முகப்பு
தினம் ஒரு தேவாரம்

43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 2

தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான்

Updated On : 11 நவம்பர், 2016 at 5:23 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM

வீதி வேல் நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதியே கொளற்பாலது நின்றியூர்
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்த எம் கள்வரே

விளக்கம்

இந்த பாடல் தாருகாவனத்து மகளிர்களின் உள்ளங்களை, பிச்சைப் பெருமானாக சென்றபோது, பெருமான் கொள்ளை கொண்டதை குறிப்பிடும் பாடலாகும். பல தேவாரப் பாடல்களில், பலி ஏற்கச் சென்ற பெருமான், பிச்சை இட வந்த மகளிரின் உள்ளத்தை கொள்ளை கொண்டதாகவும், பெருமானின் பேரில் தாங்கள் கொண்ட காதல் நிறைவேறாததால் ஏக்கம் அடைந்த பெண்கள் உடலிளைத்து வருந்தவே அவர்களது வளையல்கள் கழன்றன என்றும், அதனால் பெருமானை வளையல்கள் கவர்ந்த கள்வன் என்று அழைத்தும் மூவர் பெருமானர்கள் பாடிய பாடல்கள் பல உள்ளன.. ஆன்மாவை பெண்ணாக உருவகித்து, பெருமான் பால் காதல் கொண்ட ஆன்மாவின் உள்ளத்தைத் திருடிய கள்வர் என்று விளக்குவதும் பொருத்தம். வெள்வளை = சங்கு வளை.

Advertisement

சில பதிகங்களில் அனைத்துப் பாடல்களும் பிச்சைப் பெருமானுக்கு பலியிட வந்த பெண்களின் நிலையை உணர்த்துவதாக உள்ளன. அத்தகைய பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதிகத்தின் முதல் பாடல்கள் இங்கே சிந்திக்கப்படுகின்றன.

    எண்    தலம்         தொடக்கச் சொற்கள்
    1.63    பிரமபுரம்        எரியார் மழுவொன்று
    3.104    பரிதிநியமம்    விண் கொண்ட தூமதி
    4.97    நல்லூர்        அட்டுமின் இல் பலிக்கு
    7.36    பைஞ்ஞீலி        காருலாவிய

பிரமபுரம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளப்பட்ட பல்பெயர்ப்பத்து பதிகம் ஒன்றினில் (1.63) முதல் பதினோரு பாடல்கள் பெருமான் பலியேற்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு, அவரது செய்கை நீதிதானா என்ற கேள்வியை சம்பந்தர் கேட்கின்றார். வளையல்கள் அணிந்த இளம்பெண்கள் இட்ட பிச்சையை ஏற்காது, அவர்களது அழகினைக் கவர்ந்து சென்றது நியாயமா என்ற கேள்வியை இந்த பாடலில் சம்பந்தர் கேட்கின்றார்.

இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்கள் கொண்ட பதிகம். ஒவ்வொரு பாடலிலும், சீர்காழியின் ஒவ்வொரு பெயர் குறிப்பிடப்பட்டு அதற்கான காரணமும் விளக்கப்படுகின்றது. இந்த பாடலில் பிரமன் வழிபட்டதால், தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. இடுதலை = கொய்து வைத்துக்கொண்ட மண்டையோடு; வரியார் வளை = கோடுகள் உடைய வளையல்கள்; ஐயம் = பிச்சை; வவ்வுதல் = ஏற்றல்; சரியா நா = உச்சரிப்பு தவறாமல் வேதங்களை ஓதும் நாக்கு; பேணி = விரும்பி வழிபட்ட.

