34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 2
சிவபிரான் போர்விடையை வாகனமாக உடையவன். புண்ணியமே வடிவானவன். புலித்தோலை ஆடையாக உடுத்தவன்,
பாடல் 2:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலி அதளன்
உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
Advertisement
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே
விளக்கம்
பொருவிடை = போரிடும் காளை. அதள் = தோலாடை. காண முக்தி என்பது தில்லைத் தலத்துடன் இணைத்துச் சொல்லப்படும் முதுமொழி. பேரின்பம் அளிக்கும் முக்திதானே அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வமாக கருதப்படுகின்றது. அதனால்தான் உலகுக்கெல்லாம் சிறந்த செல்வத்தை அளிக்கக்கூடியதில்லை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை
சிவபிரான் போர்விடையை வாகனமாக உடையவன். புண்ணியமே வடிவானவன். புலித்தோலை ஆடையாக உடுத்தவன், அழகான மலைமங்கையாகிய பார்வதி தேவியின் மணாளன். உலகத்தவர்க்கெல்லாம் சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை தர வல்லதும், அந்தணர்கள் வாழ்வதுமான தில்லைத் தலத்தில் உறையும் சிற்றம்பலவனின் திருவடியைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினைவிட உயர்ந்த காட்சியினை காணக்கூடிய வாய்ப்பு இல்லை. சிவபிரானின் திருவடிக் காட்சிதான் மிகவும் உயர்ந்த காட்சி.