முகப்பு
தினம் ஒரு தேவாரம்

37. சொல்லானைப் பொருளானை  - பாடல் 3

மூப்பு அடையாமல் என்றும் இளையவனாக

Updated On : 22 செப்டம்பர், 2016 at 5:48 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM

பாடல் 3


    மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல்     
                                                     நடுவு முடிவு ஆனானைத்
    தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத் திசைமுகன் தன்
                                                   சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை
    ஆவாத அடலேறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு
                                                   நினைதோறும் அண்ணிக்கின்ற
    நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர்     
                                               நன்னகரில் கண்டேன் நானே

விளக்கம்

Advertisement

மூவாது = மூப்பு அடையாது. அனைவர்க்கும் முன்னே தோன்றினாலும், மூப்பு அடையாமல் என்றும் இளையவனாக காட்சி தரும் இறைவன் என்று கூறுகின்றார். முடிவு

என்பது இல்லாத பெருமான், வாதம் = காற்று. தனது நாவாகவும், நாவில் வரும் சொற்களாகவும் இருப்பவன் சிவபெருமான் என்று சொல்லுவதன் மூலம், தான் பாடிய

தேவாரப் பாடல்களை, தனது நாவினில் அமர்ந்து பாட வைத்தவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு ஞானசம்பந்தப் பெருமான்,

இலம்பையங்கோட்டூர் பதிகத்தில் கூறுவதை நினைவூட்டுகின்றது. தான் பாடிய பாடல்கள், தனது உரை அல்லவென்றும், சிவபெருமானின் உரைகள் என்பதையும் சம்பந்தர்

இந்த பதிகத்தின் (1.76) பாடல்களில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை

அமைப்பில் அமைந்தவை. நிருமலன்=நின்மலன், இயற்கையாகவே மலங்களின் பிணைப்பிலிருந்து நீங்கியவன். தனது உள்ளத்தினைக் கவர்ந்த பெருமான், தன்னை

என்னுடன் சேர்த்துக் கொள்ளாமல், தனியே தவிக்க விடுவது தகுமா என்ற கேள்வி இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் எழுப்பப்படுகின்றது.

    திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள்     
                    தலைமகன் திருக்கழிப்பாலை
    நிருமலன் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு
                        உகந்து ஏறிய நிமலன்
    கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க் குவளை கதிர் முளை
                        இளையவர் மதி முகத்து உலவும்
    இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்     
                பேணி என் எழில் கொள்வது இயல்பே

பொழிப்புரை

யாவர்க்கும் முன்னே தோன்றிய பெருமான், மூப்பு அடையாமல் என்றும் இளைமையான தோற்றத்துடன் இருக்கின்றார். அனைத்து உயிர்களுக்கும் முன்னே

தோன்றியவனாகவும் அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருப்பவனாகவும் உள்ளவன். அவன் இந்த நிலைகளிலும், இந்த இரண்டு நிலைகளின் இடையேயும்

தோன்றும் உயிர்களுடன் கலந்து இருந்து கருணை செய்பவன் ஆவான். தேவர்களுக்குத் தலைவன் என்று கருதப்படும் இந்திரன், திருமால் மற்றும் பிரமனுக்குத் தலைவனாக

விளங்குபவன் சிவபெருமான்; பிரமன் மிகுந்த ஆணவத்துடன் இருந்தபோது, அவனது ஐந்து தலைகளில் ஒன்றினை சிதைத்து நான்முகனாக அவனை மாற்றியவன்

சிவபெருமான்; காற்றினைப் போன்று விரைந்து செல்லும் எருதினை வாகனமாகக் கொண்டவன் சிவபெருமான்; அடியேன் நினைக்கும் போதெல்லாம் எனது நாவினில்

தித்திக்கும் சுவையாக இருப்பவன் சிவபெருமான். எனது நாவாகவும் என்னால் சொல்லப்படும் சொற்களாகவும் உள்ளவன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய

பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.