்தின் பயனாகப் பிறந்த ஞானசம்பந்தர், மூன்று வயதாக இருந்தபோது, ஞானப் பால் கொடுக்கப்பட்டு பாடல்கள் பாடத் தொடங்கினார்.
கயிலாயத்தில் சேவை செய்த ஆலாலசுந்தரர், சுந்தரராக அவதரித்தார். ஆனால் அப்பர் பிரான், எளிமையான குடும்பத்தில், சூழ்நிலையில் வளர்ந்தவர். பல தலங்கள் சென்று உழவாரப் பணி செய்து, இறைவனை எப்போதும் சிந்தித்தவாறு காலத்தைக் கழித்து, எண்ணற்ற பதிகங்கள் பாடியவர்.
இவ்வாறு சிந்தை, வாக்கு மற்றும் உடலினால் சிவனை வழிபட்ட அவரது பாடல்கள் நமது எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன. சாமானிய தொண்டனாக நமக்கு வழிகாட்டும் பாடல்கள் என்பதால் முதலில் அவரது பாடல்களை சிந்திக்கிறோம்.
(கடலில் அருளியது – காந்தாரபஞ்சமம்)
பின்னணி
தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்குக் குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர், சைவ சமயத்துக்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள். தங்களுக்குப் பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானைக் கொல்வதற்குப் பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல் என்ற பல சூழ்ச்சிகள் பயன்தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர்.
திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை, அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன், யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது யானை, பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல், அருகில் இருந்த சமணர்களையும் துரத்திக்கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள், மன்னனிடம் சென்று யானையிடம் இருந்து அவர் தப்பிவிட்டதாகவும், அவரைக் கொன்றால்தான், மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள்.
மேலும் அவர்கள், நாவுக்கரசரைக் கல்லோடு பிணைத்து கடலில் தள்ளிவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம்தான் இந்தப் பதிகம்.
இதனை, சேக்கிழார் குறிக்கும் பெரியபுராணப் பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பார்
சொற்றுணை வேதியன் என்னும் தூமொழி
நற்றமிழ் மாலையா நமச்சிவாய என்று
அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
இந்தப் பதிகத்தினை, நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை, பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம்.
மூவர் பெருமானார்கள், நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை உணர்த்தும்விதமாக, நமச்சிவாயப் பதிகங்கள் அருளியுள்ளனர். காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும், மற்று பற்று எனக்கின்றி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும், இந்த வரிசையில் அமைந்த பதிகங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான், தனது திருவாசகத்தின் முதல் பாடலான சிவபுராணத்தை, நமச்சிவாய வாழ்க என்ற வாழ்த்துடன் ஆரம்பிக்கின்றார்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே

விளக்கம்

புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். எனவே, சொல் என்றால் வேதங்கள் என்றும் பொருள் கூறுவர். வேதங்களை முதலில் விரித்துக் கூறியவன் சிவபிரான் என்று பல தேவாரப் பதிகங்களில் கூறப்படுகின்றது. அவ்வாறு விரித்துக் கூறியதன் மூலம், வேதங்களுக்குத் துணையாக நின்ற வேதியன் என்ற பொருளில், சொற்றுணை வேதியன் என்று அழைத்ததாகவும் கருதலாம்.

உலகத்தில் தோன்றிய முதல் நூலாகக் கருதப்படும் வேதங்களின் நடுவில் வருவது நமச்சிவாய என்ற திருமந்திரம். எண்ணிக்கையில், வேதங்கள் நான்கு என்று வகுக்கப்பட்டு இருந்தாலும், சாம வேதம் என்பது ரிக் வேதத்தின் மந்திரங்களை இசை வடிவில் கூறுவதாகும் என்பதால், மொத்த வேதங்கள் மூன்று என்று நாம் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக்கொண்டால், மூன்று வேதங்களில் நடுவாக வருவது யஜுர் வேதமாகும். ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில், நடுப்பகுதியான நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதியாகிய ஆறாவது அனுவாகத்தின் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில், ஸ்ரீ ருத்ரம் மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தின் நடுவில், நமச்சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது.

வாழ்க்கை நெறிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து, நமக்குத் துணையாக இருக்கும் வேதத்தின் நடுவில் சிவபிரானின் திருநாமம் வருவதால், சொற்றுணை வேதியன் என்று கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் நடுவில் வைத்துப் போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்பதால், சொற்றுணை வேதியன் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் தன்மையால், இருளில் மூழ்கியிருக்கும் நமக்கு ஒளியாகத் தோன்றி வழிகாட்டுபவனும், வானவர்களுக்குத் தலைவனாக விளங்குபவனுமாகிய சிவபெருமானை, சோதி வானவன் என்று அப்பர் பிரான் குறிக்கின்றார்.

பொழிப்புரை

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனுமாகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்தவைத்து, நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப்பட்டாலும், நமக்குப் பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமமாகிய நமச்சிவாய நம்மைக் காப்பாற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.