14. அரவணையான் சிந்தித்து - பாடல் 3
தெய்வப் புனல் கெடில நதி என்று, கெடில நதியின் புனிதத் தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்சவலைப்பாடு
ஒன்றில்லா அடி
கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி கணக்கு வழக்கைக்
கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை
ஊடறுத்து நின்ற அடி
தெய்வப் புனல் கெடில நாடன் அடி திருவீரட்டானத்து
எம் செல்வன் அடி

விளக்கம்

தெய்வப் புனல் கெடில நதி என்று, கெடில நதியின் புனிதத் தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கெடில நதியை தென்கங்கை என்றும் குறிப்பிடுவார்கள். வைதல் = கெடுதலாக பேசுதல். காமம் என்ற சொல்லுக்கு தீய செயல்கள் என்று பொருள் கொண்டு, அந்த தீய செய்கைகளின் விளைவுகள் அவர்களை விட்டு நீங்காத வண்ணம் செய்யும் திருவடிகள் என்று சொல்வது பொதுவான விளக்கம். வைதெழுவார் என்று பெருமானை இகழ்வதையே எப்போதும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர் என்பதை உணர்த்தும் வண்ணம், காலையில் தூக்கத்திலிருந்து எழும்போதே இகழ்வார்கள் என்பதை வைது எழுவார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபெருமானை தூற்றுவதை முழுநேரப் பணியாக கொண்ட சமணர்களை குறிப்பிடுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதன் மூலம் தீயவினைகள் எவர் செய்தாலும் அதன் பயனை அனுபவிக்கச் செய்யும் திருவடிகள் என்பதை நாம் உணரலாம். இந்த தொடருக்கு, சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள், சுவையான விளக்கம் ஒன்றினை பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் அளிக்கின்றார். வைதல் என்பதற்கு இகழ்வது போன்று இறைவனை புகழ்வது என்று பொருள் கொண்டு, அவ்வாறு சுவையுடன் இறைவனைப் போற்றும் அடியார்களின் விருப்பங்கள் பொய்யாகாத வண்ணம், விருப்பங்களை ஈடேறும் வண்ணம் அருள் புரிபவன் என்று கூறுகின்றார். சுந்தரர் பல பாடல்களில் வஞ்சப் புகழ்ச்சி அணியை பயன்படுத்தியுள்ளார். நீத்தல் விண்ணப்பம் பதிகத்தில் வரும் ஒரு திருவாசகப் பாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய் மதியன்
பழைதரு மாபரன் என்று என்று அறைவன் பழிப்பினையே

இறைவனே நீ கைவிட்டால் உன்னை நான் பழிச்சொற்கள் கூறி இகழ்வேன் என்று கூறும் மணிவாசகர், பெருமானை மழை தரு கண்டன் (மழை தரும் மேகம் போன்று கருமையான கழுத்தினை உடையவன்), குணமிலி (நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன்), மானிடன் (தெய்வத்தன்மை ஏதுமற்ற மானிடன் போன்றவன்), தேய் மதியன் (குறைந்த அறிவினை உடையவன்), மாபரன் (பெரிய பரதேசி) என்று இகழ்வேன் என்று கூறுவது போன்று தோன்றும், இந்த பாடல் உண்மையில் இதனினும் வேறுபட்ட பொருளை உடைத்தது. மாபரன் என்ற சொல்லினை மா அபரன் என்று பிரித்து, மிகவும் கீழானவன் என்றும் கூறுவதுண்டு. பரன் என்றால் அனைவர்க்கும் மேலானவன் என்ற பொருள். அபரன் என்பது எதிர்மறைச் சொல். பலாப் பழத்தினை ஈ விரும்பி மொய்ப்பது போன்று, தானும் மாதர்களின் மார்பகங்களை விரும்பி காம வலையில் வீழ்ந்திருப்பதாக கூறுகின்றார். குணமிலி = ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மூன்று மாயா குணங்களும் இல்லாதவன். மானிடன் = மானினை இடது கையில் கொண்டவன். தேய் மதியன் = தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனைத் தனது தலையில் ஏற்றுக்கொண்டு, வாழ்வு அளித்தவன். பழைதரு = அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவன், அநாதி. மாபரன் = பெரிய பரம்பொருளாக இருப்பவன்.

இந்தப் பாடலில் அப்பர் பிரான், வஞ்ச வலைப்பாடு ஒன்றில்லா திருவடி என்று கூறுகின்றார். மனதினில் கள்ளத்தை வைத்து வெளியே வஞ்சனையாக பெருமானை வழிபடுவார்போல் நடிக்கும் மனிதர்களின் வஞ்சனைக்கு மயங்காத திருவடிகள் என்று கூறுவது நமக்கு அப்பர் பிரானின் காஞ்சிப் பதிகத்தை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் (4.07.1), இறைவனுக்கு உரிய நமது மனம், மொழி மெய்களை வேறு பொருட்களுக்கு உரித்தாக்குதல் வஞ்சனையான செயலாக அப்பர் பெருமானால் கருதப்படுகின்றது. அவ்வாறு இருப்பவர்களின் நெஞ்சத்தை வலிமையான நெஞ்சம் (கல் நெஞ்சம்) என்று இங்கே அப்பர் பெருமான் சாடுகின்றார்.

கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக் கரவார் பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடை தாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

இதே கருத்து மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் (5.90) ஒன்பதாவது பாடலிலும் காணப்படுகின்றது. பொக்கம் = பொய்மை. பொய்மையாக இறைவனை, பூவும் நீரும் கொண்டு வழிபட்டாலும், அதனைக் கண்டுகொள்ளும் இறைவன், அவர்களது நடிப்பினைக் கண்டு ஏளனச் சிரிப்பு சிரிப்பான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

நெக்கு நெக்கு நிற்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தன்னை நாணியே

பொழிப்புரை

சிவபெருமானைப் பணிந்து, அவனது குறைகளை, குற்றங்களை கூறுவது போன்று நயமாக அவனைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் விருப்பங்கள் பொய்யாகாத வண்ணம், அவர்களது விருப்பங்கள் ஈடேற வைக்கும் திருவடிகள். வஞ்சனையாக தொழுபவர்போல் நடிக்கும் வஞ்சனையாளரின் வலையில் அகப்படாத திருவடிகள். கைகளால் தொழுது, அவனது நாமங்களை ஓதி அவனை மனம் ஒன்றித் தொழும் அடியார்களின் அகக் கண்ணுக்கு தென்படும் திருவடிகள். எண்ணையும் எழுத்தையும் கடந்த திருவடிகள். அடியார்களால் நெய் கொண்டு அபிடேகம் செய்து தொழப்படும் திருவடிகள். நீண்ட வானுலகத்தையும் கடந்து, திருமாலும் பிரமனும் காணாத வண்ணம் அழலாய் நிமிர்ந்த திருவடிகள். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகள், புனிதத்தன்மை வாய்ந்த தென்கெடில நதிக்கரையில் அமைந்துள்ள திருவதிகை நாட்டின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள். அவன்தான் அதிகை திருவீரட்டானத்தின் செல்வனாக விளங்குகின்றான்.