முகப்பு
தினம் ஒரு தேவாரம்

42. ஆதியில் பிரமனார் - பாடல் 8

எலிக்கு அருள் செய்தவர் குறுக்கை வீரட்டம்

Updated On : 10 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:08 AM

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

நிறைமறை = நிறைந்த வேதங்கள். கறை நிறத்து எலி = கறுத்த நிறத்தை உடைய எலி; மகாபலியின் வரலாறு இங்கே கூறப்பட்டுள்ளது. விளக்கினைத் தூண்டிய எலி, அருள்பெற்ற நாள் ஒரு மகா சிவராத்திரி என்று சொல்லப்படுகின்றது. விளக்கினைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், தனது மூக்கு சுட்டுவிடவே கோபம் கொண்ட எலி திரியைத் தூண்டியது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கோயிலில் விளக்கு எரிப்பவர்கள், தெரிந்து செய்தாலும், தெரியாது செய்தாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. கோயில் திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உணர்த்தும் அப்பர் பிரானின் நேரிசைப் பாடல் ஒன்றில், கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன் கீழ்க்கண்ட பாடலில் கூறப்படுகின்றது. (4.77.3)

Advertisement

விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

விளக்குதல் என்றால் துடைப்பத்தால் தரையை சுத்தம் செய்தல் என்று பொருள். அலகிடுதல் என்று தேவாரப் பதிகங்களிலும் பெரியபுராணப் பாடல்களிலும் குறிப்பிடப்படும் தொண்டு இதுவே. திருக்கோயிலில் அலகிட்டு சுத்தம் செய்வதால் கிடைக்கும் பலனைவிட பத்து மடங்கு புண்ணியம் கோயில் தரையை மெழுக்கிடுவதால் கிடைக்கும் என்று கூறும் அப்பர் பிரான், திருக்கோயிலில் மலர் தொடுத்து இறைவனுக்கு சூட்டினால் மேலுலகம் செல்லலாம் என்று கூறுகின்றார். திருக்கோயிலில் விளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானத்தைப் பெறுவார்கள். பாடல்களைப் பாடி இறைவனை வழிபடும் அன்பர்கள் எல்லை கடந்த அருள் பெறுவார்கள் என்று கூறுகின்றார். இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துவது, கோயிலின் தரையை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, கோயில் தரையினை மெழுக்கிட்டு சமன் செய்ய வேண்டும். மற்றும் மலர்கள் பறித்து மாலையாக கட்டி இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் திருவிளக்கு ஏற்றி சன்னதியில் இருள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்சொன்ன தொண்டுகளைச் செய்த பின்னர், இறைவனின் புகழ் பாடும் பாடல்கள் பாட வேண்டும் என்று கோயிலில் செய்ய வேண்டிய பணிகளை ஒவ்வொன்றாக உணர்த்துகின்றார்.

திருக்கோயிலில் விளக்கு ஏற்றி அங்கே உள்ள இருளினை அகலச் செய்தால், இறைவன் சிவபிரான் நமது அகத்து இருளினை நீக்கி ஞானம் அளிப்பான் என்று அப்பர் பிரான் கூறியதற்கு மகாபலியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஞானம் பெற்று இருந்தமையால், சிறந்த அரசனாகத் திகழ்ந்து வந்த மகாபலி, மற்ற அரக்கர்களைப் போன்று தனது வலிமை காரணமாக எவரையும் துன்புறுத்தவில்லை. தரும நெறியின் வழியே சென்று ஆட்சி புரிந்தமையால், அவனோடு போரிடுவதற்கு காரணம் ஏதும் தேவர்களுக்கும் திருமாலுக்கும் இல்லாமல் இருந்தது. வாமனராக வந்த திருமாலுக்கு தானம் அளித்த பெருமையும் அவனுக்கு கிடைத்தது. மேலும், இரண்டு அடிகளால் மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் அளந்த, திருமால் மூன்றாவது அடிக்கு இடம் யாது என்று கேட்டபோதும், வருத்தமோ, கோபமோ கொள்ளாமல். தனது தலையில் மூன்றாவது அடியை வைக்குமாறு கோரும் ஞானமும் அவனுக்கு இருந்ததை நாம் அறிவோம். இத்தகைய ஞானம் கிடைத்தது, விளக்கில் இருந்த நெய்யினை குடிக்கச் சென்று, அணைந்து போகும் தருவாயில் இருந்த விளக்கின் கனல் மூக்கினைத் சுட்டமையால், தன்னையும் அறியாமல் திரியைத் தூண்டிவிட்ட செய்கைதானே.

பொழிப்புரை

உலகில் உள்ள அனைத்துப் பொருட்கள் பற்றியும் நிறைவாகச் சொல்லும் வேதங்கள் வழிபட்ட திருமறைக்காடு தலத்தில் சிவபெருமானின் சன்னதியில் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் உள்ள நெய்யினைப் பருகுவதற்காக, கரிய நிறம் கொண்ட எலி ஒன்று சென்றது. அணைய இருந்த நிலையில் இருந்தாலும், எரிந்து கொண்டிருந்த திரி என்பதால் திரியின் சுடர் எலியின் மூக்கினைச் சுட்டது. மூக்கு சுடப்பட்ட எலி, அந்த இடத்தை விட்டுச் சென்றபோது தன்னை அறியாமல், திரியினைத் தூண்டிவிட்டது. தூண்டிவிடப்பட்ட திரி முன்னைவிட மிகவும் பிரகாசமாக எரியவே, அதனால் மகிழ்ந்த சிவபிரான், விளக்கினைத் தூண்டிவிட்ட எலி அடுத்த பிறவியில் மண்ணையும், விண்ணையும் ஆளும் பேற்றினை அளித்தார். இவ்வாறு எலிக்கு அருள் செய்தவர் குறுக்கை வீரட்டம் தலத்தில் உறையும் இறைவன்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.