எரியார் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா
வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம் வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே

பதிகத்தின் மற்ற பாடல்களில், பிச்சையிட வந்த பெண்களின் தூக்கத்தைக் கவர்ந்தவன் என்றும், அவர்களுக்கு பிரிவுத் துயர் ஏற்படுத்தியவன் என்றும், அழகினைக் கவர்ந்தவன் என்றும், ஆடைகளை நிலை குலையச் செய்தவன் என்றும், வளையல்களைக் கவர்ந்தவன் என்றும், ஆடைகளைக் கவர்ந்தவன் என்றும் பெருமானை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெண்களின் மிகச் சிறந்த அழகாக அவர்களது கற்பு கருதப்பட்டது. தாருகாவனத்து முனிவர்களின் தவவலிமைக்கு முக்கியமான காரணமாக, அவர்களது மனைவியரின் கற்புநிலை இருந்ததாக சிவபுராணம் கூறுகின்றது. பிச்சைப் பெருமானாக வந்த சிவபெருமானது அழகில் மயங்கி, தங்களின் ஆடை நழுவதையும் உணராமல், தாங்கள் தங்கள் இல்லங்களில் செய்து கொண்டிருந்த செயல்களையும் மறந்து, அவரைப் பின் தொடர்ந்ததும், இடையிலே சிவபெருமான் மறைந்ததால், அவரை அடையமுடியாத ஏக்கத்தில் வருந்தி இளைத்து தங்களது வளையல்கள் கையிலிருந்து கழன்று விழும் நிலையினை அடைந்ததையும், தாருகவனத்து முனிவர்களின் மனைவியர் கற்புநிலை தவறிய செயல்களாக கருதப்பட்டது புராணத்தில் கூறப்படுகின்றது.

வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் பாதையில் பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் அமைந்துள்ள கோயிலில், தெற்கு பிராகாரத்தில் உள்ள பிச்சைப் பெருமானின் சிற்பம் மிகவும் அழகாக இந்த நிலையை சித்தரிக்கின்றது. பெருமானின் அழகினைக் கண்டு ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்று சொல்லவைக்கும் சிற்பம். பெருமானின் பின்னே நான்கு பெண்மணிகள் ஓடி வருவது போன்ற தோற்றத்தை நாம் காணலாம். அந்த பெண்களின் ஆடைகள் நிலை குலைந்த நிலையும், அவர்களது முகத்தில் தென்படும் ஏக்கமும், தாருக வனத்து பெண்களின் நிலையை நமக்கு உணர்த்துகின்றன.

இரண்டு பெண்மணிகள் தங்களது கையில் கரண்டியை ஏந்தியவாறு காட்சி அளிப்பது, தாங்கள் செய்து கொண்டிருந்த சமையல் வேலையை விட்டு விட்டு, அவர்கள் பெருமானைப் பின் தொடர்ந்ததை மிகவும் அழகாக உணர்த்துகின்றது. இந்த நிலைதான், சம்பந்தரின் பதிகத்தில் உணர்த்தப்படுகின்றது. அவர்கள் கற்புநிலை இழந்ததற்கும், அவர்களது வளையல்கள் கழன்றதற்கும், ஆடைகள் நிலை குலைந்தற்கும் பெருமான்தான் காரணம் என்பதால், கற்பினைக் கவர்ந்தவன் என்றும், வளையல்கள் கவர்ந்தவன் என்றும், ஆடைகளைக் கவர்ந்தவன் என்றும் சம்பந்தர் கூறுகின்றார்.

தனது பெருமைக்கு ஒவ்வாத பிச்சை ஏற்றவன் என்றும், கண்ணைக் கவரும் தோற்றப் பொலிவுடன் பிச்சை ஏற்க வந்தவன் என்றும் தனது அழகினைக் கவர்ந்தவன் என்றும் தாருகவனத்துப் பெண்மணி சொல்வது போன்று அமைந்த பாடல், பரிதி நியமம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் (3.104) முதல் பாடல்.

ஏர்=அழகு. இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில், பெருமானது அழகினைக் கண்ட தான் நாணம் அடைந்ததாகவும், தனது உள்ளத்தினை பெருமானிடம் இழந்ததாகவும், தனது சங்கு வளையல்கள் கழன்றதாகவும், தனது முன்கையில் அணிந்திருந்த வளையல்களை பெருமான் கவர்ந்ததாகவும், மணிகள் பதிக்கப்பட்ட தனது ஆடை நெகிழ்ந்ததாகவும், தாமரை போன்ற தனது முகம் சோர்வு அடைந்ததாகவும், பலியிட வந்த பெண்கள் கூறுவதாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம்.

