56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 10
உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியில்
கல்லூர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம்
காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு
ஆறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணி மலையின் மேலிருந்து வாளரக்கர் கோன்
தலையை மாளச்செற்றுப்
பல்லூர் பலி திரிவார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
பந்தணைநல்லூராரே
விளக்கம்
கல்லூர் கடி மதில்கள் = கற்கள் நிறைந்ததுபோன்று மிகுந்த வலிமையுடன் காணப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகள். மல்லூர் = வலிமை மிகுந்த.
Advertisement
பொழிப்புரை
தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் கட்டப்பட்டு இருந்தாலும், கற்களால் கட்டப்பட்டது போன்று மிகுந்த வலிமையுடன் இருந்த மூன்று கோட்டைகளையும் ஓரே அம்பினை எய்தி தீக்கு இரையாக்கியவர் சிவபெருமான். இறைவனாகிய தான்தான் உண்மையான மெய்ப்பொருள் என்று உணரும் அறிவினை உடைய அடியார்களின் ஞானமாகத் திகழும் பெருமான், நான்மறைகளையும் அவற்றின் அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் மொழிந்த நாவினை உடையவர் ஆவார். வலிமை மிகுந்த கயிலை மலையின் மேல் அமர்ந்தவாறே, தான் சென்ற வழியில் குறுக்கிட்டது என்று கருதி அந்த மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் தலைகள் சிதறுமாறு, தனது கால் பெருவிரலால் கயிலை மலையினை அழுத்திய பெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.
முடிவுரை
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான், பல ஊர்களிலும் திரிந்து பலி ஏற்றதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பலி என்ற சொல் வடமொழிச் சொல். இதற்கு வணக்கத்துடன் பணிவுடன் ஒருவருக்கு அளிக்கப்படும் பொருள் என்று அர்த்தம். பிச்சை என்ற சொல்லுக்கு, இல்லை என்று வருவோருக்கு அளிப்பது என்று பொருள். பிச்சை என்ற செய்கையுடன் பணிவும் வணக்கமும் கலந்திருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. கடவுளுக்கு அளிக்கப்படும் நிவேதனம் என்ற பொருளையும் பலி என்ற வடமொழிச் சொல் உணர்த்துகின்றது. பெருமான் ஏற்றது பிச்சை அல்ல, பலி தான் என்பதை வலியுறுத்தும் முகமாக, மூவர் முதலிகள், பிச்சை என்ற சொல்லுடன் ஒப்பிடுகையில் பலி என்ற சொல்லினை மிகவும் அதிகமாக இடங்களில் கையாண்டுள்ளனர்.
சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி = இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன். நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்துவிட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள்.
இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக்கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள்புரிகின்றான்.
பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், சிவபெருமான் பலியிடுவார் தம் இல்லத்திற்கு சென்று அவர்கள் தரும் மூன்று பொருட்களைப் பெற்றுக் கொள்வதாக கூறுகின்றார். மூன்று பொருட்கள் எவையெவை என்பது பற்றி உரை ஆசிரியர்கள் பலவாறு பொருள் தருகின்றார்கள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்கள், தங்களது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் பாத்திரத்தில் இட்டதாக கூறுவது ஒரு விளக்கம். திருமூலரின் திருமந்திரம் உணர்த்தும் பொருளின் பின்னணியில், நாம் இந்த பதிகத்தை காண்கையில், அந்த மூன்று பொருட்கள், நாம் பெருமானிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்பதை உணரலாம். உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக்கொண்டு, முக்தி நிலை பெற்றுத் தன்னை வந்தடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம் என்பதால், உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு ஊர் தோறும் பிச்சைக்கு செல்கின்றான் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. பல திருமுறை பாடல்களில், பெருமான் இச்சையுடன் பிச்சை ஏற்பதாக, இந்த பின்னணியில் கூறப்படுகின்றது. கடை = வீட்டு வாயிற்படி. கலிக் கச்சி = ஆரவாரம் மிகுந்த கச்சி நகரம். பொன் = பொன் போன்ற நிறத்தில் உள்ள கொன்றை மலர்கள்.
சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்
புடையே பொன் மலரும் கம்பிக் கரை ஏகம்பம்
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே
பிச்சைப் பெருமானாக, சிவபெருமான் தாருகாவனத்திற்கு சென்றதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பலி ஏற்பதை, தாருகவனத்துடன் நிறுத்தவில்லை. இன்றும் பலி ஏற்பதற்காக ஊர் தோறும் திரிகின்றார் என்பதால் தான், உலகெங்கும் பலி ஏற்கத் திரிபவன் என்றும், நாள்தோறும் பலி ஏற்கத் திரிபவன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. எனவே, பிச்சைப் பாத்திரத்துடன் நமக்கு எதிரே பெருமான் தோன்றாவிடினும் அவ் று அவர் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு, அவரிடம் உள்ள கலனில் நமது மலங்களை இடுவதாக நினைத்துக்கொண்டு, நமது மலங்களை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமக்கு உணர்த்தப்படும் கருத்து. நாள்தோறும் பெருமான் பலி இடுமின் என்று பெருமான் நம்மைத் தேடி வருவதை உணர்த்தும் சம்பந்தரின் பாடல் (3.56.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நளிர் திங்கள் = குளிர்ந்த திங்கள்.
நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்தங்கு
அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல
இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே
இவ்வாறு மக்களுக்கு நலம் செய்வதற்காக பெருமான் பிச்சை ஏற்கின்றான் என்ற செய்தியை சம்பந்தர் கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.6) கூறுகின்றார்.
நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்து எய்தும் மாதவத்தோர்க்கே
அப்பர் பெருமானும் மற்ற அருளாளர்களும் காட்டிய வழியில், நாம் நமது மலங்களை அறவே நீக்கி, நம்மைத் தூய்மைபடுத்திக்கொண்டு, இறையுணர்வினை வளர்த்துக்கொள்வதன் மூலம், நமது உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற வழிவகுப்போமாக.