35. செஞ்சடைக் கற்றை - பாடல் 1
ஆணவ மலத்தினை இருளுக்கு ஒப்பிடுவது சைவ சித்தாந்த மரபு.
செஞ்சடைக் கற்றை
(தில்லை – நேரிசை)
முன்னுரை
Advertisement
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்ட சிவபெருமானை தினைத்தனைப்பொழுதும் மறந்து உய்வனோ என்றும், அடியவர்க்கு எளியவனான சிவபெருமானை, அரியானை அந்தணர் தம் சிந்தையானை, பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்றும் முழங்கிய அப்பர் பிரான், பெருமானின் நடனக் கோலத்தை, ஒவ்வொரு அங்கமாக ரசித்துப் பாடிய பதிகம். உலகத்தவரின் அறியாமை என்ற இருள் கிழிய ஆடும் நடனம் என்று முதல் பாடலில் தொடங்கும் அப்பர் பிரான், இந்த நடனக் கோலம் மிகவும் அதிசயமான கோலம் என்று கடைப் பாடலை முடிக்கின்றார். நடனக் கோலத்தின் அழகில் தன்னை மறந்த அப்பர் பிரான், பதினோரு பாடல்கள் அமைந்த பதிகமாக இதனை அருளியுள்ளார்.
இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் எரி ஆடுமாறே என்று முடிகின்றன. இங்கே எரி எனப்படுவது ஊழித்தீயாகும். பிரளய காலத்தில், அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிய பின்னர், அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னர், இறைவன் நடமாடுவது பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. ஊழித்தீயாய் நிற்பவனே சிவபெருமான்தான் என்று அப்பர் பிரான் ஒரு திருவையாறு பதிகத்தில் (4.13.4) கூறுகின்றார். நமது வாழ்க்கைக்குத் தேவைப்படும் மூன்றுவிதமான நெருப்புகள், காருகபத்தியம், ஆகவனீயம் மற்றும் தாக்கிணாக்கினி, நமது உடலிலும் மூன்றுவிதமாக உள்ளன என்று கூறுவார்கள். ஆகவனீயம் என்றால் சூரியன் உண்டாக்கும் வெப்பத்தை, ஒளியைக் குறிக்கும். எங்கும் பரவி இருக்கும் சூரியனின் ஒளிபோல் உடலெங்கும் பிராணவாயு பரவி இருக்கின்றது. தக்ஷிணாக்நீயம் என்பது மின்னலில் உண்டாகும் நெருப்பு. காருகபத்தியம் என்பது நாம் வீடுகளில், சமையல் செய்வதற்காகவும், வேள்வி போன்றவை செய்வதற்காகவும் உண்டாக்கப்படும் நெருப்பு. பாழி என்றால் பெருமை உடைய என்று பொருள். அரியும் பிரமனும் அடிமுடி காணாத வண்ணம், நெருப்புப் பிழம்பாக நின்ற நிலை பாழித்தீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழித் தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீயாய் நின்றாய் படர்ச்சடை மேல் பனி மதியம்
ஆழித்தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
துன்னம் பெய் கோவணமும் என்று தொடங்கும் பதிகத்தின் (2.44) ஏழாவது பாடலில் தீயாடி என்று சம்பந்தர் சிவபிரானை குறிப்பிடுகின்றார். எவராலும் வெல்லமுடியாத கூற்றுவன் என்பதால் மாறாத கூற்றுவன் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். தணியாத தீ, ஆறாத தீ என்று ஊழித்தீ குறிப்பிடப்படுகின்றது. ஊழித்தீயில் நின்று ஆடும் பெருமானை தீயாடி என்று அழைக்கின்றார். கூறாத நாக்கள் என்றால் பேசாத நாக்கள், அதாவது ஊமையின் நாக்குகள்.
