37. சொல்லானைப் பொருளானை - பாடல் 5
மன்மதனை அழித்து மகிழ்ந்த சிவபெருமான்
பாடல் 5
புரை உடைய கரி உரிவைப் போர்வையானைப் புரிசடை
மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை
விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு
செம்மேனி விரவினானை
வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை
வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர்
நன்னகரில் கண்டேன் நானே
விளக்கம்
Advertisement
சென்ற பாடலில் மன்மதனை அழித்து மகிழ்ந்த சிவபெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், மன்மதன் மலர்க் கணைகளை தன் மீது தொடுத்த பின்னர் உமையம்மையை
திருமணம் செய்து கொண்டவர் என்று கூறிய அப்பர் பிரான், மன்மதனின் மலர்க் கணைகளுக்கும், சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதற்கும் தொடர்பு ஏதும்
இல்லை என்று இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம்
செய்துகொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு கூறப்படுகின்றது. புரை = துளை. துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித
வாழக்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டக்கின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும்
பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய்
என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
துளை உடைய துதிக்கையைக் கொண்ட யானையின் தோலினை போர்வையாக போர்த்தவன் சிவபெருமான்; முறுக்கப்பட்ட சடையின் உள்ளே கங்கை நதியை அடைத்து
வைத்த புனிதன் சிவபெருமான்; நறுமணம் கமழும் வெள்ளெருக்குப் பூக்கள் கொண்ட மாலையினை அணிந்தவன் சிவபெருமான்; அவன் சிவந்த தனது மேனியில்
திருநீற்றை பூசியதால், சிவப்பு நிறமும் வெண்மை நிறமும் கலந்த மேனியனாக காணப்படுகின்றான்; இமயமலையின் அரசனாகிய பர்வத மன்னனின் மகளாகிய
உமையம்மை செய்த தவத்தினால் மகிழ்ந்து அவளைத் திருமணம் செய்து கொண்டவன் சிவபெருமான்; அனைத்து உயிர்களையும் தொடர்ந்து ஆட்கொள்ளும் பிறவிப்
பிணிக்கு மருந்தாக செயல்பட்டு அந்த பிறவிப்பிணி நீங்குமாறு அருள் செய்பவன் சிவபெருமான்; வெண்மை நிறம் கொண்ட இடபத்தினை தனது இலச்சினையாக கோடியில்
ஏந்திய நாதன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.