விண் கொண்ட தூமதி சூடி நீடு விரிபுன் சடை தாழப்
பெண் கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலி தேர்ந்து
கண் கொண்ட சாயலோடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும்
பண் கொண்ட வண்டினம் பாடி ஆடும் பரிதிந் நியமமே

தாருகவனத்து மகளிர்கள் முன்னே, பிச்சைப் பெருமானாக சென்று, அவர்களைத் தனது அழகால் மயக்கிய வரலாற்றினை அறிந்த அப்பர் நாயகி, தனது இல்லத்திற்கும் அவ்வாறு இறைவன் பிச்சை ஏற்கும் வேடத்தில் வந்து, அவரது அழகான தோற்றத்தை, தான் காணுமாறு பெருமான் அருள்புரிய வேண்டும் என்று ஏங்குகின்றாள். அந்த ஏக்கத்தில், அவ்வாறு இறைவன் வந்தால், என்ன நடக்கும் என்பதை தனது கற்பனையில் எண்ணி மகிழ்கின்றாள். இவ்வாறு விரிந்த அவளது கற்பனை நல்லூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகமாக (4.97) உருவெடுக்கின்றது. இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், பெண்கள் தன் மீது ஆசைப்படுமாறு பெருமான் பிச்சை ஏற்பது, பண்டைய நாளில் தாருகாவனத்தில் நடந்த நிகழ்ச்சியல்ல என்றும், இன்றும் நடக்கும் செயல் என்றும், நல்லூர் அகத்தே புகுந்தார் என்றும் உரைப்பதன் மூலம், இந்த பதிகத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் அப்பர் நாயகியின் கற்பனை என்பதை நாம் உணரலாம். பெருமான் தனது கண்ணினால் சாடை காட்டியதாக கற்பனை செய்து மகிழுவதை நாம் இந்த பாடலில் உணரலாம்.

பெண்ணிட்டம் பண்டையதன்று இவை பெய்பலிக்கு
                                                                 என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தார் நல்லூர் அகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி நோக்கி நின்று    
கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக்
                                                                                கண்டரே

இந்த பதிகத்தின் முதல் பாடலில், தாருகவனத்து மகளிரின் இல்லங்களின் முன்னே சென்று, பிச்சை ஏற்பது போன்று அவர்களின் வளையல்களைக் கவர்ந்ததன் காரணம் தனக்கு புரியவில்லை என்று கூறும் அப்பர் நாயகி, அந்த பெருமான்தான் நல்லூரில் இடம் பெற்றுள்ளார் என்று கூறுகின்றாள். அட்டுமின் = இடுமின்; கொட்டிய பாணி = ஒலிக்கும் தாளங்கள்; மட்டு = கள், தேன்; அவிழும் = சிந்தும்;

அட்டுமின் இல் பலி என்றென்று அகங்கடை தோறும் வந்து
மட்டவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என் கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
நட்ட நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே

பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தில் (7.36) தாருகவனத்து மகளிர், பிச்சையிட வந்தபோது கூறிய சொற்களாக நயமான கற்பனைகள் அடங்கிய பாடல்கள் கொண்ட பதிகம். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏன் பிச்சை ஏற்க வேண்டும், இந்த வீட்டிலேயே உங்களுக்குத் தேவையான உணவினை ஏற்றுக்கொள்வீராக என்று வேண்டும் பெண்மணியின் சுயநல உணர்வு இந்த பாடலில் வெளிப்படுகின்றது.

பெண்களுக்கு இயற்கையாகவே நகைகளின் மீதுள்ள ஆர்வம் மிகவும் நயமாக இங்கே சுந்தரரால் உணர்த்தப்படுகின்றது. பிச்சை ஏற்க வந்த பெருமானின் கழுத்தினில், நகை ஏதும் உள்ளதா என்று பார்த்த அந்த பெண், முத்து மாலை ஏதும் இன்றி, நாகம் பெருமானது கழுத்தில் திகழ்வதைக் கண்டு, பெருமானே உமக்கு நாகம்தான் முத்து மாலையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றாள்.

