முகப்பு
தினம் ஒரு தேவாரம்

48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 1

வானத்தில் உலவும் சந்திரனும் பாம்பும்

Updated On : 4 ஜனவரி, 2017 at 5:23 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:09 PM

வானத்து இளமதியும் பாம்பும் தம்மில் வளர்சடை
               மேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை
                        நடமாடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும் நன்மையும்
                           தீமையும் ஆனார் போலும்
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச்சாய்க்காட்டு
                   இனிது உறையும் செல்வர் தாமே
 

விளக்கம்

இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமான் உறையும் பல தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான் பதிகத்தின் முதல் பாடலில் தில்லைத் தலத்தினை மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார். வைணவர்கள் கோயில் என்றால் திருவரங்கம் என்று குறிப்பிடுவது போன்று சைவர்கள் கோயில் என்று தில்லையை குறிப்பிடுகின்றார்கள். இந்த காரணத்தினால்தான், வைணவ திவ்யத் தலங்களின் வரிசையில் முதலாவதாக திருவரங்கமும், பாடல் பெற்ற சைவத் திருத்தலங்களில் சிதம்பரம் முதல் தலமாகவும் வைக்கப்பட்டுள்ளன. திருவாசகத்தில் மணிவாசகர் தில்லைத் தலத்தில் அருளிய இரண்டு பதிகங்களை, திருக்கோயில் திருப்பதிகம் என்றும் திருக்கோயில் மூத்த திருப்பதிகம் என்று குறிப்பிடுவது இங்கே நாம் சிந்திக்கத்தக்கது.

Advertisement

இந்த பாடலில் சந்திரனையும் பாம்பையும் தனது சடை மேல் வைத்து ஆதரித்தவர் என்று பாம்பிற்கும் சந்திரனுக்கு இடையே இருந்த பகையினை தீர்த்து பெருமான் ஆண்டதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பல தேவாரப் பாடல்களில் பாம்பினுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பகையினை நீக்கி, இருவரையும் ஒரே இடத்தில வைத்த பெருமான் என்ற குறிப்பு காணப்படுகின்றது. பாதாளீச்சரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.108) பாடலில், தேய்ந்த பிறையினையும் பாம்பினையும் கொன்றையுடன் சேர்த்து தனது சடையில் வைத்த பெருமான் என்று குறிப்பிட்டு, இருவருக்கு இடையே உள்ள பகை தீர்க்கப்பட்டதை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். உன்னுதல் = நினைத்தல். காட்டினை அரங்கமாக நினைத்து நடமாடியது இங்கே கூறப்படுகின்றது.

பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்காக உன்னி
                                         நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடை தன்
                                       மேல் சேரப்
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே

பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் என்று பெருமானை குறிப்பிடும் இந்த பாடல் புகலூர் திருத்தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.99) இரண்டாவது பாடல். ஆல் நிழலாய் என்று ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது.
 
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல்
            நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்று இல்லாத படர்சடையினாய் பாம்பொடு திங்கள்
                பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின்
                            நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய
                    தேவதேவே

திருவாஞ்சியத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.76) ஐந்தாவது பாடலில், இளைய சந்திரனுடன் பாம்பினை இணைத்து ஒரே இடத்தில் வைப்பது பெருமானின் தன்மை என்று சுந்தரர் கூறும் பாடல் இது.

மைகொள் கண்டர் எண்தோளர் மலைமகளுடன் உறை
                வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண்பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே

நன்மையையும் தீமையும் ஆனார் என்று பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். சென்ற பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளின் பயனாக நமக்கு இந்த பிறவியில் இன்பங்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன. பழைய வினைகளை அனுபவித்துக் கழித்து, வினை நீக்கம் பெற்று அனைத்து உயிர்களும் தன்னை வந்தடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம். அதற்காகவே, உயிர்கள் தாங்கள் சேமித்து வைத்துள்ள வினையின் தகுதிக்கு ஏற்ப, பல்வேறு உடல்களுடன் இறைவனுடன் பொருத்தப்படுகின்றன.

ஆனால் இதனை உணராத உயிர்கள், பழைய வினைகளின் பயனாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்போது தங்களது வினைகளை மேலும் பெருக்கிக்கொண்டு, பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து வெளியே வரமுடியாதபடி சிக்குகின்றன. பழைய வினைகளின் பயனாக உயிர்கள் இன்பமும் துன்பமும் அனுபவிக்கும் நிலையினை இறைவன் ஏற்படுத்திய தன்மை இங்கே, நன்மையையும் தீமையும் ஆனார் என்று உணர்த்தப்படுகின்றது.

