24. கருநட்ட கண்டனை - பாடல் 2
பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி
பாடல் 2
ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே
விளக்கம்
Advertisement
கன்றிய = சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்யவந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்யவிடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.
பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுதுதான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பதுதான் என்று சொல்லும் அழகும் நாம் ரசிக்கத்தக்கது.
பொழிப்புரை
தனது அடியவனான மார்க்கண்டேயனுக்காக கோபத்துடன் வந்த இயமனையும் காலால் உதைத்து, சிறுவன் மார்க்கண்டேயனைப் காப்பாற்றியவன் சிவபெருமான். அத்தகைய கருணைக் கடவுளை மனம் ஒன்றி நினைத்து வழிபடுவதால் உமக்கு எந்த விதமான ஊனமும் ஏற்படாது; மாறாக அவரது கருணை கிடைக்கும். எனவே நீங்கள் தில்லைச் சிதம்பரம் சென்று நடனம் ஆடும் கூத்தபிரானை வழிபட்டு பயன் அடைவீர்களாக. நடராஜப் பெருமானது புன்முறுவல், நீ என்று வந்தாய் என்று என்னை நோக்கி கேட்பதை உணர்த்துகின்றது.
</p><p align="JUSTIFY"> </p>