18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 1
சங்க காலத்து இலக்கியங்கள் வீரத்துக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு,
(ஆமாத்தூர் – திருத்தாண்டகம்)
முன்னுரை
சங்க காலத்து இலக்கியங்கள் வீரத்துக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு, இறையுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சங்க காலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் நிலவியது களப்பிரர்களின் ஆட்சி. இவர்களது ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலமாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த காலத்தில், எந்த கலையும் போற்றப்படவில்லை. அரசர்களால் புத்த சமயமும், சமண சமயமும் ஊக்குவிக்கப்பட்டன. இந்து சமயம் புறக்கணிக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரப் பாடல்கள் அருளினார்கள். சங்க கால இலக்கியங்கள் தவிர வேறு இலக்கியங்கள் இல்லாத சூழ்நிலையில், காதல் உணர்வை சித்தரிக்கும் பாடல்கள் மக்களை மிகவும் வெகுவாகக் கவரும் என்பதால்தானோ, சில தேவாரப் பாடல்கள் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன.
எல்லா உயிர்களும் (பசு) இறைவனைச் (பதி) சென்று அடைவதையே விரும்புவதால்தானே பசுபதி என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில்தான், அனைத்து மொழிகளிலும், அருளாளர்கள் தங்களை இறைவன் மீது காதல் கொண்ட பெண்களாக உருவகித்துக்கொண்டு, இறைவன் பேரில் தாங்கள் கொண்ட காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். அந்த வரிசையில் உள்ள தேவாரப் பாடல்கள், மூவராலும் அருளப்பட்டுள்ளன. அவர்கள் மூவரில் அப்பர் பிரான் மிகவும் அதிகமாக அத்தகைய பாடல்கள் அருளியுள்ளார். அத்தகைய பாடலில் ஒன்றுதான் இந்தப் பதிகம்.
Advertisement
சிவபிரானின் அழகில் மயங்கி அவரிடத்தில் தனது மனதைப் பறிகொடுத்த பெண்மணி, எப்போதும் சிவபிரானின் நினைவாகவே இருந்ததால் கனவிலும் சிவபிரானையே காண்கின்றாள். தான் கனவில் கண்ட காட்சிகளையும், அப்போது கொண்ட உணர்வுகளையும் கூறுவது போல் அமைந்த அகத்துறைப் பாடல் என்றும் கூறுவதுண்டு. சிவபிரானின் பால் ஈடுபட்டு, பசுத்தன்மை இழந்த உயிரின் உயர்ந்த நிலையினைக் குறிக்கும் பாடலாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் கருதுகின்றார்.
ஆமாத்தூர் அழகர், பிச்சை ஏற்கச் சென்றபோது, அவருக்கு பிச்சையிடச் சென்ற பெண்மணி, அவரை நேரில் கண்டு அவரது அழகில் மயங்கி, அவர் பால் தீராத காதல் கொண்டு, அவரே தனக்கு உரிய மணாளர் என்று நினைக்கின்றாள். ஆனால் சிவபெருமான், அவளை விட்டு நீங்கிச் செல்லவே, வருத்தமடைந்து, தனது எண்ண ஓட்டங்களை மற்றவர்களிடம் சொல்லி, தன்னை சிவபெருமானுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தும் பதிகம். தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்ற வருத்தத்தையும் மீறி, வந்து சென்றவர் மிகவும் அழகியவர், என்று ஒவ்வொரு பாடலிலும் கூறுவதிலிருந்து, பெருமானின் அழகு ஏற்படுத்திய தாக்கத்தை நாம் உணர முடிகின்றது. தாருகாவனத்து இல்லத்தலைவிகள், சிவபிரான் பிச்சைப் பெருமானாகச் சென்றபோது அவரது அழகில் மயங்கி, அவரைப் பின்தொடர்ந்துச் சென்றது அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். பிச்சைப் பெருமானின் (பிக்ஷாடனர்) அழகிய கோலத்தையும், தாருகாவனத்துப் பெண்கள் தங்களை மறந்த நிலையில் சிவபெருமானை பின்தொடர்ந்த நிலையையும் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான், அவர் பால் காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அழகிய பதிகம். அப்பர் பிரான் உருவாக்கிய நாயகியை நாம் அப்பர் நாயகி என்றே அழைக்கலாம். அப்பர் நாயகியின் எண்ண ஓட்டங்கள், மிகவும் சுவையாக கீழ்க்கண்ட பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
பாடல் 1
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை
கவர்ந்தார் வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து கனலப் பேசிக் கடியதோர்
விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து
நூல் பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

வண்ணங்கள் = தாளத்தோடு பொருந்தப் பாடும் இசைகள். வலிசெய்து = வலிமை காட்டி, இங்கே ஆடற்கலையின் தனக்கிருந்த திறமை காட்டி என்று கொள்ள வேண்டும். வளை கவர்ந்தார் = காதலன் சிவபெருமான் வளைகளைக் கவர்ந்தார்;. காதலன் பால் கொண்ட அன்பால், அவன் பிரிவு வெகுவாக தலைவியை பாதிக்க, அவளது உடல் மிகவும் இளைத்துவிடுகின்றது. உடல் இளைத்த காரணத்தால், கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் நில்லாமல் கழன்றுவிடுகின்றன. இந்த நிலைக்குத், தன்னை புறக்கணித்த காதலனே காரணம் என்பதால், அவனை வளையல் கவர்ந்த கள்வனாக கருதுவது சங்க இலக்கியங்களின் மரபு. இதே மரபு தேவாரப் பாடல்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

ஞானசம்பந்தர் தனது முதல் பதிகத்தின் (தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம்) இரண்டு பாடல்களில் இன வெள்வளை சோர என் உள்ளம் கவர்ந்த கள்வன் என்று குறிப்பிடுகின்றார். ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இறை என்றால் மணிக்கட்டு என்று பொருள்.

மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி மழு ஏந்தி
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

இந்த தலத்து இறைவனின் திருநாமம் அழகிய நாதர். இதனை அழகியர் என்று சற்றே மாற்றி இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார்.

பொழிப்புரை

தாளத்தோடு பொருந்தும் பாடல்களை பாடிக்கொண்டு, நடனக்கலையில் தனக்கிருந்த திறமையினைக் காட்டிய அழகர் என்பதால், நான் அவர் பால் காதல் கொண்டேன்; ஆனால் அவர் எனது காதலை பொருட்படுத்தாமல் என்னை விட்டு அகன்று சென்றபடியால், நான் வருத்தமடைந்து, உடல் இளைத்தேன்; அதனால் எனது வளையல்கள் எனது கையை விட்டு கழன்றுவிட்டன. இவ்வாறு எனது வளையல்களைக் கவர்ந்த காபாலியார், தனது பார்வையால் எனது இதயத்தைத் துளைத்து, அங்கே ஆசைக் கனலை மூட்டிவிட்டார்; எனது மனம் அவர் பால் நெகிழும் விதமாக ஆசையான வார்த்தைகளையும் பேசினார். ஆனால் இவ்விடத்தில் தங்காமல், விரைந்து செல்லும் காளையின் மீதேறி சென்றுவிட்டார்; நறுமணம் வீசும் திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு, தோலாடைகள் அணிந்து, மார்பில் பூணூல் அணிந்தவாறு வந்த, ஆமாத்தூர் அண்ணலார் போகின்றார், நீர் அனைவரும் வந்து காணீர். அவர் மிகவும் அழகியரே.