தேனைப் போன்று அடியார்களுக்கு இனிமையாக இருப்பவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தேன் பல நாட்கள் கெடாது இருப்பதுடன், தன்னுடன் சேர்ந்த பொருளினையும் கெடாமல் பாதுகாக்கும். தேன் சிறந்த மருந்தாக பயன்படுவதுடன், தன்னுடன் சேர்ந்த மருந்தின் செயல்பாட்டையும் அதிகரிக்கும்; அதே போன்றுதான் எந்த மாறுதலையும் தான் அடையாமல், தன்னுடன் சேர்ந்த உயிர்களை தூய்மையாக மாற்றுபவன் சிவபெருமான்; திருவையாற்றின் மீது அருளிய பதிகம் ஒன்றின் (4.39) அனைத்துப் பாடல்களிலும் திருவையாறு அமர்ந்த தேனே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். சமணர்களுடன் கூடி இருந்ததால் ஏற்பட்ட தனது மயக்கத்தைத் துண்டித்து தன்னை ஆட்கொண்டவன் என்றும், தூயநெறியாக நின்று உலகங்களுக்குத் தலைவனாக இருப்பவன் என்றும், திருவையாறு தலத்தில் அமர்ந்துள்ள தேன் என்றும் இறைவனை அழைக்கும் அப்பர் பிரான், அவனது திருப்பாதங்களின் பெருமைகளை சொல்லியவாறு தான் திரிவதாக இந்த பாடலில் சொல்லுகின்றார். மால் = மயக்கம்.

குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறியாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திருவையாறு அமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான்
                திரிகின்றேனே

அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.95) இரண்டாவது பாடலில் அடியார்களது சிந்தைனையில் ஊறும் தேன் என்று ஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுகின்றார். எற்றி = எதிர்த்து. வேறு செய்தல் = உடல் வேறு உயிர் வேறாக பிரித்தல், கொல்லுதல், உயிர்களுடன் கலந்திருக்கும் ஆணவ மலத்தினை உரித்து எடுப்பதே, தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மதயானையின் தோலை உரித்த நிகழ்ச்சியின் தாற்பரியம் என்று கூறுவார்கள்.

ஏறு பேணி அது ஏறி இளமதக் களிற்றினை எற்றி
வேறு செய்து அதன் உரிவை வெண்புலால் கலக்க மெய்
                    போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க்கு ஒருவன் நல்லொளி கொள்
                        ஒண்சுடராம்
ஆறு சேர் தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.4) இரண்டாவது பாடலில் அப்பர் பிரான் இறைவனை, தேன் போன்று இனிப்பவன் என்று பொருள் பட, தேனன் என்று அழைக்கின்றார், வானன் = பரந்த வெளியாக எங்கும் பரந்து காணப்படுபவன். ஏனன் =  பன்றியை அடக்கி அதன் கொம்பினை அணிகலனாக ஏற்றவன். ஆனன் = ஆனினை, எருதினை வாகனமாக ஏற்றுக்கொண்டவன். பெருமானை மறந்து தான் வாழ்வினில் உய்வினை அடையமுடியாது என்று தன்னைச் சுட்டிக்காட்டி, நமக்கு அப்பர் பிரான் அறிவுரை சொல்லும் பாடல்.
 
வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திருவண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ

ஆரூர் திருத்தண்டகத்தின் (6.29) முதல் பாடலில் அப்பர் பிரான் இறைவனை தித்திக்கும் தேன் என்றும் பால் என்றும் கிடைத்தற்கரிய சிந்தாமணி என்றும், கரும்பின் இன்சுவை என்றும் தெளிந்த கருப்பஞ்சாறு என்றும் கூறுகின்றார். குருமணி = சிறந்த ஆசிரியன். பாணி = தாளம். பருமணி = அளவில் பெரிய அரிய மணி. அருங்கலம் = அணிகலன். குழல், மொந்தை, தாளம், வீணை, கொக்கரை, சச்சரி ஆகிய இசைக்கருவிகள் எழுப்பும் இனிய இசைக்கு ஏற்ப நடனம் ஆடுபவன் என்றும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அயர்த்தல் = மறந்து இருத்தல். சைவ வேளாளர் குலத்தில் பிறந்த காரணத்தால், அப்பர் பிரான் தனது சிறுவயதில் (சமணசமயம் சென்று சாரும் வரை) சிவபிரானை வழிபட்டவர் அல்லவா. அதனால்தான், மறந்திருந்தேன் என்ற சொல்லினை இங்கே பயன்படுத்துகின்றார்.

