முகப்பு
தினம் ஒரு தேவாரம்

35. செஞ்சடைக் கற்றை - பாடல் 3

சடையானார் என்றும் சாந்த நீற்றர் என்றும் அப்பர் பிரான் இங்கே இறைவனை குறிப்பிடுகின்றார்.

Updated On : 2 செப்டம்பர், 2016 at 5:27 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

பாடல் 3

சடையனார் சாந்த நீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னிச்

உடையானர் உடைதலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்

Advertisement

கடி கொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே

விளக்கம்

சடையானார் என்றும் சாந்த நீற்றர் என்றும் அப்பர் பிரான் இங்கே இறைவனை குறிப்பிடுகின்றார். சடையன், சடையனார் என்பது ஒப்பற்ற சடையினைக் கொண்ட சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான பெயர். சிவபெருமானின் சடை பல சிறப்புகளை உடையது. கடல் போல் பாய்ந்து வந்த கங்கை நீரினை ஏற்றுத் தேக்கிய சடை; அழிந்து தேய்ந்த நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த சடை; பல விதங்களிலும் வேறுபாடு கொண்ட தண்ணீர், சந்திரன், பாம்பு ஆகிய மூன்றினையும் ஏற்றுக்கொண்டு, மூன்றினையும் ஒருங்கே வைத்த சடை. தனிநிலா = ஒப்பற்ற நிலா.

சாந்த நீற்றர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு சம்பந்தரின் இடர் களையும் பதிகத்தின் ஒரு பாடலை (1.52.7) நினைவூட்டுகின்றது. சாந்தம் = சந்தனம். மற்றவர்கள் வாசனை பொருந்திய சந்தனத்தை உடலில் பூச, அவர்களிலிருந்து மாறுபட்டவரான சிவபெருமான், திருநீற்றினை சந்தனம் என்று பூசிக்கொள்வதாக அப்பர் பிரான் இங்கே சொல்கின்றார். அடியார்களும், சிவபெருமான் அணிந்த திருநீற்றினை, சந்தனம் என்று விரும்பி அணிந்து கொள்வதாக சம்பந்தர் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கின்றார். காற்றுக் கடவுள், தீக்கடவுள், மற்றும் திருமால் ஆகிய மூவரையும் தனது அம்பினில் பாகமாகக் கொண்ட தன்மை இங்கே மூன்றும் ஒன்றாக் கூட்டி என்று சொல்லப்படுகின்றது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

சிவபெருமான் நடனம் ஆடும்போது அவர் காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலி எழுப்புவதாக அப்பர் பிரான் கூறுவது, நமக்கு சேரமான் பெருமாள் நாயனாரின் வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. சேரமான் பெருமாள் நாயனார், தினமும் சிவபிரானுக்கு பூஜை செய்யும் சமயத்தில், தான் தில்லையில் நடனம் ஆடும்போது தனது கழல்கள் ஒலித்து எழுப்பும் ஓசையினை நாயனார் கேட்குமாறு சிவபிரான் அருள் புரிந்தார். ஒரு நாள் ஆடற் சிலம்பின் ஒலி நாயனாருக்கு கேட்கவில்லை. தான் தினமும் கேட்கும் ஒலி கேட்காததால்தான் ஏதோ பூஜை செய்யும்போது தவறு செய்ததாக நினைத்து, இனிமேல் உயிர் வாழ்ந்து என்ன பயன் என்று, சேரமான் பெருமாள் தனது உயிரினை மாய்த்துக் கொள்ள துணித்தார். அப்போது அவருக்கு ஈசனின் கழல் ஒலி கேட்டது. ஒலி கேட்பதற்கு தாமதம் ஏன் என்று அவர் வருந்தியபோது, இறைவன் அசரீரி வாயிலாக, தான் சுந்தரரின் தேவாரப் பதிகத்தினை நின்று கேட்டமையால் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது என்று கூறினார். இதன் மூலம் சுந்தரரின் பெருமையை உணர்ந்த சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரரைத் தேடிச் சென்று அவருக்கு நண்பராக மாறினார். சிவபெருமானின் கழல் ஒலிதான், சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் இடையே நட்பு மலர்வதற்கு காரணமாக இருந்தது.

மணிவாசகரும் திருவாசகம் கீர்த்தித் திருவகலில், இறைவனின் பாதச் சிலம்பொலி கேட்டதாக குறிப்பிடுகின்றார்.

வாதவூரினில் வந்தினிது அருளிப்

பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

பொழிப்புரை

சடையனார் என்று சிறப்பாக அழைக்கப்படும் சிவபெருமான், திருநீற்றையே சந்தனமாக தனது உடலில் பூசியுள்ளார். அவரது தலையில் ஏற்றுள்ள ஒப்பற்ற நிலவு ஒளி வீசுகின்றது; அவர் பிரமனின் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றார்; நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரின் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்தில், தனது திருவடிகளில் அணிந்துள்ள வீரக்கழல் ஆரவாரம் செய்யுமாறு, ஊழித்தீயின் இடையே நின்று சிவபிரான் கூத்து நிகழ்த்துகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.