43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 3
வினைகளும் வினைகளால் ஏற்படும் தீமைகளும் பற்றாது
புற்றினார் அரவம் புலித் தோல் மிசைச்
சுற்றினார் சுண்ணப் போர்வை கொண்டார் சுடர்
நெற்றிக் கண்ணுடையார் அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா வினை பாவமே
விளக்கம்
அமர் = எழுந்தருளியுள்ள. சூரியன் மற்றும் சந்திரன் பெருமானின் கண்களாகவும் அக்னி பெருமானின் நெற்றிக் கண்ணாகவும் உள்ளன என்று கூறுவார்கள். இந்த செய்தியை உணர்த்தும் வண்ணம் சுடர் நெற்றிக்கண் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சுண்ணப் போர்வை = போர்வை போர்த்தது போன்று மேனி எங்கும் வெண்ணீறு பூசிய தன்மை.
பொழிப்புரை
புற்றில் வாழும் பாம்பினைத் தான் அணிந்துள்ள புலித்தோலின் மீது சுற்றிவரும், போர்வை படர்ந்தது போன்று தனது மேனி எங்கும் திருநீற்றினைப் பூசியவரும்,
நெருப்புச் சுடராகிய நெற்றிக் கண்ணினை உடையவரும் ஆகிய பெருமானின் எழுந்தருளியுள்ள நின்றியூர் தலத்தினை, பற்றிய மாந்தர்களை, வினைகளும் வினைகளால் ஏற்படும் தீமைகளும் பற்றாது.
Advertisement