திருமணியைத் தித்திக்கும் தனிப் பாலைத் தீங்கரும்பின்
        இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல் மொந்தை தாளம் வீணை
    கொக்கரையின் சச்சரியின் பாணியானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தில்
            அருங்கலத்தைப் பாவம் தீர்க்கும்
அருமணியை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது
            அடிநாயேன் அயர்த்தவாறே

கச்சி மேற்றளி பதிகத்தின் ஒரு பாடலில் (7.23.6) சுந்தரர், இறைவனை தேன் மற்றும் இனிய அமுது என்று அழைக்கின்றார். இறைவனது திருவடிகளைத்தான் சென்று அடைய வேண்டும் என்று தான் நினைத்த மாத்திரத்தில், தனது உடலில் வந்து புகுந்து அருள் செய்த பேரருளாளன் என்று சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு கருணைபுரிந்த பெருமான் தேன் என்றும் இனிய அமுதமாக, சுந்தரரின் சிந்தனையில் இருந்ததில் வியப்பென்ன. அத்தகைய பெருமானை, தனது உள்ளம் குளிர புகழ்ந்து பாடுவேன் என்று பாடலை முடிக்கின்றார்.

நானேல் உன்னடியே நினைத்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற்றளி உறையும்
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே

இறைவனிடத்தில் பொய்யான அன்பினை வெளிப்படுத்திக் கொண்டு, பொய்யான நெஞ்சத்தினை உடைத்தவனாக, பொய்யனாக வாழும் தான் இறைவனின் திருவடிகளை அடைய ஆசைப்படுவதாகவும், இறைவன் மீது அன்புகொண்டு அவனை நினைந்து உள்ளம் கசிந்து அழுதால் இறைவனை பெறலாம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்ட தனக்கு, இறைவனே அடையும் வழியும் இறைவன்தான் உணர்த்த வேண்டும் என்று மணிவாசகர் வேண்டும் திருவாசகப் பாடலில், இறைவனை தேன் என்று மணிவாசகர் அழைக்கின்றார். தேசனே தேனார் அமுதே என்று சிவபுராணத்தில் மணிவாசகர் அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாரே

திருவாவடுதுறை தலத்தில் மீது அருளப்பட்ட திருவிசைப்பா பாடல் ஒன்றினில் சேந்தனார் இறைவனை, தேன் போன்று இனியவன் என்றும் அமுதம் போன்று புத்துயிர் அளிப்பவன் என்றும் அழைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். தனது மகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நிலையினை எடுத்துரைக்கும் தாயின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடல். ஏர் கலை = அழகிய ஆடை. தனது மகளின் வருத்தத்தைத் தனது வருத்தமாக கருதி, இறைவனிடம் முறையிடும் தாய், தனது மகள் படும் பிரிவுத் துயரினை விரைந்து நீக்குமாறு இறைவனிடம் வேண்டும் பாடல்.

மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளை கொண்ட
                    வழக்குண்டே
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயகச் செல்வமே
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர் தம்
கோனே நின் மெய்யடியார் மனக் கருத்தை முடித்திடும்
                    குன்றமே    

பொழிப்புரை

வானத்தில் உலவும் சந்திரனும் பாம்பும், தமக்கிடையே இருந்த பகை நீங்கி, இரண்டையும் ஆதரவுடன், என்றும் வளார்ந்துகொண்டிருக்கும் வண்ணம் தனது சடையில் வைத்தவர் சிவபெருமான். தேனை உண்ட வண்டுகள் பாடும் தில்லை தலத்தில் நடமாடும் தேவர் சிவபெருமான், ஞானத்தின் சுடராக இருக்கின்றார். நாம் நமது வாழ்வினில் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து, பழைய வினைகளை கழித்துக்கொள்ள வழி வகுத்தவர் இறைவன் சிவபெருமான். தேன் போன்று அவரது அடியார்களுக்கு இனிமையாக விளங்கும் சிவபெருமான், சாய்க்காடு என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் செல்வர் ஆவார். அவர் தன்னிடம், வேறு எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தினை வைத்துள்ள செல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.