காருலாவிய நஞ்சை உண்டு இருள் கண்டர் வெண்
                                              தலையோடு கொண்டு
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓரிடத்திலே
                                                கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும்
                                                   பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே

இந்த நயமான கற்பனை பதிகத்தின் அடுத்த பாடல்களிலும் தொடர்கின்றது. மூசுமூசு என்று ஓசையுடன் சீறும் பாம்பினை அணிந்துகொண்டு பிச்சைக்கு வாராதீர் என்றும், காண்பதற்கு மிகவும் அழகாக விளங்கும் நீர் பேயுடன் ஆடுவதையும் கோவண உடையுடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், நாங்கள் பிச்சையிட வரும்போது உமது உடலில் உள்ள நாகம் படம் எடுத்து ஆடினால் நாங்கள் எவ்வாறு பிச்சையிடுவது என்றும், உமையம்மையை தனது பாதி உடலில் ஏற்றும் கங்கை மங்கையைத் தனது தலையில் கொண்டு நீர் பிச்சைக்கு வந்தால் நாங்கள் பிச்சையிட மாட்டோம் என்றும், எனது வளையலைக் கவர்வதே உமது திட்டமாக இங்கே இரவில் வந்துள்ள நீர் நள்ளிருளில் தனியாக அச்சம் கொள்ளாமல் நடந்து செல்லும் வல்லமை பெற்றவரா என்றும், எலும்பு மாலை அணிந்து, காட்டினை உமது இடமாகக் கொண்டு, மண்டை ஓட்டினைக் கையில் ஏந்தி வந்தால் உம்மை காதலிப்பவர் பெறுவது என்ன என்றும், யானையின் தோலை உடலில் போர்த்தது ஏன் என்றும், நல்ல அணிகலன்களை அணியாமல் எலும்பு மாலையும் ஆமை ஓட்டினையும் அணிந்தது ஏன் என்றும், பாம்பு அணிந்து கொண்டு வருவது தான் பிச்சை ஏற்க வரும் கோலமா என்றும் தாங்கள் பெருமானிடம் கொண்ட காதலினை நயமாக வெளிப் படுத்தும் பாடல்கள் கொண்ட பதிகம்.

இந்த பாடலில் அப்பர் பிரான், ஒரு காதில் வெண்தோடு அணிந்த பெருமான் மற்றொரு காதினில் குழை அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். பெருமானின் திருக்கோலத்தை மாதொரு பாகனாக கண்ட மூவர் முதலிகள், தோடு மற்றும் குழை அணிந்த பெருமான் என்று பல பாடல்களில் குறிப்பிடுகின்றார்கள்.

தோடுடைய செவியன் என்றுதானே முதல் திருமுறையின் முதல் பாடல் தொடங்குகின்றது. இவ்வாறு தோடு மற்றும் குழை ஆகிய இரண்டு ஆபரணங்களை அணிந்தவனாக பெருமானை குறிப்பிடும் பாடல்கள் முப்பதுக்கும் மேல் திருமுறையில் காணப்படுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.30.5) சம்பந்தர் பெருமானை தனது காதுகளில், எடை மிகுந்ததும் பொன்னால் செய்யப்பட்டதும் ஆகிய குழை மற்றும் தோட்டினை அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். நாதன் என்ற சொல், எதுகை நோக்கி நாதான்

என்று நீண்டது. தாதார் மலர்கள் = மகரந்தப் பொடிகள் நிறைந்த மலர்கள்.
காதார் கனபொற்குழை தோடு அது இலங்கத்
தாதார் மலர் தண் சடையே முடித்து
நாதான் உறையும் இடமாவது நாளும்
போதார் பொழில் பூம் புகலி நகர் தானே

குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) சம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார். இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப்படுகின்றது. பாலனம் = காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார்.

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின்முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே

சமணர்களின் சூழ்ச்சியினால், மத யானையைக் கொண்டு தனது தலையை இடற மன்னன் கட்டளையை ஏற்று தன்னை நோக்கி வந்த மதயானையைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல், அருளிய பதிகத்தின் (4.2) ஏழாவது பாடலில், பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான் தோடு மற்றும் குழை அணிந்தவனாக பெருமானைக் காணும் பாடல் இது. குவவு = தோளின் திரட்சியை குறிப்பிடுகின்றது, திரண்ட தோள்களை உடையவன் பெருமான். விலைபெறு சங்கக் குழை = சங்கினால் செய்யப்பட்டதும் விலை உயர்ந்ததும் ஆகிய குழை ஆபரணம். விலை உயர்ந்த குழையினை குறிப்பிடும் பாடலில் விலையே இல்லாத கபாலம் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். விலை மதிக்க முடியாத கபாலம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.

கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு
                                                                           பொற்றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்த்து இலங்கும்
                                                                             மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை
                               மேல்  இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்
                                   வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில்
                             திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்
                             திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு, அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப்படுகின்றன.


இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.

துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில்   
                                                                  துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு
                                                             அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே
                                                              பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா
                                                           அடியேனையும் வேண்டுதியே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக் குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெறுகின்ற பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்..

நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான
                                    ளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக்     
                                       குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ் மகரக்     
                                       குழையும் தோடும் அணிந்த திருக்    
காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ கார்வயல்
                                       சூழ் கானப்பேர் உறை காளையையே

மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல்தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல். இந்த பாடலில் குழையினை ஆண்மகனுக்கு உரிய ஆபரணமாகவும், தோட்டினை பெண்களுக்கு உரிய அணிகலனாகவும் மணிவாசகர் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

இரண்டு செவிகளில் ஒன்றினில் குழை அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் மூலம், மற்றோர் காதினில் தோட்டினை அணிந்தவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல், கருவூர்த் தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் ஒன்பதாவது பாடலாக உள்ளது. களம் = கழுத்து; நீர் = நீர்மை என்பதன் இடைக்குறை, தன்மை; குமுத மலர் போன்று சிவந்த வாயினையும், கருங்குவளை போன்று கரிய கழுத்தினையும், ஒரு செவியினில் குழை ஆபரணத்தையும், சடையில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு நெளிகின்ற பாம்பினையும், இடது பகுதியில் தூய்மையான மேகலையையும், தாமரை மலர் போன்ற முகத்தினையும் கண்களையும். பொன்மயமான பாதுகைகளையும், களங்கமற்ற தன்மையையும் கொண்டவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது.

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே
                                                          இருசெவி ஒரு பால்
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே
                                                          பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி
                                                            நிலை நீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்
                                                           சரமே

பதினோராம் திருமுறை கோயில் நான்மணி மாலை பதிகத்தின் ஒரு பாடலில், பட்டினத்தார், இரண்டு விதமான திருமேனிகளை கொண்டவனாக விளங்கும் பெருமான் என்று குறிப்பிடுகையில், ஒரு பகுதியில் தோட்டினையும் மற்றோர் பகுதியில் குழையினையும் அணிந்தவன் என்று கூறுகின்றார்.

ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபால் பட்ட மேனி எந்தை

பதினோராம் திருமுறை கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் ஒரு பாடலில், ஒரு காதில் குழையையும் மற்றோர் காதினில் தோட்டினையும் உடையவன் என்று நம்பியாண்டார் நம்பி கூறுகின்றார். இந்த பாடல் அகத் துறை அமைப்பில் அமைந்தது. கோஷன் என்ற சொல் கோடன் என்று எதுகை கருதி திரிந்துள்ளது. விசயனுக்கு பாசுபத அத்திரம் அளிப்பதற்கு முன்னர், மிகுந்த ஆரவாரத்துடன் விவாதம் செய்ததை நம்பியாண்டார் நம்பி அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார். தோடன் = தோட்டினை அணிந்தவன்; சேடன் = பெருமை உடையவன்.

வேடன் என்றாள் வில்விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றால் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகுசீர் தில்லை அம்பலத்துள் ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கைச் சரி வளை சிந்தினவே

பொழிப்புரை

வேதங்கள் ஓதியவாறு, வெண் தோட்டினையும் வெண் குழையையும் காதினில் அணிந்துகொண்டு, பிச்சை ஏற்க வந்த நின்றியூர் தலத்து இறைவனே, உமக்கு பிச்சை இடுவதற்காக வீதிக்கு வந்த பெண்களின் உள்ளத்தையும் அவர்கள் அணிந்திருந்த சங்கு வளையல்களையும் நீர் கொள்ளைகொண்ட கள்வராக திகழ்ந்தது உமக்கு உகந்த செயலா, அவ்வாறு செய்தது நீதியா, நீர் பதில் கூற வேண்டும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.