முகப்பு
தினம் ஒரு தேவாரம்

34. பாளையுடைக் கமுகோங்கி -  பாடல் 6

இறைவனின் கழுத்தில் கருமணி போன்று, விடம் உண்டதால் ஏற்பட்ட கறையின் பின்னணியில். வெண்மை நிறம் கொண்டு மின்னிய பன்றிக்கொம்பு மிகவும் அழகாக மிளிர்ந்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

Updated On : 2 செப்டம்பர், 2016 at 5:24 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பாடல் 6

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டவன்

தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எங்கோன்

Advertisement

வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்

ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

விளக்கம்

தனது ஊனத்தை (சூலை நோயை மற்றும் சமணசமயம் சார்ந்திருந்த தன்மையை) தீர்த்து தன்னை ஆட்கொண்ட காரணத்தால் தனக்கு தேன் போன்று இனியவனாக சிவபிரான் உள்ளான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சூலை நோயால் வருந்திய போது, கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, தரையில் விழுந்து இறைவனைப் பணிந்தபோது, அப்பர் பிரான் அருளிய செந்தமிழ்ப் பதிகத்தினை மிகவும் விரும்பிய சிவபெருமான், அசரீரி மூலம், நாவுக்கரசு என்று உனது நாமம் உலகினில் பேர்பெற்று விளங்கும் என்று அனைவரும் கேட்கும்படியாக மொழிந்தார். இவ்வாறு, அப்பர் பிரானை தான் ஆட்கொண்ட விதத்தை இறைவன் உலகறியச் செய்த நிகழ்ச்சியை இங்கே அப்பர் நினைவு கூறுகின்றார். இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர்வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்

பாவுற்று அலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடை பாடிய பான்மையினால்

நாவுக்கரசு என்று உலகேழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுக என்று

யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறை வானிடையே ஒரு வாய்மை எழுந்ததுவே

இறைவனின் கழுத்தில் கருமணி போன்று, விடம் உண்டதால் ஏற்பட்ட கறையின் பின்னணியில். வெண்மை நிறம் கொண்டு மின்னிய பன்றிக்கொம்பு மிகவும் அழகாக மிளிர்ந்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததால் எனக்கு ஏற்பட்ட ஊனத்தையும், என்னை வருத்திய சூலை நோயினையும் உலகத்தவர் அனைவரும் அறியுமாறு நீக்கி என்னை ஆட்கொண்ட சிவபிரான், தேன் போன்று எனக்கு மிகவும் இனியவனாக உள்ளான். தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் சிவபிரான் எனது தலைவன் ஆவான். வானவர்கள் வாழ்வதற்காக அன்று கடலில் இருந்து எழுந்த நஞ்சினை உண்டதால் ஏற்பட்ட கருமணி போன்ற கறையின் பின்னணியில் காணப்படும் பன்றிக் கொம்பின் அழகினைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினை விடவும் உயர்ந்த காட்சி ஏதும் உளதோ, இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.