முகப்பு
தினம் ஒரு தேவாரம்

44. முற்றுணை ஆயினானை - பாடல் 1

ஞானசம்பந்தப் பெருமானை சீர்காழியில்

Updated On : 23 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:11 AM

(நனிபள்ளி – நேரிசை)

முன்னுரை

ஞானசம்பந்தப் பெருமானை சீர்காழியில் சந்தித்து, பல நாட்கள் அங்கே தங்கிய அப்பர் பிரான் அதன் பின்னர், காவிரி நதியின் இரு கரைகளிலும் உள்ள மற்ற தலங்களைக் காண ஆவல் கொண்டார். சம்பந்தப் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு, புன்கூர், நீடூர், நனிப்பள்ளி, செம்பொன்பள்ளி வழியாக ஆவடுதுறை செல்கின்றார். நனிபள்ளி தலத்து இறைவனின் பெயர் நற்றுணை நாதர். சமணர்களால் தனக்கு ஏற்பட்ட பல இன்னல்களிலிருந்து, தன்னைக் காப்பற்றிய இறைவனை, சொற்றுணை வேதியன் என்றும் தோன்றாத்துணை என்றும் அழைத்த அப்பர் பிரான், இந்த தலத்து இறைவனை நற்றுணை நாதர் என்று அழைக்கின்றார். இந்த தலத்தின் மீது அருளிய பதிகங்களில், சம்பந்தரும் சுந்தரரும் தலத்து இறைவனின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனவே நற்றுணை நாதர் என்ற பெயர், அப்பர் பிரானின் காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயரா, அல்லவா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த தலத்தின் அருளிய பதிகத்தின் கடைக்காப்பில், சம்பந்தப் பெருமான் இந்த தலத்து இறைவனை நினைத்து வழிபட்டால், நமது வினைகள் கெடும் என்றும், இது தனது ஆணை என்றும் கூறுகின்றார். எனவே இந்த தலத்து இறைவன் நமக்குத் துணையாக இருந்து காப்பாற்றுவார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. சம்பந்தர் பதிகத்தின் (2.84) கடைப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அத்தர் என்றால் தந்தை என்று பொருள். பியன் என்றால் தோள் என்று பொருள்.

Advertisement

கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
                                                                                     என்று கருதப்
படு பொருள் ஆறும் நாலும் உளதாக வைத்த பதியான
                                                                             ஞான முனிவன்
இடு பறை ஒன்ற அத்தர் பியன் மேல் இருந்து இன்
                                                       இசையால் உரைத்த பனுவல்
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை
                                                         கெடுதல் ஆணை நமதே

தனக்குத் துணையாக இருந்த இறைவனை முற்றுணை என்றும் நற்றுணை என்றும் குறிப்பிட்டு பதிகத்தைத் தொடங்கும் அப்பர் பிரான், சிறந்த துணையாக இருந்து தேவர்களையும் அசுரர்களையும் எவ்வாறு ஆலகால விடத்திலிருந்து காப்பாற்றினார் என்றும் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். மேலும் சமணர்கள் அளித்த விடத்திலிருந்து தன்னை காப்பாற்றியதையும், சிலந்தியை அரசனாக்கிய நிகழ்ச்சியையும் இங்கே குறிப்பிடுகின்றார்.

முற்றுணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சொற்றுணை ஆயினானைச் சோதியை ஆதரித்து
உற்று உணர்ந்து உருகி ஊறி உள்கசிவு உடையவர்க்கு
நற்றுணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே

விளக்கம்

முற்றுணை = முன்னே சென்று நிற்கும் துணை; சமணர்களால் தனக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து, தன்னைக் காப்பாற்றிய இறைவனை அப்பர் பிரான் நினைத்துப் பார்க்கின்றார். சுண்ணாம்புக் காளவாயினை குளிர்ந்த அறையாக மாற்றியது, நஞ்சு கலந்த சோற்றினை அமுதமாக மாற்றியது, தலையினை இடறிக் கொல்ல வந்த யானையை தன்னை வலம் வந்து வணங்கச் செய்தது, தன்னுடன் கட்டப்பட்ட கல்லினை கடலில் மிதக்கச் செய்தது, என்று ஒவ்வொரு சமயத்திலும், சமணர்களின் கொலை முயற்சிகளைத் தான் எதிர்கொள்வதற்கு முன்னமே, அந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இறைவன் அருள் புரிந்ததை நினைத்துப் பார்க்கும் அப்பர் பிரான், சிவபெருமானை, மிகவும் பொருத்தமாக முற்றுணை என்று அழைக்கின்றார். முற்றுணை என்பதற்கு முதன்மையான துணை என்றும் பொருள் கொள்ளலாம்.

சொல் என்பது வேதத்தில் காணப்படும் சொற்களை குறிக்கும். வேதங்களை அருளிய முதல்வன், சிவபெருமானை அன்றி, வேறு எவர் அந்த சொற்களுக்குத் துணையாக இருக்க முடியும். சொற்றுணை என்று அப்பர் பிரான் அழைப்பது, நமக்கு அவரது நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலை (4.12.1) நினைவூட்டும். இந்த பாடலில் தான் கையாண்ட சொற்களை, மேற்கண்ட பாடலில் பயன்படுத்தி உள்ள நிலை நமக்கு, அப்பர் பிரான் இந்த பதிகம் அருளியபோது. சமணர்களின் தொல்லைகளிலிருந்து இறைவன் தன்னைக் காப்பாற்றிய கருணைச் செயல்கள் நினைவுக்கு வந்ததை நாம் உணரலாம் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே

பொழிப்புரை

அடியார்கள் எதிர்கொள்ள இருக்கும் இடர்களைக் களைவதற்காக, அந்த இடர்கள் அடியார்களைத் தீண்டும் முன்னரே, சென்று அடியார்களுக்குத் துணையாக இருப்பவனும், ஆதி தேவர்களாகிய, பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் முதல்வனாக இருப்பவனும், வேதங்களில் உள்ள சொற்களுக்குத் துணையாக இருப்பவனும், சோதியாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை, மிகுந்த விருப்பத்துடன் உணர்ந்து, உள்ளம் உருகி, உள்ளத்தில் அன்பு கசிய வழிபடும் அடியார்களுக்கு, நல்ல துணையாக விளங்குபவர் நனிபள்ளி தலத்தில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.