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாள் எல்லாம் கூறாத நாக்களே
அப்பர் பிரானும் காளத்தித் திருத்தாண்டகத்தில் (6.8.4), தன் வினைகளை எல்லாம் அழித்து ஒழிக்கும் பெருமானை தீயாடி என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு தீயாடி என்றும் ஊழித்தீயில் நின்று ஆடுபவர் என்றும் சிவபிரானை குறிப்பிடப்படுவதன் மூலம், அவர் சங்கார காரணர் என்பதும், சங்கார காரணராகிய அவரே (சங்காரத்தில் அனைத்து உயிர்களும் அழித்து விடுவதால்) மறுபடியும் தோற்றத்திற்கு காரணமாக இருக்கும் நிலையும் நமக்கு உணர்த்துப் படுகின்றது. சுறா வேந்தன் = மீன் கொடியை உடைய மன்மதன். ஏவலம் = அம்பு செலுத்தி வெற்றிகொள்ளும் ஆற்றல். மன்மதனின் காம பாணத்திற்கு அனைவரும் வயப்படும் தன்மை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
செற்றான் காண் என் வினையைத் தீயாடி காண் திருவொற்றியூரான் காண் சிந்தை செய்வார்க்கு
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நற்கொழுநன் காண் இமையோர் ஏத்தும்
சொற்றான் காண் சோற்றுதுறையுளான் காண் சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே
பாடல் 1
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னிச்
நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே
விளக்கம்
நறவம் = தேன். நாறுதல் = நறுமணம் வீசுதல். துஞ்சடை இருள் = மரணத்திற்கு காரணமாகிய ஆணவ மலம். ஆணவ மலத்தின் காரணமாகத்தான், உயிர்கள் வினைகளைப் பெருக்கிக்கொண்டு, அந்த வினைப்பயன்களை அனுபவிக்க கணக்கற்ற பிறப்புகள் எடுக்க நேரிடுகின்றது, இறப்பே பிறப்புக்கு காரணம் என்பதால், நமது இறப்புக்கும் ஆணவ மலமே காரணம் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
ஆணவ மலத்தினை இருளுக்கு ஒப்பிடுவது சைவ சித்தாந்த மரபு. அந்த ஆணவ மலம் ஒடுங்க நடனம் ஆடுகின்றார் என்பதால், இருள் கிழியுமாறு ஆடுகின்றார் என்று ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ளது. மனவாசகங்கடந்தார் அருளிய உண்மை விளக்கம் எனப்படும் சைவ சித்தாந்த நூலில், தில்லைக் கூத்தபிரானின் நடனத்தை ஞான நடனம் என்று குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மாயை தனை உதறி வல்வினையைத் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பாதம் தான்
உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை நீக்குதல் ஆகிய தொழிலையும், நெருப்பு ஏந்திய திருக்கை கன்ம மலத்தைச் சுட்டெரிக்கும் தொழிலையும், ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமை அடங்கச் செய்யும் தொழிலையும், தூக்கிய திருவடி ஆன்மாக்களுக்கு பேரின்பம் அருளும் தொழிலையும் அமைந்த திருக்கை (வலது கீழ் திருக்கை), பேரின்பத்தில் ஆன்மா நிலையாக நிற்குமாறு அருளும் தொழிலையும் செய்கின்றது என்று மேற்கண்ட பாடலில் விளக்கம் சொல்லப்பட்டு, பெருமானின் நடனம் ஞான நடனம் என்று உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை
முற்றம் போன்று பரந்த செஞ்சடையினை தனது ஒளியால், சிவபிரான் தலையில் அணிந்துள்ள சந்திரன் அழகு செய்கின்றது; மேகங்கள் தவழ்ந்துசெல்லும் அளவுக்கு வளர்ந்த சோலைகள் கொண்ட தில்லைத் சிற்றம்பலத்தில், நஞ்சினை உண்டதால் கறுத்துக் காணப்படும் கழுத்தினை உடைய சிவபிரான், தனது கையில் ஏந்தியுள்ள தீப்பிழம்பு, உலகத்தவரின் அறியாமையை அழிக்குமாறு, ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார்.