முகப்பு
தினம் ஒரு தேவாரம்

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 5

சீர்காழி மற்றும் இடைமருது செல்கின்றேன்

Updated On : 15 டிசம்பர், 2016 at 2:21 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:23 AM

அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய
        மாநாகம் அரையில் சாத்திப்
புனல் பொதிந்த சடைக் கற்றைப் பொன் போல் மேனிப்
    புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்தச்
சினவிடையை மேல் கொண்டு திருவாரூரும் சிரபுரமும்
        இடைமருதும் சேர்வார் போல
மனமுருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு
            அங்கே மன்னினாரே

விளக்கம்

அதள் = தோலாடை. சிரபுரம் = சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். தூயவர் என்ற பொருள்பட புனிதர் என்று குறிப்பிட்ட அப்பர் நாயகி, அந்த பெயருக்கு ஏற்ப தூய சொற்களைக் கொண்டவராக இல்லாமல், தன்னை விடுத்து வலம்புரம் சென்றதை நினைத்து வருந்தும் பாடல். தான் செல்வதாக சொன்ன இடங்களுக்கு செல்லாமல், வேறிடம் சென்றவர் எவ்வாறு தூயவராக இருக்கமுடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. புரிந்து = விரும்பி.

Advertisement

பொழிப்புரை

தனது வலது கையில் அனல் ஏந்தியவராய், தான் உடுத்தியுள்ள தோல் ஆடையின் மேல் ஐந்து தலைகளை உடைய பெரிய பாம்பினை இடுப்பினில் இறுகக் கட்டியவராய், கங்கை நதி பொதிந்த சடைக் கற்றை உடையவராய், பொன்னிறத்து மேனியைக் கொண்டவராய் விளங்கும் புனிதர் சிவபெருமான் ஆவார்.

சிவபிரானது பெருமையை உணர்ந்த தேவர்கள் வழிபட்டு துதிப்பதற்காக, கோபம் உடைய காளை வாகனத்தில் ஏறியவராய், திருவாரூர், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி மற்றும் இடைமருது செல்கின்றேன் என்று கூறியவர், அந்த தலங்களுக்குச் செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.