முகப்பு
தினம் ஒரு தேவாரம்

42. ஆதியில் பிரமனார் - பாடல் 9

கணம்புல்லர் என்ற அடியார்க்கு அருள் செய்த

Updated On : 11 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:08 AM

அணங்கு உமை பாகமாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்த
கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

அணங்கு = பெண் தெய்வம்.

சிவபிரானுக்குப் பணி செய்து வாழ்வதே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று அப்பர் பிரான் இவரை குறிப்பிடுகின்றார். தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் என்ற ஊர் அந்நாளில் இருக்குவேளூர் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமானின் கோயில்களில் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்டு வந்த கணம்புல்லர் என்பவர் இங்கே வாழ்ந்துவந்தார். வறுமை அடைந்த நிலையில் அவர் தில்லை சேர்ந்தார். திருபுலீச்சரம் என்று அழைக்கப்பட்ட கோயிலில் விளக்கு எரிக்கும் பணி செய்வதற்காக தனது இல்லத்தில் உள்ள பொருட்களையெல்லாம் விற்றார். பின்னர் விற்பதற்கு பொருள் ஏதும் இல்லாத நிலையில், கணம்புற்களை அரித்து வந்து அவற்றை விற்று வந்த பணத்தில் விளக்கு எரித்து வந்தார். புல்லை விலை கொடுத்து எவரும் வாங்காத நிலையில், தான் அரிந்த புற்களைக் கொண்டு விளக்கு எரிக்க முற்பட்டார். ஆனால் புற்கள் போதாமையால், தனது முடியை விளக்கில் இட்டு எரித்தார். இத்திருத்தொண்டின் பயனாக, ஞானமும், வீடுபேறும் அடைந்து இறுதியில் சிவலோகம் சென்றார். இந்த வரலாறு பெரியபுராணத்தில் சேக்கிழார் அவர்களால் கூறப்படுகின்றது. பொருவில் தொண்டர் = ஒப்பற்ற திருத்தொண்டர்.

Advertisement

தங்கள் பிரான் திருவுள்ளம் செய்து தலைத் திருவிளக்கு
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிலலோகத்து
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்

பொழிப்புரை

தெய்வமாகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாக வைத்திருக்கும் சிவபிரான், அவரை வணங்குபவரின் துயரங்களைக் போக்கும் நல்ல மருந்தாகச் செயல்படுகின்றார். மேன்மையான திருப்பணி எனப்படும் தவத்தைச் செய்த கணம்புல்லர் என்ற அடியார்க்கு அருள் செய்த குறுக்கை வீரட்டத்துப் பிரான், அவரிடத்தில் அன்பு பூண்டு வழிபடும் அன்பர்களுக்கு நல்ல பண்புகளை அருளுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.