23. கருமணியை கனகத்தின் - பாடல் 3
அப்பர் பிரானை மட்டுமா சிவபெருமான் தீந்தமிழ் பாடல்கள் பாடவைத்தார், ஞானசம்பந்தப் பெருமான், சுந்தரர் மற்றும் மணிவாசகர் ஆகியோரையும் பாட வைத்தவர் அவர் தானே.
பாடல் 3
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை
எம்மான் என்று
பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த
செழும்பவளக் கொழுந்து ஒப்பானைச்
சித்தனை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

எத்திசையும் வானவர்கள் தொழநின்றான் = வானவர்கள் தங்களுக்கு இட்ட கட்டளையின்படி, வெவ்வேறு இடத்தில் இருந்தவாறு தங்களது தொழில்களைச் செய்தவாறு இருப்பார்கள். அவ்வாறு வெவ்வேறு இடங்களை இருந்தவாறே, இறைவனைத் தொழும் நிலை, எத்திசையும் வானவர்கள் தொழ நின்றான் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. சித்தன் = எல்லாம் செய்ய வல்லவன்.

அபயம் என்று சரணடைந்த தனது சூலை நோயினைத் தீர்த்து ஏற்றுகொண்டதும் அல்லாமல், தன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை இந்த பாடலில் அப்பர் பிரான், தன்னை பாமாலை பாட பயில்வித்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து திருவதிகைக்கு வரவழைத்து அப்பர் பிரானின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை அமைத்துக் கொடுத்து, அவரை தேவாரப் பதிகங்கள் பாடச் செய்தவர் பெருமான் தானே. இந்த செய்தியை பல பாடல்களில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். அத்தகைய பாடல்கள் இரண்டினை நாம் இங்கே காண்போம்.

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.54.3) தன்னை பாமாலை பாட வைத்த இறைவன் என்று கூறுவதை நாம் இங்கே காணலாம். புத்தேள் என்றால் முதற்கடவுள் என்று பொருள். அண்ணித்தல் = தித்தித்தல். பத்திமை = பக்தி. தன்னை பதிகங்கள் பாடுமாறு பழக்கியவர் என்று இங்கே கூறுகின்றார்.

பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை எம்மானை என்னுள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.84.4) தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப்படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அவரது பாடல்களை பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது.

கந்தமலர்க் கொன்றை அணி சடையான் தன்னைக் கதிர் விடுமாமணி பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல் தாயானை நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என்
சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

அப்பர் பிரானை மட்டுமா சிவபெருமான் தீந்தமிழ் பாடல்கள் பாடவைத்தார், ஞானசம்பந்தப் பெருமான், சுந்தரர் மற்றும் மணிவாசகர் ஆகியோரையும் பாட வைத்தவர் அவர் தானே. அம்மையே அப்பா என்று குளக்கரையில் நின்று, தோணிபுரத்தில் இருந்த கோயில் சிகரத்தில் வீற்றிருந்த பெருமானைச் சுட்டிக் காட்டி அழுத குழந்தைக்கு, உமையம்மை மூலம் ஞானப்பால் வழங்கி, மூன்று வயதினிலேயே, அந்த குழந்தையைப் பாடவைத்து அற்புதம் நிகழ்த்தியவர் சிவபெருமான் தானே. இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், ஞானசம்பந்தர், எனது உரை தனது உரையாக என்ற தொடரினை பதிகத்தின் (1.76) முதல் பத்து பாடல்களிலும் அடக்கி, சிவபெருமானின் உரை தான் தனது வாய்மொழியாக தேவாரப் பாடல்களாக வந்தன என்ற உண்மையை உணர்த்துகின்றார். இந்த பதிகம் அகத்துறை கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தனது உரையினை எனது உரைகளாக வெளிப்படுத்தி அருளியவன் என்று சிவபெருமானை இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர் மறைக்காடு நெய்த்தானம்
நிலையினான் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வது இயல்பே

நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, பின்னர் அடிமை ஓலை காட்டி சுந்தரரை ஆட்கொண்ட பெருமான், அவரை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்துறை திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்ற பின்னர் அங்கே மறைந்துவிடுகின்றார். பின்னர் வானில் எழுந்த ஓசை மூலம், எம்மை பாடுவாய் என்று சுந்தரரை பணிக்கின்றார். உன்னை அறிந்து கொள்ள முடியாமல், நாயினும் கடையேனாக இருந்த அடியேன் என் சொல்லிப் பாடுகேன் என்று சுந்தரர் சொல்ல, இறைவனார் முன்பு என்னை பித்தன் என்றே மொழிந்தனை, ஆகவே பித்தன் என்றே பாடுக என்று அடியெடுத்துக் கொடுத்து, சுந்தரரை பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தைப் பாடவைத்தார். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்

மணிவாசகர் தனது கோத்தும்பீ பதிகத்தில், தன்னை பாடுவித்த நாயகன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சீ என்று வெறுக்காது தான் செய்த திருப்பணிகளை ஏற்றுக்கொண்டவன் என்றும் அடியார்களின் குற்றங்களைப் பொறுத்து அருளும் பெருமையாளன் என்றும் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

பொழிப்புரை

அனைத்து திசைகளிலும் உள்ள தேவர்கள் தொழ நின்றவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவனும், எனது தலைவன் என்று அடியேன் சொல்லி பணிந்தபோது பல நாட்கள் என்னை பாமாலைகள் பாட வைத்தவனும், முத்து, மாணிக்கம், மணி, முளைத்து எழுந்த செழும்பவளம் போன்று நமது கண்களுக்கு இனிமையாக இருப்பவனும், எல்லாம் செய்ய வல்லவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

Advertisement