24. கருநட்ட கண்டனை - பாடல் 1
சமணர்கள் சூழ்ச்சியால் கடலில் தள்ளிவிடப்பட்ட பின்னர், சிவபிரான் திருவருளாலே அப்பர் பிரான் திருப்பாதிரிப்புலியூர்
(தில்லை – திருவிருத்தம்)
பின்னணி
சமணர்கள் சூழ்ச்சியால் கடலில் தள்ளிவிடப்பட்ட பின்னர், சிவபிரான் திருவருளாலே அப்பர் பிரான் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை ஏறுகின்றார். அங்குள்ள இறைவனின் மீது பதிகம் பாடிய பின்னர் பல திருத்தலங்கள் சென்ற அவர், பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தூங்கானைமாடம் சென்று, அங்கே அவரது விருப்பப்படி, தோளில் சூலமும் இடபமும் பொறிக்கப்பட்ட பின்னர், முதுகுன்றம் வழியாக தில்லை நகர் வந்தடைந்தார். மேலைக் கோபுரத்தைக் கண்ட அப்பர் பிரான், தரையில் வீழ்ந்து வணங்கித் தொழுத பின்னர் உள்ளே சென்று பொன்னம்பலத்தைக் காண்கின்றார். அவரது கண்களிலிருந்து இடைவிடாது கண்ணீர் மழை போல் பொழிய, கைகளை தலை மேல் அஞ்சலியாகக் குவித்து, மனம் முதலிய அகக் கருவிகள் உருக, ஆர்வம் அளவு கடந்து எழ, மறுபடியும் மறுபடியும் கீழே விழுந்து எழுந்தார் என்று சேக்கிழார் பெருமானார் கூறுகின்றார்.
Advertisement
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும்
மெய்யும் தரை மிசை விழுமுன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்
அப்பர் பெருமான் தில்லைக் கூத்தனை நேரில் காண்பதற்கு எத்தனை ஆர்வத்துடன் இருந்தாரோ, அதற்கும் மேல் நடராஜப் பெருமான் அப்பர் பிரானைக் காண்பதற்கு ஆர்வத்துடன் இருந்தார்போலும். அப்பர் பெருமான் கனகசபை எதிரே பலமுறை தொழுது எழுந்தபோது, நீ எப்போது வந்தாய் என்ற குறிப்பு தோன்ற இறைவனது சிரிப்பு காணப்பட்டதாக அப்பர் பெருமான் உணர்ந்தார். இதனை இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் அப்பர் பிரான் பதிவு செய்கின்றார். சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் இந்த நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றார்.
இத்தன்மையர் பல முறையும் தொழுதெழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய்த் தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார்
பாடல் 1
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தை
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந்தீ முழங்க
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்து
பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.
விளக்கம்
இந்த பாடலில் இரண்டு வகையான நடனங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஊழிக் காலத்தில் ஆடும் பெரு நடனமும், தில்லையில் ஆடும் நித்திய நடனமும் கூறப்பட்டுள்ளன.
பொழிப்புரை
தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நிலையான கருமை நிறத்தைத் தனது கழுத்திலே பெற்று நீலகண்டனாய்த் திகழும், உலகங்களுக்கு தலைவனும், தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் வழங்கும் கற்பகமாக உள்ளவனும், தாங்கள் பெற்ற வரத்தினைக் கொண்டு போரில் ஈடுபட்ட திரிபுரத்து அரக்கர்களை அழிக்க வல்லவனும், ஊழிக் காலத்தில் ஊழித்தீ முழங்கி ஒலிக்கும் போது ஆனந்த நடனம் ஆடுபவனும் ஆகிய, தில்லை நகருக்குத் தலைவனான, சிற்றம்பலத்தில் பெருமைமிக்க நடனம் ஆடும் சிவபிரானை வானவர் தலைவன் என்று வாழ்த்துவேன்.
</p>